
தனிமனித பண்புகள் அடுத்தவருடனான அவருடைய உறவுகளைப் பொறுத்து மெறுகேறுகிறது அல்லது உறுமாறுகிறது. ரோம் நகரில் இருக்கும்போது நீயும் ரோமானியனாக இரு என்பார்கள். சமூகத்தோடு நாம் பொருந்தி வாழ்வது முக்கியம். எத்தகைய மனிதர்களோடு என்பது அதைவிட முக்கியம். உயர்ந்த குணாதிசயம் கொண்ட மனிதர்களோடு பழகுவது அவர்களுள் உங்களுக்கும் இடம் கிடைத்துவிடுகிறது. நீங்களும் ஒளிவீசத் துவங்குவீர்கள். ஸ்பானிஷ் மொழியில் ஒரு சொலவடை உண்டு. "நீ ஓநாய்களோடு வசித்தால் நீயும் ஊளையிடுவாய்" என்று.
சுயநலம் படைத்தவர்களோடு பழகும்போது உங்கள் மனம் குறுகிய வழிகளில் ஓடிக்கொண்டு இருக்கும். நல்ல அனுபவம் வாய்ந்த புத்திசாலிகளோடு பழகும்போது உங்களுடைய அறிவு மேம்படும். அவர்களுடைய நோக்கில் உலகத்தைக் பார்க்கத் தொடங்கி விடுவீர்கள். அவர்களின் அனுபவத்திலிருந்து ஆதாயம் பெறுவீர்கள். அவர்களுடைய தோல்விகளில் இருந்து உங்களுடைய அபிப்ராயங்களை திருத்திக்கொள்வீர்கள்.
அவர்கள் உங்களைவிட வலுவாக இருப்பின் அவர்களுடைய வலிமையில் உங்களுக்கும் பங்கு கிடைத்துவிடுகிறது. உங்களுடைய பிரதான நோக்கில் இருந்து இம்மியும் விலகாமல் அடுத்தவருடன் நீங்கள் கூட்டாளியாக இணைய முடியும்.
டாக்டர் தாமஸ் அர்னால்டு ஆங்கிலேயர்களின் கல்வித்துறையில் முன்மாதிரி. அவருடன் வேலை செய்யும்போது மாணவர்கள் தங்களையும் அவருடைய சக ஊழியர்போல் உணரும்படி செய்தார். அவர் பையன்கள் நடுவில் வந்துவிட்டால் புதிய பலமும், ஆரோக்கியமும் வந்துவிட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.
உயர்ந்த மரங்கள் வலிமையை பரவச் செய்யும். படைக்கவும் செய்யும். அதனால்தான் ஒரு தலைவனின் பேச்சில் வயப்பட்டு அவன் பின்னே ஆயிரமாய்,லட்சமாய் தொண்டர்கள் நிற்கிறார்கள்.
சிலரைப் பார்த்த மாத்திரத்தில் ஒரு புத்துணர்வும் பலமும் வந்து விட்டதாக உணர்வீர்கள். உங்கள் அறையில் உயர்ந்த மனிதர் ஒருவரின் படத்தை தொங்கவிடும்போது அவர் உங்களின் அண்மையில் இருப்பது போன்று உணர்கிறீர்கள் இல்லையா? அவருடைய நிலையை நீங்கள் எட்ட முடியாவிட்டாலும் உங்களைவிட உயர்ந்த சுபாவம் உள்ள ஒருவரிடம் ஒரு இணைப்பை ஏற்படுத்திவிடுகிறதே அந்த உணர்வு.
இப்படி தன்னுடைய பாதிப்பை அடுத்தவர் மனதிலும் உண்டாக்கிவிடுகிற சக்தி சில கேரக்டருக்கு உண்டு. அடுத்தவரின் வெற்றியை, சாதனையை பாராட்ட முனையும்போது நீங்களும் வெற்றியைப் பெறுவீர்கள்.