இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன். ஆனால்...

Motivation Image
Motivation ImageImage credit - pixabay.com

-முனைவர் என்.பத்ரி

நாம் எப்போதும் பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய தேவையில் இருக்கிறோம். அதனால்தான் பிறரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றி மகிழ்ச்சியாக வாழ்கிறோம். நம் இதயங்களில் தினமும் ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்தும், வளர்ந்தும் வருகின்றன. எதிர்பார்ப்பு என்பது அடிப்படையில் நமக்கு இருக்கும் ஓர் ஆசை. நமது இறைவழிபாட்டில்கூட ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.

நமது வாழ்வின் உறவுகள் பல்வேறு எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. ஒரு குடும்பத் தலைவனின் எதிர்பார்ப்பும், குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளும் வெவ்வேறானவை. நம் பெயரையும், மரபையும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்த்து அடுத்த தலைமுறையைப் பெற்றெடுக் கிறோம். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறோம். நம் துணையானாலும், நம் குழந்தையானாலும் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி நபர்களே. அவர்களுக்கென்று தனியே மூளை உள்ளது. அவரவர்களுக்கென்று தனித்தனியே ஆசைகளும், சிந்தனைகளும், அனுபவமும் உண்டு. எனவே, எதிர்பார்ப்புகளும் வேறுபடுகின்றன. இதை நம்மால் தவிர்க்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்வதே நல்லது.

மற்றவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றும், வாழ்வின் நிகழ்வுகள் இப்படித்தான் நிகழ வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால், அவ்வாறு எதுவும் நிகழ்வதில்லை. இங்குதான் ஏமாற்றத்திற்கான திறவுகோல் உருவாகிறது.

எதிர்பார்ப்புகள் நமது சூழ்நிலைக்கும், திறமைகளுக்கும் உட்பட்டவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவை நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பிறரின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நாம் நிறைவேற்றுவதும், நம்முடைய எதிர்பார்ப்புகளை பிறர் நிறைவேற்றுவது என்பதும் என்றும் நடவாத செயலே ஆகும்.

தனிப்பட்ட உறவுகளில் அழகான எதிர்பார்ப்புகள் நம்மை ஒன்றாக இணைக்கின்றன. இது நமது வாழ்வில் வளர்ச்சிக்கு ஊக்கியாக செயல்படுகின்றன. ஆனால், அதிக எதிர்பார்ப்பும், தவறான எதிர்பார்ப்பும் உறவின் மிகப்பெரிய எதிரிகள் ஆகும். அது நம் உறவின் அழகை அழித்து, நம்மை அமைதியாகக் கொன்றுவிடும்.

வாழ்க்கை ஒரு மறை பொருள். அது நிகழ்வு நடைபெறும் இறுதி கணம் வரை ரகசியம் காக்கிறது.  நம் வாழ்வை நம் அனுபவங்கள்தான் செம்மைப்படுத்துகின்றன. நாம் வெவ்வேறு வாழ்க்கைமுறைகளைக் கொண்டவர்கள். அதனால், வெவ்வேறு அனுபவங்களைப் பெறுகிறோம். சிலர் வாழ்வில் வெற்றி பெறுகிறோம். சிலர் தோல்வியைச் சந்திக்கிறோம்.

வெற்றியை எதிர்பார்க்கும்போதே, அது கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமும் நம்மைத் தொடர்ந்து வருகிறது. எதிர்பார்ப்பு எங்கே இருந்தாலும், அங்கே ஏமாற்றமும் கூடவே இருக்கும். ஏமாற்றம் தரும் எரிச்சலின் வீச்சு நீளமானது. காத்திருக்கப் பொறுமையில்லாததால், நம் கவனம் சிதறுகிறது. எதைச் செய்ய வேண்டியிருந்தாலும், இதனால் நமக்குப் பலன் என்ன கிடைக்கும் என்று நம்மையறியாமல் மனம் எதிர்பார்க்கத் தொடங்குகிறது.

வெற்றியும், தோல்வியும் ஒரே நாணயத்தின் இருவேறு பக்கங்கள்தான். சுண்டிவிட்ட நாணயத்தின் எந்தப் பக்கம் விழப்போகிறது என்பது புரியாமல், ஒரு விதப்பதற்றத்தில் வாழ்க்கையைக் கடத்துவது நமக்குப் பழக்கமாகிவிட்டது. அந்தப் படபடப்பை ரசிக்கக் கற்றுக் கொண்டுவிட்டோம். ஆனால், எதிர்பார்க்காத முடிவுகள் ஏற்படும்போது, அதை ரசிக்க நாம் கற்றுக்கொள்வதில்லை. எதிர்பார்ப்புகளே இல்லாமல் நம்மால் வாழ இயலாது. ஆனால், எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ள முடியும்.

ஏமாற்றங்கள் நம்முடைய மகிழ்ச்சியைப் பறித்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காதல் தோல்வி அடையும் போதும், மணவாழ்வு முறிந்துபோகும்போதும், பிள்ளைகள் அடங்காதபோதும், வியாபாரத்தில் கூட்டாளி துரோகம் செய்யும்போதும், நண்பன் நன்றி கெட்டத்தனமாய் நடந்து கொள்ளும்போதும், முதுமையில் தனித்து விடப்படும் போதும் நமக்கு ஏமாற்றம் ஏற்படும்தான்.

இதையும் படியுங்கள்:
விழித்திருந்தால் வெற்றி நிச்சயம்!
Motivation Image

குற்றங்கள் செய்பவர்கள் அதிகமாகி வரும் இக்காலத்தில் நாம் வாழ்வதால் ஏமாற்றம் என்பது தொடர் கதையாகத்தான் இருக்கும். ஏமாற்றத்தின் காரணமாக வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிப்போடும் சம்பவங்களும் நடக்கலாம். திடீரென வேலை பறிபோகலாம். மணத்துணையை இழக்கலாம். பெற்றிருந்த பொறுப்புகள் இல்லாமல் போகலாம். உடல் ஆரோக்கியம் குறைவுபடலாம். வாழும் வீடு கையைவிட்டுப் போகலாம். நண்பர்களை இழக்கலாம்.

வெற்றிச் சிகரத்தை எட்டும்போது ஏமாற்றங்கள் எனும் சிராய்ப்புகள் ஏற்படுவது இயல்பானதே. இவை தவிர்க்க முடியாதவை என்பதை நினைவில்கொள்வோம். எதிர்ப்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டால் ஏமாற்றங்களும் குறையும்தானே! எதிர்ப்பார்ப்புகளைக் கட்டுப்படுத்தி வாழ்வில் வெல்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com