1. கவலை சுமக்க வேண்டாம்: மகிழ்ச்சியான வாழ்க்கையின் நிரந்தர ஸ்பீடு பிரேக்கர் கவலை! கடந்த காலம் பற்றியும், எதிர்காலம் பற்றியும் கவலைப்பட்டு, நிகழ்கால நிம்மதியை பலரும் தொலைக்கிறார்கள். கடந்த காலத்தை நாம் என்ன நினைத்தாலும் மாற்ற முடியாது. எதிர்கால நிகழ்வுகள் எல்லாமே கற்பனையானவை. வேலை டென்ஷன், வீட்டுக்கடன், குழந்தைகளின் படிப்பு, பெற்றோர் உடல்நிலை என கவலைப்பட ஆயிரம் விஷயங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கலாம். ஆனால் கவலைப்படுவதால் பிரச்னை தீரப்போவதில்லை. பாசிட்டிவாக யோசித்தால் நல்ல தீர்வுகள் கிடைக்கும். மனதிலும் உற்சாகம் நிலைக்கும்.
2. பழி வாங்கும் நினைப்பு வேண்டாம்: ஒருவரால் துன்பம் ஏற்பட்டாலும் அவர்களை பழி வாங்கும் எண்ணம் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியாது. மனதுக்குள் பழி வாங்கும் உணர்வை சுமப்பது ஓர் அட்டைப் பூச்சியை உடலில் ஏற்றிக் கொள்வதுபோல. அட்டை இரத்தத்தை உறிஞ்சுவதுபோல பழிவாங்கும் உணர்வு நம் சந்தோஷத்தை ஒட்டுமொத்தமாக உறிஞ்சிவிடும். மன்னிப்பில்தான் சந்தோஷத்தின் பாதை திறக்கிறது.
3. சுய இரக்கம் வேண்டாம்: நினைப்புதான் நம் மனதை ஆள்கிறது. நம்மை பரிதாபத்துக்கு உரியவராக நம் மனம் நினைக்கும்போது நமக்குள் துயரம்தான் நிரம்பி வழியும். நம் பலவீனங்களை எண்ணி துக்கப்படாமல் நமக்குள் இருக்கும் நல்ல விஷங்களை உள்ளிருந்து தேடி அவற்றிற்காக நம்மை பாராட்டிக் கொண்டால் வாழ்க்கை மாறும்.
4. பெரிதுபடுத்த வேண்டாம்.
ஒரு சாதாரண சண்டைக்கு பிரமாண்டமாக செட் போடுவது சினிமாவுக்கு வேண்டுமானால் பிரமாண்டம் தரலாம். வாழ்க்கையில் பிரச்னைகளை சந்திக்காதவர் யாருமில்லை. எந்த பிரச்னைக்கும் கவலைப்பட ஓர் அளவும், நேரமும் இருக்கிறது. அதை தாண்டி அதற்கு முக்கியம் கொடுக்காமல் அது அப்படியே கடந்து போகட்டும் என்று விட்டு விடலாம். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா என்பதற்கு விடை தேடினால் மகிழ்ச்சி தானாக கிடைத்து விடும்.
5. எதிர்பாராத சூழலில் முடங்க வேண்டாம்: எதிர்பாராத விஷயங்கள் எதிர்பாராத நேரத்தில் நடப்பதுதான் வாழ்வின் சுவாரசியம். நாம் விரும்பாத விஷயங்கள்தான் பெரும்பாலும் நிகழும். எதிர்பாராத விஷயங்கள் நடக்கும் போது முடக்குவது என்றால் வாழ்வின் பெரும்பாலான நேரங்களில் மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும். சாகசங்கள் நிறைந்த சுற்றுலாவே மகிழ்ச்சி தரும். மற்றவை சராசரி பயணங்கள் போலவே ஆகும். வாழ்க்கையை சாகசம் நிறைந்த சுற்றுலாபோல நினைப்போம்.
6. தியாகி ஆக நினைக்க வேண்டாம்: சிலர் அடுத்தவர்களுக்கு உதவுவார்கள். தாங்கள் இழந்தாலும் பரவாயில்லை என மற்றவர்களுக்கு தங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவிடுவார்கள். எல்லாவற்றையும் செய்துவிட்டு “நான் இவ்வளவு தியாகம் செய்கிறேன். யாரும் பாராட்டுவதில்லை” என புலம்புவார்கள். இங்குதான் மகிழ்ச்சி காணாமல் போகிறது. பிரதிபலன் எதிர்பார்த்து செய்வதல்ல உதவி! அதை மனநிறைவுடன் மகிழ்ந்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் செய்யாமல் இருப்பதே நல்லது!
7. ஏதோ நடப்பதற்காக காத்திருக்க வேண்டாம்: பிரமோஷன் கிடைத்தால்தான் சந்தோஷம், பையன் ஸ்டேட் ரேங்க் எடுத்தால்தான் மகிழ்ச்சி, என ஏதோ நிகழ்ந்தால்தான் வாழ்க்கையில் மகிழ்ச்சி மலரும் என நினைக்கிறோம். ஆனால் அவைதான் நம் மகிழ்ச்சிக்கு காரணம் என்பது மாயை. அவை நமக்கு அந்த நேர நிறைவை தந்தாலும் ‘அடுத்தது என்ன?’ என மனம் தாவ ஆரம்பித்துவிடும். அதற்கு எந்த எல்லையும் கிடையாது. அது தினம் தினம் அனுபவிக்க வேண்டிய உணர்வு. எதற்காகவும் அதை தள்ளிப் போட வேண்டாம்.