சாபத்தையே சாதகமாக்கிக் கொண்ட வானரங்கள்!

Saabathaiye Sathagamaakki konda Vanarangal
Saabathaiye Sathagamaakki konda Vanarangalhttps://www.dailymotion.com

நாம் அநேக புராணக் கதைகளை படித்திருக்கிறோம். அதில் முனிவர்கள்,  தங்களுக்குப் பிடிக்காத காரியத்தை ஒருவர் செய்துவிட்டால், 'பிடி சாபம்' என்று கூறி சபித்து விடுவார்கள் என்பதையும் அறிந்திருக்கிறோம். ஆனால், அப்படி கொடுக்கப்பட்ட சாபமானது சிலருக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்து விடுவதும் உண்டு.

அகஸ்திய முனிவரின் பிரதான சீடர்களில் ஒருவர் சுதீட்சண முனிவராவார். இவர் பெருமாளின் தீவிர பக்தர். அம்முனிவர் பெருமாளின் அம்சமான சாளக்ராமங்களை தினமும் பூஜித்த பின்பு  உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் அவர், பீடத்தில் இருந்த சாளக்ராமங்களைக் காணாமல் மிகவும் அதிர்ச்சியுற்றார். எங்கு தேடியும் சாளக்ராமங்கள் கிடைக்கவில்லை. பகவானிடம், 'அவை  கிடைக்க நீங்கள்தான் வழி செய்ய வேண்டும்' என்று மனமுருக வேண்டிக் கொண்டார்.

முனிவர்,  தினமும் அருகில் இருந்த நீர்நிலையில் இருந்து நீர் கொண்டு வந்துதான் பூஜைகளைச் செய்வது வழக்கமாக இருந்தது. அப்படி அவர் நீரை எடுக்கச் சென்ற சமயம், நீர்நிலையில் தண்ணீர் வற்றிப்போய், நடுவில் குட்டை போல சிறிது நீர் தேங்கியிருந்தது. அவர் அந்த தேங்கி இருந்த தண்ணீரில் குடத்தை விட்டு நீரை எடுத்தார். எப்பொழுதும் போல் அல்லாமல் இப்போது அந்தக் குட நீர் கொஞ்சம் கனமாகத் தெரிந்தது. என்னவென்று பார்த்தபொழுது  சாளக்ராமக் கற்கள் அந்த நீரில் இருந்தது தெரிய வந்தது. ஆஸ்ரமத்திற்கு எடுத்து வந்து, மீண்டும் பூஜையில் வைத்தார்.

திடீர் திடீரென்று அந்த சாளக்ராமங்கள் காணாமல் போவதும்,  தேடிக் கொண்டு போனால் அவை  நீர் நிலையில் கிடைப்பதும் ஒரு எதிர்பாராத நிகழ்வாகவே நடந்து வந்தது.

ஒரு நாள் முனிவரின் பூஜை அறையில் பாத்திரங்கள் உருளும் சப்தம் கேட்டது. அவர் சென்று பார்த்தபொழுது, பூஜை அறையில் இருந்த இரண்டு சாளக்ராமங்களை இரண்டு குரங்குகள், ஆளுக்கு ஒன்றாக, தலைக்கு மேல் வைத்துக் கொண்டு  ஓடுவதையும், அவற்றை  நீர் நிலையில் எறிவதையும் கண்டார்.

முனிவருக்கு மிகுந்த கோபம் உண்டானது. சாளக்ரமங்கள் அடிக்கடி காணாமல் போவதற்கு இந்தக் குரங்குகள்தான் காரணம் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டார். ஆனால், குரங்குகளை சபித்து என்ன செய்வது? வாயில்லா ஜீவன்கள் என்று மனதில் ஒரு பரிதாப எண்ணமும் கூடவே எழுந்தது. அதனால் அவர், தனக்கு சாதகமான ஒரு சாபத்தை அந்தக் குரங்குகளுக்குக் கொடுத்தார். அதாவது, 'நீங்கள் இருவரும் இனி நீரில் எறியும் எந்தப் பொருளும் மூழ்காமல் மிதக்க ஆரம்பிக்கும்' என்றார்.

அன்று முதல் அந்தக் குரங்குகளால் எறியப்படும் சாளக்ராமங்கள் நீரில் மூழ்காமல் மிதக்க ஆரம்பித்தன. முனிவர் அதை சுலபமாக எடுத்துக்கொண்டு வந்து மீண்டும் பூஜை செய்வது வழக்கமாக ஆகிப்போன ஒன்றானது.

இதையும் படியுங்கள்:
என்றென்றும் பயன் தரும் 20 மருத்துவக் குறிப்புகள்!
Saabathaiye Sathagamaakki konda Vanarangal

இப்படி சுதீட்சண முனிவரால் சாபம் பெற்ற அந்த இரு வானரங்கள் யார் என்று தெரியுமா? சுக்ரீவனின் படைத் தலைவர்களாக இருந்த நளனும்,  நீலனும்தான். ராவணன், சீதையை அபகரித்து இலங்கையில் சிறை வைத்தபொழுது, ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை வரை கடற்பாலம் கட்ட வேண்டிய ஒரு அவசியம் நேர்ந்தது. நளனும், நீலனும் முனிவரிடம் பெற்ற சாபத்தை,  அனுமான் இராமபிரானிடம் கூறினார். 'அவர்கள் கற்களை கடலில் போட்டால் அவை மூழ்காமல் மிதக்கும். கடலைக் கடக்க ஏதுவாக இருக்கும்' என்றார். இராமபிரானும், பிற வானரங்களிடம், 'நீங்கள் பாறைகளை எடுத்து வந்து  நளனிடமும்,  நீலனிடமும் கொடுங்கள். அவர்கள் அவற்றை சமுத்திரத்தில் எறியட்டும்' என்று சொல்ல, மற்ற வானரங்களும் அப்படியே செய்தன.

இதனால் சேது சமுத்திர கடற்பாலம் சுலபமாகக் கட்டப்பட்டது. இராமன்,  சேனைகளுடன் இலங்கை சென்று ராவணனை வென்று, சீதா மாதாவை மீட்டு வந்தார் என்பது எல்லோரும் அறிந்த கதைதானே. சுதீட்சண முனிவர் வானரங்களுக்குக் கொடுத்த சாபம், இராம கைங்கரியத்திற்கு உறுதுணையாக இருந்து, நன்மையிலும் முடிந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com