
கோபம் வந்தால் எல்லா மனிதர்களும் தன்னிலை மறந்து விடுகிறார்கள். இதுவே வாய் மொழியாக வன்முறைகள் தடிக்க காரணமாகின்றன. கத்தியால் குத்துவது, துப்பாக்கியால் சுடுவது, அடித்து துன்புறுத்துவது மட்டும் வன்முறை கிடையாது. வாய்மொழி வன்முறையும் மன காயத்தை ஏற்படுத்தும். பிறர் முன்னிலையில் கேலி செய்வதும், மட்டம் தட்டுவதும் பிறர் மனதை வலிக்கச் செய்யும். குத்திக்காட்டி பேசுவது, அவமானப்படுத்துவது, தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்றவையும் வன்முறைதான்.
ஒருவர் பேச விரும்பாத விஷயத்தை நான்கு பேருக்கு எதிரில் பேசி அவர்களின் மனதை சங்கடப் படுத்துவதும், ஒருவருடைய தோற்றம், நிறம், இயலாமை குறித்து இழிவாகப் பேசுவதும் வன்முறை மட்டுமல்ல குற்றமான செயலும் கூட. பேசும்பொழுது பிறர் மனம் புண்படாதவாறு பேசுவதில் கவனம் மிகவும் அவசியம். கத்தியை விட கூர்மையானது நாக்கு. இது ஒருவரின் நம்பிக்கையை சிதைக்கவும் வைக்கும், உயர்த்தவும் செய்யும். எனவே பேசும்போது கவனம் மிகவும் அவசியம்.
கடுமையான பேச்சுக்கள் ஒருவரின் உள்ளத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி விடும். பழியை சுமத்தும். அம்மாதிரி சமயங்களில் மௌனமும், புன்னகையும்தான் சிறந்த பதிலாக இருக்க வேண்டும். மௌனம்தான் பிரச்னைகளை வளரவிடாமல் தடுக்கும்.
புன்னகை பிரச்சனைகளை தீர்க்கும். நாம் ஆழமாக காயப்பட்டிருக்கிறோம் என்பதை நம் மௌனமும் உணர்த்தும். இதனால் வார்த்தையில் வன்முறைகளை கையாளுபவர்கள் சிறிது யோசிப்பார்கள். அடுத்த முறை கடுமையாக பேச யோசிப்பார்கள்.
கோபம் வரும்போது நம் வார்த்தைகளுக்கு கடிவாளம் போட வேண்டும். வார்த்தைகள் மூலம் வெளிப்படும் வன்முறை, உணர்ச்சி ரீதியிலான துஷ்பிரயோகமாகும். இது ஒருவரின் மனதை காயப்படுத்தவும், அவர்களின் நிம்மதியை சீர்குலைக்கவும் செய்யும். எனவே வார்த்தையில் வன்முறைகள் தேவையில்லை. மாறாக நேர்மறையான மற்றும் அன்புடன் கூடிய ஆதரவான வார்த்தைகள் பேசுவதே சிறந்தது.
ஒருவரை மிரட்டுவது, அவமானப்படுத்துவது போன்றவை அவரது சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் செயலாகும். இது அவர்களின் தன்னம்பிக்கையை குறைப்பதுடன், தேவையற்ற மன உளைச்சலுக்கும் ஆளாக்கும்.
இதற்கு மாறாக நல்ல அணுகுமுறை மூலம் அன்பு, மரியாதை செலுத்தி, கனிவான வார்த்தைகள் பேசிப் பழகுவதே நல்லது. வன்முறையற்ற வார்த்தைகள் நேசத்தை வளர்க்கும்; அமைதியை கொடுக்கும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, ஒருவரை ஒருவர் மதிக்கும் சூழலை உருவாக்கும்.