
வாழ்க்கையில் சிறிய விஷயங்களுக்கும் நேரம் ஒதுக்குவது மிகவும் முக்கியம். சின்ன சின்ன விஷயங்களில் கிடைக்கும் மகிழ்ச்சி, மன அமைதி நம்முடைய ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பங்களிக்கும். எவ்வளவுதான் பிசியாக இருந்தாலும், பெரிய வேலைகளுக்கு இடையிலும் சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவது மன அழுத்தத்தை குறைக்க உதவும். பிடித்த பாடலை கேட்பது, நல்ல புத்தகங்களை படிப்பது போன்ற செயல்கள் நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
சிறிய விஷயங்களில் கூட கவனம் செலுத்துவது நம்முடைய நினைவாற்றலை அதிகரிக்க உதவும். புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதும், சின்ன சின்ன விஷயங்களை ஞாபகம் வைத்து செய்வதும், பிறரின் சின்ன சின்ன செயல்களைக் கூட கூர்ந்து கவனித்து பாராட்டுவதும் நமக்கு சந்தோசத்தையும் மன அமைதியையும் தரும். இப்படி சிறிய விஷயங்களில் கிடைக்கும் மகிழ்ச்சி வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும்.
சின்ன சின்ன விஷயங்களில் பாராட்டு பெறுவதும், பிறரை நாம் பாராட்டுவதும் என கவனம் செலுத்துவது மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை மேம்படுத்தும். தனிமையை தவிர்க்க உதவும். ஒரு நாளைக்கு ஒருசில நிமிடங்களாவது ஒதுக்கி நமக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபடுவது மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தி ஆக்கப்பூர்வமான ஏதேனும் ஒரு செயலை, உதாரணத்திற்கு புதிய பாடலை இயற்றுவது, புதிய நண்பர்களை பெறுவது, புதிய கதையை எழுதுவது அல்லது ஒரு புதிய கலைப் பொருளை உருவாக்குவது என செயல்களில் ஈடுபட நம் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும். இதன் மூலம் வாழ்வில் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து மகிழ்ச்சியுடன் வாழ முடியும். புதுசா கெத்தா ஸ்டைலா நிறைய விஷயங்கள் பண்ணலாம். இது வாழ்வில் சுவாரசியத்தை கூட்டும். நல்ல மனநிலையுடன் செயல்பட தொடங்குவோம்.
வழக்கமான பாதையில் செல்வதை விட்டு புதிய வழியில் செல்வது, புது நண்பர்களுடன் உணவருந்த செல்வது, பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவனம் செலுத்துவது என்று சின்ன சின்ன விஷயங்களிலும் சிறு மாற்றத்தை ஏற்படுத்தினால் மனதில் மகிழ்ச்சி தழும்புவதுடன் உடலும் புத்துணர்ச்சி பெறும். பேச்சு என்பது ஒரு தனிக்கலை. ஆனால் பெரும்பாலான நேரங்களில் இந்தக் கலையை நாம் சரியாக பயன்படுத்துவதே இல்லை என்பதுதான் உண்மை.
நாம் பேசும் ஒவ்வொரு சொல்லும் நம்மை அடையாளப்படுத்தக் கூடியவை என்பதை மறக்கவேண்டாம். எனவே எப்பொழுதும் நல்லவிதமான வார்த்தைகளையே தேர்ந்தெடுத்து பேசவேண்டும். அது நம்மைச் சுற்றி உள்ளவர்களை உற்சாகப்படுத்துவதுடன் நம்மையும் நல்ல மனநிலையில் வைத்துக்கொள்ள உதவும்.
வாழ்வு சிறக்க இனியாவது நாம் சின்ன சின்ன விஷயங்களுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே!