
நீங்கள் நீங்களாக இருப்பது
தலைமைத்துவம் என்பது ஓரிரு நாட்களில் வந்துவிடும் திறன் கிடையாது. இதிலும் கற்றல் முறை மற்றும் தவறு செய்யும் முறைகள் இருக்கின்றன. எனவே நீங்கள் முதலில் நீங்களாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். யாருக்காக உண்மையாக இருக்கிறோமோ இல்லையோ நமக்கு நாம் முதலில் உண்மையாக இருக்க வேண்டும்.
இதனால் நமக்கு பிறரை புரிந்து கொள்ளும் திறன் அதிகரிப்பதுடன் எந்த விஷயத்தையும் மனம் திறந்து முகத்துக்கு நேராக கூறமுடியும். பிறரை நாம் எப்படி இருக்கவேண்டும் என்று எண்ணுவதை விட நாம் நாமாகவே இருந்து விட்டுச் சென்றுவிட வேண்டும்.
குழுவாக செயல்பட வேண்டும்
தனித்து நிற்கும் மனிதர்களுக்கு வெற்றி எப்போதாவதுதான் கிடைக்கும். ஆனால் நமக்கு ஆதரவு தரும் சிலரை அருகில் வைத்துக்கொண்டால் இந்த வெற்றியை அடிக்கடி காணமுடியும். நம்முடைய நண்பர்கள், கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் உடன் வேலை பார்ப்பவர்கள், உள்ளிடடோரில் உங்களுக்கு யார் சரியான வழியைக் கூறுகிறார்கள் என்பதை கண்டறிந்து அதன் வழியே செல்லவேண்டும்.
இது பலநேரங்களில் நாம் தனியாக நிற்கும் சமயங்களில் வலுவாக நம்மை மாற்றிக்கொள்ள உதவும். நமக்கு நம்பகமானவரகளின் உறவை வளர்த்துக்கொள்வது நல்லது.
தெளிவு
எந்த வித இலக்கு மின்றி தலைமையில் இருப்பது நம்மை பெரிய இடத்தில் கொண்டு செல்லாது. தலைமையில் இருக்க தெளிவான மனப்பான்மை அவசியம். உங்கள் இலக்கு தெளிவாக இருந்தால்தான் உடன் இருக்கும் பலரையும் மோடிவேட் செய்து அவர்களை உங்களுடன் பயணிக்க வைக்கலாம்.
மன உறுதி
எந்த இடத்தில் இருந்தாலும் நம்மைத்தேடி தடைகள் வருவது தவிர்க்கமுடியாத ஒன்று. நாம் இதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நமது திறமை அமைகிறது. அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் மனஉறுதியும் இருக்க வேண்டியது அவசியம்.
பல சமயங்களில் நீங்கள் போட்டு வைத்த திட்டம் சொதப்பலாம். அப்போது டென்ஷன் ஆகாமல் சூழலுக்கு ஏற்றவாறு உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வது அவசியம். இது வெற்றியை உறுதி செய்யும்.
சமநிலையுடன் இருத்தல்
தலைமை ஏற்கும் பெண்கள் பல விஷயங்களை ஓரே நேரத்தில் கையாளவேண்டும் என்பது கடினமான காரியம்தான். உடல் நலன் மனநலம் இரண்டையும் கருத்தில் கொண்டு உங்கள் வேலைகளைச் செய்ய வேண்டும். உங்கள் வேலையைத் தவிர உங்களுக்குப் பிடித்த விஷயங்களை வாழ்வில் இணைத்து அதை தினமும் செய்யவேண்டும்.
இது உங்களை ரீ சார்ஜ் செய்து கொள்ள உதவும். உடல் புத்துணர்சியுடன் இருக்கும். அப்போதுதான் நீங்கள் தலைமையிடம் செல்வதற்கு உங்கள் மனமும் தயாராகும்.