துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

There is no sorrow if there is courage.
lifestyle articles
Published on

துணிவு இருந்தால் துக்கம் இல்லை. துணிவு இல்லாதவனுக்கு தூக்கம் இல்லை என்பார்கள். பயம் நிறைந்த எண்ணங்கள் நம் எதிர்காலத்தை முடக்கிவிடும். பயமற்ற எண்ணங்கள்தான் நம்மை வாழ்வில் தொடர்ந்து செயல்பட வைக்கும். இந்த பிரபஞ்சத்தில் கொட்டிக் கிடக்கிறது கோடி வழிகள். வாழ்வில் அச்சமின்றி செயல்பட தெளிவும், மனத்திட்பமும், நம்பிக்கையும் அவசியம் வேண்டும். எதிர்வரும் துன்பத்தைக் கண்டு துவளாமல் இருப்பதே துணிவு. இதைத்தான் துணிந்தாருக்கு துக்கம் இல்லை. துணிந்தவருக்கு சமுத்திரம் முழங்கால் ஆழம் என்பார்கள். 

மனஉறுதியுடன் எந்த சூழ்நிலையிலும் பின்வாங்காமல் போராடுவது, துணிந்து செயல்படுவது, சமயோகிதமாக சிந்தித்து செய்வது வாழ்வில் வெற்றிபெற சரியான வழியாகும். அதற்காக துணிவு என்ற பெயரில் கண்மூடித்தனமான போக்கு நமக்கு பெரும் தோல்வியையே தரும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

"பகல் வெல்லும் கூகையை காக்கை இகல்வெல்லும் வேந்தற்கு வேண்டும் பொழுது"

எல்லா இடங்களிலும் துணிவு பலன் தராது. சமயோகிதமாக யோசித்து செயல்படுவதும் அவசியம். துணிவு பணிவு இதெல்லாம் இடம், பொருள், காலம் சார்ந்தது. குருட்டுத்தனமான துணிவு அவமானத்தையே தேடித் தரும். எல்லா இடங்களிலும் துணிவு பலன் தராது. 

எங்கெல்லாம் துணிவு தேவை தெரியுமா? வாழ்க்கையின் சவால்களை அசாதாரண மனஉறுதியுடன் எதிர்கொள்வதற்கு துணிவு மிகவும் தேவை. வாழ்வில் முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய சமயம் துணிவு அவசியம். யாரேனும் அல்லது எதுவேணும் நம்மை அச்சுறுத்தும் சமயம் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் மன தைரியமும், துணிவும் தேவை. ஆபத்து காலத்தில் அல்லது கஷ்டங்களை எதிர்கொள்ளும் சமயத்தில் அசைக்க முடியாத தைரியத்துடன்(துணிவுடன்) செயல்பட வேண்டியது அவசியம். இதையே  "துணிந்தாருக்கு துக்கம் உண்டா பணிந்தாருக்கு பாடு  உண்டா" என்பார்கள்.

எடுத்துக்கொண்ட லட்சியங்களை நோக்கி, இலக்கை நோக்கி துணிவுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். சிக்கலை தீர்ப்பதற்கான துணிச்சலான அணுகுமுறை, சிக்கலான திட்டங்களை வெற்றிகரமாக முடிக்க உதவும். நம்முடைய வளர்ச்சிக்கு பின்னடைவுகள் நேருமாயின் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து போராடி வெற்றி பெறவும் துணிவு மிகவும் அவசியம். சமூக அநீதிகளுக்கு எதிராக போராடவும் துணிவு தேவை. துணிவும் பணிவும் துக்கம் தீர்க்கும் என்பார்கள்.

இதையும் படியுங்கள்:
குதூகல வெற்றி வேண்டுமா? குழந்தைகளாக மாறுங்கள்!
There is no sorrow if there is courage.

தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே துணிச்சல் வரும். செயலில் உறுதியாக இருந்தால் மட்டுமே மனதில் துணிவு வரும். 

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு"

என்ற வள்ளுவரின் கூற்றுப்படி துணிந்து செயலில் இறங்கிவிட்டால் தேவையில்லாத எந்தவித சிந்தனைகளும் நம்மை திசை திருப்பி விடாது. பறந்தால் கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சம் இருந்தால் எந்த பறவையாலும் கூட்டிலிருந்து வெளிவர முடியாது. தன் இறக்கை மீதுள்ள நம்பிக்கையில் துணிந்து பறக்க முற்படும்பொழுது தான் பறவையால் வானத்தில் சுதந்திரமாக பறக்க முடிகிறது. தன்னம்பிக்கை இருந்தால் துணிச்சல்தானே வரும்.

ஒரு காரியத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்ற துணிவு வந்துவிட்டால் எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் களத்தில் இறங்கி முனைப்புடன் வேலை செய்ய வேண்டும். இதைத்தான் "துணிந்தவனுக்கு துக்கமில்லை" என்பார்கள்.

துணிந்து செயலாற்றுவோமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com