
உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுமே ஏதாவது ஒன்றிற்கு ஆசைப்படுகிறார்கள். ஐந்தறிவுள்ள ஜீவன்களாக இருந்தாலும் சரி ஆறறிவுள்ள மனிதர்களாக இருந்தாலும் சரி ஆசையில்லாதவர்கள் என்று இந்த உலகத்தில் இல்லவே இல்லை. ஆனால் உங்கள் ஆசையானது நல்ல ஆசையாக இருந்தால் அதில் தவறில்லை.
பிறந்தது முதல் ஏதாவது ஒன்றுக்கு நாம் ஆசைப் படுகிறோம். குழந்தை பருவத்தில் பார்த்ததை எல்லாம் வேண்டுமென்று கேட்கிறோம் பெற்றோர்களிடம். அவர்களும் நாம் கேட்டதை எல்லாம் உடனே வாங்கி தருகிறார்கள். வளர வளர நம்முடைய ஆசைக்கு எல்லையே இல்லாமல் போய்விடுகிறது. எதைப் பார்த்தாலும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் உண்டாகிறது.
இந்த ஆசையில் இரண்டு விதம் இருக்கிறது நல்ல ஆசை மற்றும் கெட்ட ஆசை. அதென்ன நல்ல ஆசை கெட்ட ஆசை என்று கேட்கிறீர்களா?
ஆசை இருந்தால்தான் சில சமயங்களில் ஒரு லட்சியத்தை நாம் அடையமுடியும். ஆனால் அதற்காக டிவி வாங்க வேண்டும் கார் வாங்க வேண்டும் பங்களா வாங்க வேண்டும் என்றெல்லாம் அடுக்கடுக்காக ஆசைகளை வைத்து கொண்டால் நம்மிடம் மிஞ்சுவது நோய்தான். இந்த ஆசைக்கான காரணம் நம்முடைய எண்ணங்கள் தான்.
உதாரணத்திற்கு ஒரு மாணவன் படித்துக் கொண்டிருக்கிறான். அவனிடம் சென்று உனக்கு என்ன ஆசை என்று கேட்கும்போது அவன் எனக்கு படித்து ஒரு மருத்துவராக வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று கூறகிறான் என்று வைத்து கொள்வோம். அதில் நியாயம் இருக்கிறது அர்த்தம் இருக்கிறது எண்ணமும் நல்ல எண்ணம்தான். இதைபோல ஏதாவது ஒரு இலக்கை நோக்கி குறி வைத்தால்தான் மாணவர்கள் முன்னேற முடியும். அந்த ஆசை நியாயமானது. இன்னும் சில பேர்தான் பெரியவனானதும், தன் தாய் தந்தையரை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் இதுதான் என் ஆசை என்று கூறுவார்கள். இதுவும் நல்ல எண்ணம் கொண்ட ஆசை தான் அதாவது இதைப் போன்ற ஆசைகளை நல்லாசை என்று கூறலாம்.
ஆனால், ஒரு சில பேருக்கு இந்த ஆசை என்ற ஒன்று இருக்கிறதே, அப்பப்பா ஆட்டிப்படுத்திவிடும் அவர்களை என்றே கூறலாம். எதிர்த்து வீட்டுக்காரர் பைக் வாங்கிவிட்டான், நானும் அந்த பைக்கை உடனே வாங்க வேண்டும், அவன் பெரிய பங்களாவில் இருக்கிறான் என்றால் நானும் அதை போன்ற பங்களா கட்டி அதில் குடி போக வேண்டும் என்று பார்த்ததெற்கெல்லாம் ஆசைப்படுவார்கள். இப்படி அடுத்தவருக்கு போட்டி போட்டுக்கொண்டு வரும் இந்த ஆசை இருக்கிறது இதுதான் கெட்ட ஆசை, இது உங்கள் உயிரையே குடித்து விடும்.
ஆகவே, நமக்கு தேவையான மற்றும் அத்தியவசமானது கிடைத்த பிறகு இந்த ஆசைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதுதான் நமக்கு நல்லது. எப்படி ஈரப்பதத்தில் நீரானது ஒட்டிக் கொண்டிருக்குமோ, வெப்பத்தில் ஒளி இருக்குமோ, அதை போலதான் இந்த ஆசையும் நாம் நிறுத்தாத வரை இந்த ஆசையும் நம்மோடுதான் ஒட்டிக் கொண்டு இருக்கும்.
ஆகவே, நாம்தான் நம்முடைய ஆசைகளை கட்டுப்படுத்த வேண்டும். அளவோடு ஆசைப்படுங்கள் அதுவும் நல்லதாக. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சல்லவா!