A boy talking to a demon
A boy talking to a demon

கல்நெஞ்சுக்காரர்களையும் கரைய வைப்பது எது தெரியுமா?

Published on

மிகவும் கோபப்படுபவர்கள், கடிந்து பேசுபவர்கள், கல் நெஞ்சம் படைத்தவர்கள் என்று  பெயர் வாங்கியவர் களிடம், யாரிடமாவது அவர்களின் மனப்போக்கினைப் பொறுத்துக் கொண்டு, புரிந்து கொண்டு அன்பாகப் பேசிப்பாருங்களேன். அந்த நேரத்தை தவிர்த்து அப்புறமாக அவர்கள் பணிந்து போவதை பார்க்கலாம். அன்புக்கு அடி பணியாதவர்கள் உலகத்தில் யாருமே இல்லை. அன்புக்கு ஏங்குபவர்கள்தான் அதிகம். 

ஒரு ஊரில் பெரிய மலை ஒன்று இருந்தது. அந்த மலையின் அடிவாரத்தில் அரக்கன் ஒருவன் வாழ்ந்து வந்தான். மிகவும் கொடூரமாகக் காணப்பட்ட அந்த அரக்கன் மலையடிவாரத்தில் வருகின்ற ஆடு, மாடுகளையும் மனிதர்களையும் பிடித்து விழுங்கிக் கொண்டிருந்தான். அதனால் அந்த பகுதிக்கு யாருமே செல்வதில்லை.

ஒருநாள் அந்த ஊரின் அருகில் இருக்கும் குருசடி கிராமத்தில் இருந்து ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அந்த மலையடிவாரத்திற்குச் சென்றான். மதிய நேரம் வரையிலும் ஆடு, மாடுகளை எல்லாம் மலையடிவார புல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன், தான் கொண்டு வந்த கட்டுச் சாதத்தை பிரித்து சாப்பிடுவதற்கு அமர்ந்தான். 

அப்போது அந்த இடத்திற்கு அரக்கன் வந்து விட்டான். அரக்கனை கண்ட சிறுவனோ பயமே இல்லாமல் அரக்கனையேறிட்டு அரக்கண்ணே சரியாக சாப்பாட்டு நேரத்தில் வந்து விட்டீர்கள். வாங்க அண்ணே என்னோட அமர்ந்து சாப்பிடுங்க அண்ணே என்று கூறினான்.

அந்தச் சிறுவன் பேச்சைக் கேட்டு அரக்கன் வியப்படைந்தான். ஆனால் சிறுவனோ அரக்கண்ணே ஏன் தயக்கத்தோடு நிற்கின்றீர்கள். நான் சாப்பாடு தந்தால் நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? என்னோடு சாப்பிட உங்களுக்கு வெட்கமாக இருக்கின்றதா? என்று கேட்டான். 

இதையும் படியுங்கள்:
எந்த சூழ்நிலையையும் நிதானமாகக் கையாள வேண்டும். ஏன் தெரியுமா?
A boy talking to a demon

இல்லை, சிறுவனே, எனக்கு வெட்கமில்லை. பாசமான உன் செயலை பார்த்ததும் என் மனது ஆனந்தம் அடைகிறது. இதுவரையிலும் யாரும் என்னை சாப்பிட அழைத்ததில்லை. என்னை கண்டவுடன் பயத்தால் ஓடி ஒளிந்து கொள்வார்கள். என்னை கல்லால் அடிப்பார்கள். எனக்கு வெட்கம் ஏற்படும் வகையில் என்னை அருவருப்பாக பார்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் மத்தியில் நீ என்னை வித்தியாசமாக  அண்ணே என்று உறவு முறை கூறி அன்புடன் சாப்பிட அழைக்கின்றாயே உனக்காக வேண்டி இனி இந்த மலையடிவாரத்தில் யாருக்கும் எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன். இங்கிருந்து சென்று விடுகிறேன் என்று கூறியபடி எங்கோ செல்லத் தொடங்கினான் அந்த அரக்கன்.

அன்பான பேச்சும் அன்பான அணுகுமுறையும் கல்நெஞ்சுக்காரர்களையும் கரைய வைத்து விடும் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா என்ன? அன்பின் வழி அது தானே உயர்நிலை. 

உலகமே இயந்திரங்களால் இயங்கினாலும், அனைத்து உள்ளங்களும் உணர்வுகளால்தான் இயங்குகின்றன.

எனவே... யாரும் யாரையும் காயப்படுத்தாமல் வாழ்வோம். 

அன்பும் பாசமும்தான் எப்போதும் வாழ்க்கையை அழகாக்கும் ஆதலால், அன்புடன் பேசுவோம், பாசமுடன் பழகுவோம்!

logo
Kalki Online
kalkionline.com