
இன்றைய இளம் தலைமுறையினர் சமூக ஊடகங்களை பார்த்து எந்நேரமும் தங்களை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து இவர்களைப் போல் திறமையில்லையே தகுதி இல்லையே என்று சந்தேகத்துடனே வாழ்கின்றனர்.
இத்தகைய எதிர்மறையான எண்ணங்களால் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டு அவர்களுக்குள் உணர்வு பூர்வமான குழப்பத்தை ஏற்படுத்துகிறது.இதனால் தோற்றம், திறமை உட்பட அனைத்து அம்சங்களிலும் தன்னைப் பற்றி எதிர்மறை உணர்வுகளோடு இளம் வயதினர் வாழ்கிறார்கள்.
இது அவர்களுடைய நம்பிக்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மனதளவில் பல சிக்கலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனால் பதற்றம், மன அழுத்தம், படிப்பு வேலையில் முழு திறனையும் வெளிப்படுத்த முடியாமல் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானவர்கள் சிறந்ததை மட்டுமே எடிட் செய்து போஸ்ட் செய்வதால் உள்ளதை உள்ளபடி யாரும் காட்டுவதில்லை என்ற நிஜத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
எதைச் செய்தாலும் பெஸ்ட் ரிசல்ட் வரவேண்டும் என்ற எண்ணம் உடைய இளம் வயதினர் அப்படி கிடைக்காத பட்சத்தில் நினைத்தது எதையும் சாதிக்கவில்லை. விரும்பியது கிடைக்கவில்லை என்று சோர்வடைந்து கிடைத்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கு பதிலாக வாழ்க்கையில் தோற்று விட்டதாக எண்ணுகின்றனர்.
அந்த எண்ணத்தை கைவிட்டு மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயலை அன்றாடம் செய்வது, பிடித்த இசையை கேட்பது, விருப்பமான உணவை உட்கொள்வது, ஷவரில் குளிப்பது போன்ற சிறு விஷயங்கள் கூட நம் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும்.
நேராக நிமிர்ந்து அமர்வது, நிற்கும்போது தோள்களை குறுக்காமல் நிமிர்ந்து நிற்பது தன்னம்பிக்கையை தருவதோடு உடலை நல்ல நிலையில் வைக்கும் விஷயங்களாக இருக்கின்றன. இதனால் மூளையில் உற்சாகம் தரும் வேதிப்பொருட்கள் அதிகம் சுரந்து என்னால் எதையும் எதிர்கொள்ள முடியும் என்ற சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்புவதாக பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
பதட்டமாக உணரும்போது சுவாசப் பயிற்சி செய்து, பாதங்களை தரையில் அழுத்தமாக ஊன்றி நான் பாதுகாப்பாக இருக்கிறேன். என்னால் இதை செய்ய முடியும் என்று சொல்வதோடு நம்மால் முடியாத விஷயத்திற்கு 'நோ' சொல்ல பழகுவது நம்மை நாமே நேசிக்க செய்யும் செயல்களாகும்.
ஒரே சமயத்தில் இரு வேலைகளை செய்யும்போது நம்முடைய 100% பங்களிப்பு இரண்டு வேலைகளுக்கும் கிடைக்காமல் அரைகுறையாகவே இரண்டையும் செய்ய முடியும் என்ற உண்மையை புரிந்துகொண்டு பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும்போது எதையும் உருப்படியாக செய்ய முடியாதோ என்ற தேவையற்ற குற்ற உணர்வையும் ஏமாற்றத்தையும் வளர்த்துக் கொள்ளக் கூடாது.
நாம் பிறக்கும்போது தன்னம்பிக்கை கூடவே பிறப்பது இல்லை. படிப்படியாகத்தான் நாம் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆகவே தன்னம்பிக்கையை வளர்க்க முதலில் நம்மை நாமே நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும்.