கடின உழைப்பு தனிநபர் ஒழுக்கத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. சீரான முறையில் வாழ் வதற்கும்,நேர்மறையாக செயல்கள் இருப்பதற்கும், வெற்றிகளைத் தொடர்ந்து பெறுவதற்கும் ஒழுக்கம் மிக மிகத்தேவை. சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது உழைப்பை எல்லோரும் விரும்புவர். சூழ்நிலை கடினமாகும்போதும், எதிர்ப்புகள் வலுக்கும்போதும், விட்டுவிடாமல் விடாப்பிடியுடன் முயன்று உழைப்பவர் அவரின் தனிப்பட்ட குணத்தை வெளிப்படுத்தத் தான் செய்கிறார். அத்தகைய சூழலில் வெற்றிபெற கடின உழைப்புடன் கூட இருப்பது தனிநபர் ஒழுக்கமே.
நம் ஒழுக்கத்தை வைத்தே நாம் யார் என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கிறார்கள். ஒழுக்கம் இல்லாதவரின் கடின உழைப்புக்கு எதிர்பார்த்த பலனைத் தர சமுதாயம் தயாராக இருப்பதில்லை. ஒழுக்கம் தனிப்பட்ட வாழ்க்கையையும், பணியையும், செயல்திறனையும் பாதிக்கிறது. செயலின் மீது கவனம் செலுத்தவும், மற்றவர்களால் மதிக்கப்படவும், ஆரோக்கியமாக இருக்கவும், சுறுசுறுப்பாக செயல்படவும், எதிர்ப்புகளைத் தாங்கவும், சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படவும், மன அழுத்தம் இல்லாமல் உழைக்கவும் ஒழுக்கம் காரணமாக இருக்கிறது.
முன்னேற்றத்திற்கும், கடின உழைப்புக்கும் இன்றியமையாத தேவை நேர்மை. நம்மிடம் நாமே நேர்மையாக இருக்க வேண்டியது முதல்படி மற்றவர்களிடம் நேர்மையாக இருக்க வேண்டியது அடுத்தபடி. நேர்மை உள்ள போதுதான் தோல்விகளை ஒப்புக்கொள்ள முடியும். திறன் குறைபாடுகளைக் கண்டு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். தெளிவான கொள்கைகளை மேற்கொள்வதற்கும், தெளிந்த இலக்குகள் அமைப்பதற்கும் நேர்மை முக்கியம். நேர்மை உள்ள போதுதான் கடின உழைப்பு சரியான பாதையில் சென்று சரியான பலனைத்தரும்.
கடின உழைப்பைச் சார்ந்து இருக்கும் மற்றொரு குணம் உதவி செய்தல். நாம் மற்றவர்களுக்கு உதவும்போது நம் உழைப்பிற்கும் மற்றவர்கள் தாமாக முன்வந்து உதவுவர். வெற்றி பெரும்பாலும் பலருடைய உழைப்பைச் சார்ந்து இருப்பதால் நம் உதவுதல் மொத்தக் குழுவின் திறனையும் உயர்த்தும். இதன் மூலம் நம் தலைமைப் பண்பு அதிகரிக்கும். நம் கடின உழைப்பு தானாகவே மகிழ்ச்சியான அனுபவமாக மாறும்.
கடின உழைப்பின்போது தேவையற்ற எதிர்மறைப் பழக்கங்களைக் களைந்துவிடுதல், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். உடல் நலத்தின் மீது அக்கறை காட்டுதல், நிதி மேலாண்மை குறித்து கவனமுடன் இருத்தல், நேரத்தை விரயம் செய்யாமல், தீய பழக்கங்களை தவிர்த்தல் முதலியன உழைப்பின் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும். ஒழுக்கம் உடையவர் வாழ்வு தோல்விகளை காண்பதில்லை.