
மனித மனம் மிகவும் விசித்திரமானது. ஒவ்வொருவர் மனதிலும் வெவ்வேறு விதமான எண்ணங்களும் சிந்தனைகளும் நிரம்பியிருக்கும். சுயஅன்பு, மனஉறுதி, சுயவிழிப்புணர்வு போன்றவற்றை கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சில விஷயங்களை நினைத்து மனதுக்குள்ளேயே மருகும் மனிதர்களால் நிம்மதியான, வெற்றிகரமான, அமைதியான வாழ்க்கை வாழ்வது கடினம். வாழ்க்கையில் ஒருபோதும் சில விஷயங்களை அவமானமாக எண்ணி கருதக்கூடாது. அவை என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்த காலம்:
ஏழையாக பிறந்த ஒருவர் அதை அவமானமாக நினைத்து மருகிக்கொண்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் ஏழையாகவே இருக்க நேரிடும். தன்னைப் பற்றி தாழ்வாக எண்ணுவதை விட்டுவிட்டு வாழ்க்கையை மாற்றும் வழியைப் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையில் விரும்பும் மாற்றங்களை செய்யத் தொடங்கவேண்டும். கடந்த காலம் எத்தனை துயரமானதாக இருந்தாலும் அதை அவமானமாக எண்ணக்கூடாது.
தவறுகள்/ தோல்விகள்:
தவறு செய்வது மனித இயல்பு. கடந்த காலத்தில் செய்த தவறுகளை நினைத்து அவமானப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல முயற்சிகளில் தோல்வி அடைந்தால் அதை அவமானமாக கருதி மருகினால் அடுத்த அடி எடுத்துவைக்க முடியாது. அவற்றை முற்றிலும் மறந்துவிட்டு புதியதாக முயற்சியை தொடங்குவது அவசியம். தவறுகளும் தோல்விகளையும் பற்றி எண்ணிக் கொண்டிருந்தால் இனிமேல் செய்ய வேண்டியதைப் பற்றி சிந்திக்க நேரமில்லாமல் போய்விடும். தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு புதிய முயற்சிகளை செய்யத் தொடங்கவேண்டும். தோல்விகள் ஒருவருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
உடல் தோற்றம்:
சிலருக்கு தன்னுடைய உடலைப் பற்றி தாழ்வான அபிப்பிராயம் இருக்கும். தாங்கள் சரியான உயரம், நிறம், எடை இல்லாமல் இருக்கிறோம் என்கிற அவமான உணர்ச்சியை கொண்டிருப்பார்கள். உடல் தோற்றம் எப்படி இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய திறன்களை வளர்த்து அன்பு கருணை போன்ற குணங்களையும் வளர்த்துக் கொண்டு நடப்பதுதான் சிறந்தது.
உதவி கேட்பது:
நிறைய பேர் பிறரிடம் உதவி கேட்பதை அவமானம் என்று கருதுகிறார்கள். ஆனால் அது மிகப்பெரிய தவறு. கேட்பவர்களுக்கு தான் எதுவும் கிடைக்கும். அனுபவசாலிகளிடம் உதவியோ அல்லது அறிவுரையோ யோசனையோ கேட்பதில் எந்த தவறும் இல்லை. உதவக் கூடிய நபர்கள் எங்கும் இருக்கிறார்கள். அதை சரியாக கேட்கத் தெரிந்தால் போதும்.
தெரியாது என ஒப்புக்கொள்ளுதல்:
தனக்குத் தெரியாத விஷயங்களை ஒப்புக்கொள்வதில் எந்த அவமானமும் இல்லை. தெரியும் என்று பொய் சொல்லிவிட்டு அதை சரியாக செய்யாமல் போகும்போது பிறருடைய அவமரியாதைக்கு ஆளாகலாம். எனவே தெரியாது என்று நேர்மையாக ஒப்புக் கொள்ளுதல் நல்லது. ஆனால் அதே சமயம் அதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கற்றுக்கொள்வதும் அவசியம்.
அழுவது:
அழுகை என்பது ஒரு இயற்கையான உணர்ச்சி. அழுவது அவமானகரமான செயல் அல்ல. கண்ணீர் என்பது உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு இயற்கையான வழியாகும். சோகம், விரக்தி, அதீத மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்து வதற்கான ஒரு ஆரோக்கியமான வழிதான் அழுகை. இதில் எந்த விதமான அவமானமும் இல்லை. எனவே இந்த 6 விஷயங்களை ஒருபோதும் அவமானமாகக் கருதக்கூடாது.