

பொதுவாக வெற்றி என்றால் நமக்கு என்ன தோன்றும். ஒரு போட்டியிலே மற்றவர்களை தோற்கடித்து நாம் ஜெயித்தோமேயானால் அதற்கு பெயர் வெற்றி. அதேபோல் நம்முடைய வாழ்க்கையிலும் பருவ நிலைக்கு ஏற்றவாறு வெற்றி தோல்வி வந்துகொண்டே இருக்கும்.
குழந்தை பருவத்தில் இருந்து ஆரம்பிப்போம். ஒரு குழந்தை தாயின் வயிற்றுக்குள்ளே இருந்து வெளியே வரும்போது அந்த பெற்றோர்களுக்கும் ஒரு வெற்றி, மருத்துவர்களக்கும் வெற்றி. பெற்றோர்களுக்கு என்ன வெற்றி என்றால் நாம் ஒரு வழியாக ஒரு குழந்தையை பெற்று எடுத்து தாய் தந்தையர் ஆகிவிட்டோம் என்ற பெருமை. மருத்துவரை பொருத்தவரை நல்லபடியாக ஒரு குழந்தையையும் தாயையும் காப்பாற்றி இருக்கிறோம் என்ற பெருமை.
ஆகவே வெற்றி ஒன்றுதான், ஆனால், வெவ்வேறு விதங்களில். சரி, இந்த வெற்றி இவர்களுக்கும் மட்டும் இல்லை, பிறந்த அந்த குழந்தைக்கும்தான் வெற்றி. அம்மாடி, ஒரு வழியாக வயிற்றில் இருந்து வெளியே வந்துவிட்டோம் காலை மடக்கி படுத்து அலுத்து போய்விட்டது என்று அந்த குழந்தையும் நினைத்திருக்கும்.
இப்போது அந்த குழந்தை எடுத்து வைக்கும் ஒரு ஒரு அடியிலுமே ஒரு வெற்றி இருக்கிறது. ஒரு வழியாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு அந்த குழந்தை பள்ளிக்கூடத்திற்குப் போகும். ஒவ்வொரு வகுப்பிலும் தேர்ச்சி அடைந்து முன்னேறுவதும் ஒரு வெற்றி.
ஒரு வழியாக தேர்ச்சியிலே வெற்றி பெற்று அந்த குழந்தைகள் பெரியவர்களாகி பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்வார்கள். கல்லூரியில் வெற்றி பெற்ற பின்பு அவர்கள் வேலைக்கு முயற்சி செய்வார்கள். இன்டர்வ்யூவிலும் டெஸ்டிலும் வெற்றி பெற்று ஒரு வேலையின் உள்ளே நுழைவார்கள். அந்த வேலையில் இவர்களுக்காக கொடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்குள் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்று பதிவு உயர்வையும் ஊதி ஊதிய உயர்வையும் பெறுவார்கள். பிறகு திருமணம் என்ற பரீட்சையில் வெற்றி பெற்று கல்யாணமும் நடந்துவிடும்.
இப்படி வெற்றி என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான படியாகும். ஒவ்வொரு வெற்றியிலும் நாம் ஒரு படியை தாண்டிக்கொண்டு முன்னேறி செல்கிறோம்.
சரி, இந்த வெற்றியானது அடுத்தவர்களை பொறுத்தவரையிலோ அல்லது நமக்கு கீழ் நிலையில் இருப்பவர்களுக்கோ அல்லது நம்மை விட சிறு வயதில் இருப்பவர்களுக்கோ எப்படி இருக்கும்? இந்தக் கேள்விக்கான பதில் தெரியுமா உங்களுக்கு?
நம்முடைய ஒவ்வொரு வெற்றியும் அவர்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுக்கும். எப்படிப்பட்ட மாற்றம் தெரியுமா? நம்மைவிட சிறு வயதில் இருப்பவர்களுக்கும் கீழ் நிலையில் இருப்பவர்களுக்கும் நம்முடைய வெற்றியானது அவர்களிடம் இருக்கின்ற நம்மால் முடியாது என்கிற எதிர்மறையான எண்ணத்தை மாற்றி முடியும் என்கிற நேர்மறையான எண்ணத்தை ஊக்குவிக்கும்.
நம்முடைய வெற்றியால் நமக்கு சந்தோஷம்தான் கிடைக்கும். ஆனால், அவர்களுக்கோ அந்த வெற்றி ஊக்கமளிக்கும். நம்முடைய வெற்றி அடுத்தவர்களுக்கு ஒரு சிறந்த டானிக்காக கூட இருக்கும். உங்களுடைய வெற்றி அடுத்தவர்களுக்கு ஒரு ஊக்கத்திற்கான டானிக் என்பதை மறக்காதீர்கள். ஆகவே நீங்கள் வெற்றி பெற்றதை எல்லா நேரத்திலும் அடுத்தவர்களோடு பகிர தயங்காதீர்கள். அது அவர்களுடைய எணணத்தை மாற்றி அவர்களையும் வெற்றி பெற வைக்கலாம்.