.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
தோல்வி ஒரு நிகழ்ச்சிதான். நம் வாழ்வில் கடந்துபோன ஆயிரம் ஆயிரம் நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்று. அதற்காக தோல்வி கண்ட நிகழ்ச்சியையே மனத்திரையில் மீண்டும் மீண்டும் படம் ஓட்டி பார்த்துக் கொண்டிருப்பது நம் மனதை மேலும் கோழையாக்கிவிடும்.
தோல்வி தற்காலிகமானது . அதை வெற்றியாக்கிக் கொள்ள முயல வேண்டும். தோல்வியின் பாதிப்பை வெளிப்படையாக காட்டிக் கொண்டு பரிதாபத்தின் மொத்த உருவமாக காட்சி தரக் கூடாது. சோதனைகளும் வேதனைகளும் சூழ்ந்திருக்கும் போதும் அமைதியுடனும் கம்பீரத்துடனும் செயல்படுகிறவனைதான் அனைவரும் மதிப்பார்கள்.
உங்கள் மனம் சிரிக்காமல் போகலாம். ஆனால் உதட்டில் புன்னகை அரும்பட்டும்: இது அடுத்தவர்களை ஏமாற்ற அல்ல :நடிப்பாக அல்ல: தோல்வியை சமாளிக்க அல்ல; மாறாக உங்கள் மனம் சாய்ந்து விடாமல் இருக்க; உங்களுக்குள்ளேயே நீங்கள் சரிந்து விடாமல் இருக்கத்தான்!
கண்ணீர் விடுபவனை யாரும் தலைவனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கஷ்டமான நேரத்தில் தான் கட்டுப்பாடு அவசியமாகிறது. மற்றவர் மேல் கோபிப்பது, நடந்த தோல்வியால் தான் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிக்காட்டிக் கொள்வது தவறு.
நான் அடைந்தது தோல்வி அல்ல. அடுத்த முறை வெற்றி பெறுவதற்காக பெற்ற பயிற்சிதான். நான் அடிபட்டது உண்மை. ஆனால் அது என்னை காயப்படுத்தியதே தவிர, முடமாக்கி விடவில்லை
நான் தோல்வி அடைந்து விட்டேன் என்று எண்ணி, பலபேர் எள்ளி நகையாடுவது எனக்கு தெரியும். ஆனால் அடுத்து வெற்றி பெறுவதற்கான முயற்சியில் நான் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறேன் என்பது அவர்களுக்கு தெரியாது.
தோல்வியை வெற்றியாக மாற்றும் வழியை நானே முயன்று கண்டுபிடிப்பேன். என் முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் சக்திகளை முறியடிக்கும் திறமை என்னிடம் இருக்கிறது. அதற்கான துணிவும் என்னிடம் உள்ளது.
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் வரையில் தொடர்ந்து நிலையாக உழைக்கும் உறுதி என்னிடம் உள்ளது .இவ்வாறு எண்ணி செயல் படுபவனைத்தான் வெற்றி தேவியும் காதல் கொண்டு அவனைச் சேரத் துடிக்கிறாள்.
காதலியை கவர எப்படி எல்லாமோ அழகுபடுத்திக் கொள்கிறீர்களோ, அதேபோல் வெற்றி என்னும் காதலியை கவர என்னென்ன வகையில் உங்கள் செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்தாலே வெற்றிப் பயணத்தில் வெற்றி பெறலாம்.