வெற்றி தரும் மனசாட்சியின் குரல்!

Motivation Image
Motivation Imagepixabay.com

''உண்மையில்லை என்று தெரிந்த ஒரு வழக்கையும் நான் வாதத்துக்கு ஏற்றால், ஒவ்வொரு வினாடியும் நான் பொய்யன் என்பதை என் மனசாட்சி உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கும்’’ - ஆபிரகாம் லிங்கன்.

அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன்பு தத்துவமேதை ஆபிராகம் லிங்கன் வழக்கறிஞராகத் திகழ்ந்தார் என்பதை அறிவோம். வழக்குகளில் அவர் கையாண்ட நேர்மையால் புகழ்பெற்ற வழக்கறிஞராக விளங்கினார். உண்மைக்குப் புறம்பான எந்த வழக்கையும் ஏற்பதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

இது குறித்து சக நண்பர்கள் கேட்டபோது அவர் சொன்ன காரணமே மேலே சொன்னது. ஆம். மனசாட்சிக்குப் புறம்பான செயல்கள் பொய்யின் பிம்பத்தை ஒருவருக்கு தந்துவிடும் என்பதை அழகாக சுட்டிக்காட்டி உள்ளார் ஆபிரகாம் லிங்கன்.

"மனசாட்சிக்கு பயந்து நடந்துக்கொள்ளுங்கள்''. "மனசாட்சி இருந்தால் இப்படிச் செய்வீர்களா...?" "நீங்களே உங்க மனசாட்சியைக் கேளுங்கள்" போன்ற வாசகங்களை பாமர மக்கள் முதல் படித்த அறிவார்ந்த மனிதர்கள் வரை அன்றாட வாழ்வில் அதிகமாக கேட்பதாக காண்கிறோம். அந்த மனசாட்சி என்றால் என்ன?

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் “அது சரியில்லை என்று என் மனதிற்குத் தெரியும்,” அல்லது “நீங்க சொல்வதை என்னால் செய்ய முடியாது...! அது தவறென்று ஏதோவொன்று எனக்குள் சொல்லிக் கிட்டே இருக்கின்றது” என்று நீங்கள் எப்போதாவது கூறியிருந்தால் அதுவே உங்கள் மனசாட்சியின் குரல்.

உதாரணமாக வீட்டில் குப்பைக்கூடை நிரம்பி வழிகிறது. ஏதோ ஒரு காரணமாக குப்பை வண்டியைத் தவறவிடுகிறீர்கள். அந்தக் குப்பையை தெரு ஓரத்தில் சென்று யாரும் கவனிக்காத நேரத்தில் கொட்டுகிறீர்கள். அப்போது இது சரியா எனும் ஒரு குரல் கேட்கும். ஆம். யாரும் கவனிக்கவில்லை என்னும் நம் செயல்களை எந்நேரமும் கவனித்துக் கொண்டிருக்கும் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டும். இல்லை பின் விளைவான குற்ற உணர்வில் சிக்கித் தவிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உண்ண வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா?
Motivation Image

இந்த மனித வாழ்வில் நம் மனசாட்சி மட்டுமே நம் உண்மையான முகம் எனலாம். கேள்வி எழுப்பும் மனசாட்சி நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய பெரிதும் உதவுகிறது. ஆகவேதான்
நம் மனசாட்சி தரும் எச்சரிக்கையை அசட்டை செய்தால் நமது நிம்மதி பறிபோகிறது. நம் அனைவருக்கும் மிகப்பெரிய நீதிபதி நம் மனசாட்சிதான்.

இது சரி. அது தவறு என்று  சொல்லுகிற நம் செயல்கள் அடிப்படையில் நம்மை ஆதரிக்கின்ற அல்லது நம்மை குற்றப்படுத்துகின்ற ஓர் உணர்வான  மனசாட்சி என்பது நமக்குள் இயல்பாகவே இருக்கிறது. நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டுமென்றால், நாம் அதற்கு செவி சாய்க்க வேண்டும். நம்முடைய போக்கில் ஏதேனும் தவறு இருக்கிறதென நம் மனசாட்சி அல்லது உள்மனம் நமக்கு எச்சரிக்கை கொடுக்கலாம். அந்த எச்சரிக்கைக்கு செவிசாய்ப்பது நமது கடமை. மீறி செய்யும் தவறான செயலால் வரும் கெட்ட விளைவுகளைத் தவிர்ப்பதுடன் நம்முடைய மனசாட்சி தொடர்ந்து தகுந்த முறையில் நாம் வெற்றியை நோக்கி செயல்படுவதற்கும் உதவுகிறது.

மனசாட்சியை மதித்து அதன் வழி நடப்போருக்கு வெற்றியுடன் வாழ்வும் சுகமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com