
எந்த இலக்கணத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் தனக்கென்று ஒரு இலக்கணத்தை வைத்திருப்பதுதான் காதலின் சிறப்பு. மேலும், எந்தத் திட்டமும் இல்லாமல் எந்த மேல்பூச்சும் இல்லாமலஂ எந்த ஆபரணமும் இல்லாமல் தானாக உடைத்துக்கொண்டு வருகிற ஓர் அன்பின் அடையாளமாக காதலைப் பார்க்கமுடியும்.
காதல் தனக்கென்று ஒரு உருவத்தை உருவாக்கி இருக்கிறது. காதல் இல்லாத வாழ்க்கை அழகில்லாத வாழ்க்கை என்று ஒரு கருத்து உண்டு. எல்லார் வாழ்க்கையிலும் அவர்கள் காதலைக் கடத்துதான் வந்திருப்பார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு.
ஆனால் அது எப்படி ஏற்படவேண்டும் என்பதுதான் இப்போது சிக்கலாய் இருக்கிறது. ஒரு காதல் இல்லாத இளைஞன் ஏதோ தகுதியில்லாதவனைப் போலவும், காதல் இல்லாத ஓர் இளம்பெண் நட்பு வட்டத்தில் வித்தியாசமாய் பார்க்கப்படுவது போலும் இளைஞர் உலகத்தின் நெருக்கடியாக சமீபகாலங்களில் காதல் இன்னொரு வடிவம் எடுத்திருக்கிறது.
பெரும்பான்மையாக அப்படி இல்லை என்றாலும், நீ காதலிக்கவில்லை என்றால் நவீனமான ஆள்கிடையாது என்பத' போன்ற ஒரு மனநிலையை சில நட்பு வட்டங்கள் ஏற்படுத்திவிடுகின்றன.
இயல்பாக தோன்றும் ஓர் உணர்வை கெளரவ சின்னமாக நவீன சமூகத்தின் குறியீடாக மாற்றுவது சரியா என்றொரு கேள்வி உதிக்கிறது. எல்லோருக்கும் காதல் இருக்கிறது. காதலர்கள் இருக்கிறார்கள். எனக்கும் காதல் வேண்டும். அதுதான் இந்த இளைஞர் உலகத்துக்குள் நான் வாழ்வதற்கான வடிவம் என்பதுபோல ஒரு மாயையை பிரம்மையை மனதளவில் தடுமாறும் பல இளைஞர்களிடம் சமீபத்திய மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது.
காதல் ஓர் இயல்பான அற்புதமான உணர்வு அது பொருட்டும் எந்த நெருக்குதல் பொருட்டும் நடக்க வேண்டியதில்லை. அது தானாக நடக்கவேண்டிய அரும்ப வேண்டிய அழகான ஓர் உணர்வு .சிலர் காதலிக்கிறவர்களை குற்றவாளிகளாக பார்க்கும் அதே வேளையில், சிலர் காதலிக்காதவர்களை லாயக்கற்றவர்களாக பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இது எல்லா இடத்திலும் நடக்கக்கூடிய விஷயம் இல்லை என்றாலும்கூட, இளைஞர்கள் மத்தியில் காதலிக்கிறவன், காதலியோடு இருக்கிறவன், காதலனோடு இருக்கிறவள் சற்று மேம்பட்ட ஓர் ஆளைப்போல முன்னிறுத்தப்படுவதை சில இடங்களில் பார்க்கப்படுகிறது.
காதலை ஓர் ஆழமான உணர்வாக பார்க்கிறவர்கள்கூட ஒரு கட்டத்தில், ஏதேது இந்தக்கூட்டத்துக்குள் நமக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டுமென்றால், யாரையாவது காதலித்தாக வேண்டும் போலிருக்கிறதே? என்று கட்டாயத்தின் பேரில் காதலை உருவாக்கிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அப்படியான காதல்கள் பெரும்பாலும் அவர்களின் சொந்தக் காதலாக இருப்பதில்லை. நெருக்குதலால், சூழ்நிலைகளால் உருவான ஓர் ஏற்பாடாகவே இருக்கிறது.
காதல் ஒரு மெலிதான நாம் புரிந்துகொள்ள முடியாத நுட்பமான ஓர் உணர்வு அப்படிப்பட்ட ஒரு நுட்பமான உணர்வுக்கு நீங்கள் மட்டுமே முழுக்க முழுக்க சொந்தக்காரர். அதை வெளிப்புற நிர்பந்தம் ஒரு நாளும் தீர்மானிக்க முடியாது. நண்பர் வட்டத்துக்குள் ஹீரோயிசம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ செய்யப்படுகிற காவல்கள் நீடித்து நிலைப்பது இல்லை.
வாழ்க்கை முழுக்க நீங்கள் சேர்ந்து பயணிக்கப்போகிற மனிதரை நீங்கள் தேர்வு செய்கிறபோது, உங்கள் மனதிடம் கேளுங்கள். எந்த நிபந்தனையும் இல்லாமல், உங்களுக்கு அவர்மீது பிரியம் இருக்கிறதா?, என்பதை ஆழமாக கவனித்துப்பாருங்கள் யார் பொருட்டும், எவர் பொருட்டும் எவரின் நிர்பந்தத்திற்காகவும், உங்களுக்கே உங்களுக்கான காதல் என்னும் நுட்பமான அற்புதமான உணர்வை விட்டுக்கொடுக்காதீர்கள் ஆழமாய் யோசியுங்கள், உங்கள் மனதோடு பேசுங்கள், திணறத் திணறக் காதலியுங்கள்.