
எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். அதனால் உங்கள் உள்ளத்திலும், உடலிலும் பாதி பலம் கிடைத்ததுபோல் இருக்கும். இனிமேல் எந்த ஒரு செயலையும் செய்யும் ஆர்வமும் பிறந்து விடும்.
ஆர்வம் இல்லாமல் செய்யும் செயல்கள் யாவும் எளிதில் பூர்த்தி ஆகாது. அதனையே ஆர்வமுடன் செய்து பாருங்கள். அச்செயலைத் தெளிவாகவும் விரைவாகவும் செய்து முடிப்பீர்கள்.
உலகில் தோன்றிய உயிரினங்களிலேயே மனித வாழ்க்கை மட்டுமே அற்புதமானது. நமக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்நாளில் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்கப் பழகிக்கொள்வோம்.
மனதைக் கட்டிப்போடும் சூட்சமங்களைத் தெரிந்து கொள்வோம்.
உங்கள் மனம் மட்டுமே உங்களை என்றும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள முடியும். ஏனென்றால் உங்களைப் பற்றி முழுமையாய்த் தெரிந்து கொண்டவர்கள் நீங்களாக மட்டுமே இருக்க முடியும்.
அதனால்தான் மீண்டும் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அந்தச் சூழ்நிலையையும் உங்களால் மட்டுமே உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.
கவலைகள் எனும் பாரம் நிரம்பும் போதுதான் நீங்கள் மகிழ்ச்சி என ஒன்று இருப்பதையும் மறந்து விடுகிறீர்கள், வாழ்க்கை முழுவதும் கவலைகளைச் சுமக்கும் குப்பைத் தொட்டியாகத்தான் இருக்க வேண்டுமா என்ன! இனிமேல் அப்படி இருக்கமுடியாது என்று முடிவுக்கு வந்துவிடுங்கள். உலகில் கவலை இல்லாத மனிதர்களே இருக்க முடியாதுதான். அதற்காகப் பொழுதுக்கும் கவலைப் படுகிறேன் என நீங்கள் இருந்தால், எப்பொழுதுதான் மகிழ்ச்சியான மனநிலைக்கும் வரமுடியும்.
ஆகையால் கவலைகளை உடனே அப்புறப்படுத்தி விடுங்கள் .மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள். காசு, பணம் செலவழித்துதான் மகிழ்ச்சியைப் பெறவேண்டும் என்றில்லை. அது செல்வந்தர்கள் செய்யலாம். பெறலாம். எவ்வளவு பணம் செலவழித்தாலும் கூட. மகிழ்ச்சியைப் பார்த்து அனுபவிக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள்.
நாம் அந்த ரகத்துக்குப் போகவேண்டாம். சாதாரண நிலையிலேயே மகிழ்ச்சியைப் பெறமுடியும், நன்றாகவும் அனுபவிக்கவும் முடியும். இவை எல்லாவற்றுக்கும் மனதுதான் வேண்டும்.
மனமே! சூ மந்திரக்காளி! கவலையை வெளியில் விரட்டிவிடு! மகிழ்ச்சி என்றும் மனதுக்குள் வரட்டும்! என்று சொல்லிப்பாருங்கள் அது போதும். உடனே கிடைத்துவிடும். அதற்கு நீங்கள் தயாராக வேண்டும்.
வாழ்க்கை சிறப்பாக வாழ்வதற்கு மட்டுமே. நாளும் வேதனைப்பட்டுத் துடிப்பதற்கு அல்ல. இரவும், பகலும் இயற்கை மாற்றத்தில் வருவது போல்தான். இன்பமும். துன்பமும் வரும் போகும்.
நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பார்கள். அதுபோல்தான் இன்பம் வரும்போது, அதை எப்படி தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
மனிதனால் முடியாத செயல் என்று எதுவுமில்லை. அவன் முயற்சித்தால் எதுவும் முடியும். ஆனால் நன்மையை மட்டும் சிந்தித்து. முயற்சித்து வெற்றி காணவேண்டும்.
அப்பொழுதுதான் நன்மையைபெற முடியும் மகிழ்ச்சியுடன் வாழவும் முடியும். அதுவும் அவரவர் கைகளில் தான் இருக்கிறது .அதை மட்டும் மறந்து விடாதீர்கள்.
சிரித்து வாழவேண்டும். பிறர் சிரிக்க வாழக்கூடாது. எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். அதுவே பாதி பலம் பெற்றதாகிவிடும்.