எனக்கு மட்டும் பிரச்னைகள் தொடர்ந்து வருகிறதே என்று சிலிர்த்துக் கொள்ளுகிறீர்களா? அவன் மட்டும் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறானே என்று நினைப்பீர்கள். உங்களைச் சுற்றி நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் உங்கள் மனம் எதை விரும்புகிறதோ அதை மட்டும் உங்கள் கவனத்திற்கும் கொண்டு வருகிறது. உங்கள் மூளை Reticular activating system RAS பகுதியில் இருக்கும் இதுதான் அதைச் செயல்படுத்துகிறது.
ஒரு செகரடரி தன் மேலதிகாரியைப் பார்க்க எத்தனை பேர் வந்தாலும் அவர் அழைப்பவரை மட்டுமே சந்திக்க அனுப்புவதைப் போல் நீங்கள் அறிந்தோ அறியாமலோ எதைப்பற்றி எண்ணுகிறீர்களோ அதையே உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும். நல்லது கெட்டது ஆராயாமல் Law of Attraction மூலம் அதை உங்கள் முன் நிறுத்தும்.
காட்டில் வேட்டையாடிய களைப்பில் வேடன் ஒரு மரத்தின் அடியில் நின்றான். ஒரே பசியாக இருக்கிறதே உணவு கிடைத்தால் நல்லது என நினைத்தான். உடனே உணவு கிடைத்தது. நல்லமெத்தை இருந்தால் தூங்கலாமே என்று நினைக்க மெத்தை வந்தது. அது விசேஷ மரம் என்பது அவனுக்குத் தெரியாது. பிறகு இப்படி கேட்டதெல்லாம் கிடைக்கிறதே இந்த நேரத்தில் ஒரு புலி வந்து என்னை தின்று விட்டால் என நினைக்கும் போதே புலி அவனை அடித்துக் கொன்றது.
எனவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு எல்லாமே எளிதாக கிடைக்கிறது. நல்ல நண்பர்கள் உள்ளார்கள். போதிய வருமானம் இருக்கிறது என்று நினையுங்கள். இந்த RAW உங்கள் எண்ணத்தை ஊர்ஜிதப்படுத்தும் விதமான சூழல்களை உங்கள் கவனத்திற்கும் கொண்டு வரும். அப்படி இல்லாமல் எல்லாமே சிரமம் ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது என்றெல்லாம் நினைத்தால் அப்படிப்பட்ட செயல்களையும் சூழல்களையுமே உங்கள் முன் நிறுத்தும். ஒரு முக்கியமான விஷயம். நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ. அதைத் தருவதோடு மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வராமல் மறைத்துவிடவும் செய்யும். உதாரணத்திற்கு உங்களைச் சுற்றி நீல நிறப் பொருட்கள் எத்தனை இருக்கின்றன என்று தேடுங்கள். நீல நிறத்தைத் தேடும்போது மஞ்சள் வண்ணம் பார்த்தீர்களா? இதற்கு யாராலும் விடை சொல்லமுடியாது. நீங்கள் நீல நிறத்தைத் தேடும்போது உங்கள் கண்களில் நீல நிறப் பொருட்கள் மட்டுமே கண்ணில்படும். மற்ற எல்லாவற்றையும் உங்கள் ஆழ்மனம் தவிர்த்து விடும். எதிர்மறை எண்ணத்தால் ஏற்பட்ட பிரச்னை இன்று உங்கள் வாழ்க்கை முறையாக இருக்கிறது என்றால் நாளைய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை நேர்மறை எண்ணங்களால் தீர்மானியுங்கள்.
எது கடினமானது, பிடிக்காதது, வாழ்க்கையில் நடக்கவே கூடாது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்காமல் உங்களுக்குத் தேவையானவற்றில் நடந்த நல்லவற்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதனால் உங்கள் நேர்மறை எண்ணங்கள் வலுவாகும. அதன் பலனாக நல்லதே நடக்கும். நீங்கள் விரும்பும் வாழ்க்கை உங்களைத் தேடி வரும். மனதின் திறன்தான் மகிழ்ச்சியை வரவழைக்கும உண்மையான மந்திரம். அதை உணர்ந்தாலே உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திருக்கும்.