மாற்றி யோசி: மூடிய கதவைக் கண்டு துவண்டுவிடாதே, புதிய வாய்ப்பை காண கற்றுக்கொள்!

சிக்கலில் சிக்கும்போதெல்லாம் ‘மாற்றி யோசி’ என்ற மந்திரச் சாவியைப் பயன்படுத்தி, சூழ்நிலையை வித்தியாசமாக அணுகினால் சாதாரண முடிவும் வெற்றிக்கான திருப்பமாக மாறலாம்
Woman Thinking
Think Differently | Motivational StoryCredit: AI image
Updated on

வாழ்க்கையில் பல சமயங்களில் சரியான முடிவை எடுப்பதில் சில சிக்கல்களும் குழப்பங்களும் வருவது இயற்கைதான். அப்போதுதான் நாம் 'மாற்றி யோசி' என்ற மந்திரச் சாவியை(think-differently) உபயோகிக்க வேண்டும். உதாரணமாக, அலுவலகத்தில் நடத்தப்படும் ஒரு கருத்தரங்கில் (Workshop), ஒரு புதிருக்கு எல்லாரும் ஒரே மாதிரியான தீர்வைத் தரும்போது, ஒருவர் மட்டும் தனித்துவமான தீர்வைத் தருவதால் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றார்.

ஒவ்வொரு சவாலுக்கும் ஒரு தீர்வு உண்டு. அதை எப்படி, எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நம் திறமையும் புத்திசாலித்தனமும் அடங்கியுள்ளன. நமக்குத் தெரிந்த ஆன்மீகக் கதையே அதற்குச் சாட்சி. சிவன், தன்னிடமிருந்த மாம்பழத்தை, "உலகை யார் முதலில் சுற்றி வருகின்றார்களோ அவர்களுக்குத் தான் இந்தக்கனி" எனக் கூறிவிட்டார்.

உடனே முருகர் தன் மயில் மீதேறி உலகைச் சுற்றிவரக் கிளம்பிவிட்டார். ஆனால் பிள்ளையாரோ, "அம்மையப்பன் என்றாலே அகிலம் தானே!" எனக் கூறி, பெற்றோரைச் சுற்றி வந்து கனியையும் பெற்றுவிட்டார். சூழ்நிலைக்கு ஏற்ப, வித்தியாசமாக யோசித்ததாலேயே அவருக்கு வெற்றி கிட்டியது.

குழந்தைகளிடம் ஒரு கதையைக் கூறிவிட்டு, "இதன் முடிவு எப்படி இருக்கும்?" எனக் கேட்டால், நாம் எதிர்பார்க்காத கோணங்களில் இருந்தெல்லாம் பதில் சொல்லுவார்கள். ஒரே முடிவை எல்லாரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் மனம் மாசற்றதாகத் தெளிவாக இருப்பதால், அவர்களுக்குள் வித்தியாசமான எண்ணங்கள் தோன்றுகின்றன.

கணவரின் பணியிட மாற்றத்தினால் புதிய இடத்திற்கு வந்த தீபா, தன் குழந்தையை அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் நர்சரி வகுப்பில் சேர்ப்பதற்குச் செல்கிறாள். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே சேர்க்கை (Admission) முடிந்துவிட்டதால், பள்ளியில் இடமில்லை எனக் கூறி விடுகின்றனர்.

எதேச்சையாக, பள்ளியில் இருந்த விளம்பரப் பலகையில் "நர்சரி வகுப்பிற்கு ஆசிரியர் தேவை" என்ற விளம்பரத்தைப் படித்தாள். அதற்கான படிப்பும் அனுபவமும் அவளிடம் இருந்ததால், "நாமே ஏன் இதில் முயற்சிக்கக் கூடாது?" என்று எண்ணினாள். அடுத்த நாளே வேலைக்கான விண்ணப்பத்தையும் சமர்ப்பித்தாள். நேர்காணல் முடிந்து அவளுக்கு வேலையும் கிடைத்தது. பள்ளி ஆசிரியர் என்ற தகுதியில், அவளது குழந்தைக்குப் பள்ளியில் இடமும் கிடைத்தது! சோர்ந்துவிடாமல் சரியான சமயத்தில் மாற்றி யோசித்தது தான் இதில் உள்ள சிறப்பு.

படிப்பு, வேலை என எல்லாவற்றிலும் நாம் சில முன்முடிவுகளை மனதில் வைத்திருப்போம். நாம் எண்ணியபடி அது கிடைக்கவில்லை என்றால் உடனே துவண்டு விடுகிறோம். நம் மனம், கல் எறிந்த குளம் போலக் கலங்கிப்போகிறது. இது போன்ற சமயங்களில் தான் நாம் நிதானமாகவும், தெளிவாகவும், வித்தியாசமாகவும் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குட்டி ஸ்டோரி: எதையும் சமாளிக்கும் திறமை இருந்தால் வெற்றி நிச்சயம்!
Woman Thinking

"ஒரு கதவு மூடினால், மறு கதவு திறக்கும்"

என்ற வாசகத்திற்கு ஏற்ப, மூடிய கதவையே பார்த்துக் கொண்டு கவலைப்படுவதில் ஒரு பயனுமில்லை என்பதை உணர்ந்து கொள்வதே அடுத்த கட்டத்திற்கான முதல் படி.

உதாரணமாக, நீட் (NEET) தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால், அங்கேயே முடங்கிவிடாமல் மருத்துவம் சார்ந்த (Paramedical / Allied Health Sciences) ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்து முன்னேறலாம். நம்மைச் சுற்றி நிறைய வாய்ப்புகள் உள்ளன என்பதை உணர்ந்து கொள்வதே புத்திசாலித்தனம்.

மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசமே சிந்தித்துச் செயல்படுவது தான். எனவே, செம்மறி ஆட்டுக் கூட்டம் போல எல்லாரும் ஒரே திசையை நோக்கிச் சிந்திக்காமல், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப, நேர்மறை சிந்தனையோடு (Positive Thinking) மாற்றி யோசித்து வாழப் பழகிக்கொள்வதே சாலச்சிறந்தது!

logo
Kalki Online
kalkionline.com