
மாறிக் கொண்டே இருக்கும் உலகத்தில் மாறாதது மாற்றம் ஒன்றே ஒன்று தான்!
ஓடிக் கொண்டே இருக்கும் உலகத்தில் அதன் வேகத்துடன் ஓடிக் கொண்டே இருப்பவன் தான் வெற்றி பெற முடியும்.
இதைத் தான் இந்து மத சாஸ்திரங்கள் மிக அழகாக ஒரு சூத்திரத்தின் மூலமாக விளக்கின.
“செத்த குதிரை மீது சவாரி செய்யாதே” ('DON’T RIDE ON A DEAD HORSE!') என்பது தான் அந்த அற்புதமான சூத்திரம். இதை ஆங்கிலத்தில் மேலாண்மை நிர்வாகத்தில் 'DEAD HORSE THEORY' என்பார்கள்.
குதிரை ஓடவில்லை!
என்ன ஆயிற்று என்று பார்த்தால் அது இறந்து விட்டது. உடனே கீழே இறங்கி விட வேண்டும். இன்னும் அதன் மீது உட்கார்ந்து சவாரி செய்யப் பார்க்காதே! – இது தான் அனுபவம் வாய்ந்த சாஸ்திரத்தின் அறிவுரை.
உதாரணத்திற்கு கோடக் கம்பெனியை எடுத்துக் கொள்ளலாம். அற்புதமான போட்டோ உலகில் அது முன்னணியில் கம்பீரமாக வலம் வந்தது.
ஆனால் இந்தத் துறையில் ஏராளமான நவீன உத்திகள் தோன்றும் போது அது அசட்டையாக இருந்து விட்டது. விளைவு, 2012ல் அது திவாலாக நேர்ந்தது.
ப்ளாக்பஸ்டர் என்ற வீடியோ கம்பெனி நிலையும் இது போலவே ஆனது. சந்தையில் ஏராளமான நிறுவனங்கள் போட்டிக்கு வரவே இது சந்தையின் நிலைமை புரியாமல் தலைகீழாக விழுந்தது.
இப்போது பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் நீங்கள் எந்த மளிகை மற்றும் ஸ்டேஷனரி சாமான்களைக் கேட்டாலும் 15 நிமிடத்தில் வீட்டிற்கே வந்து டெலிவரி ஆகிறது – Big Basket போன்ற இந்த அதிவேக டெலிவரி சூரன்களால் ஏராளமான சிறிய ஸ்டோர்களும் ஏன் சின்னச் சின்ன மால்களுமே மூடப்பட்டு விட்டன.
மூடிய கம்பெனிகளும் கடைகளும் செத்த குதிரை மீது சவாரி செய்ததால் ஒரு அடி கூட முன்னேறவில்லை!
ஆகவே என்ன செய்வது? தொடர்ந்து முன்னேற்றத்திற்கான சோதனைகளைச் செய்தால் தான் முன்னேற முடியும்; முன்னணியில் நிற்க முடியும்.
சற்று குதிரை மெதுவாக ஓடினால் என்ன செய்வது?
நல்ல சவுக்கை வாங்கி அடிக்க வேண்டும்.
சவாரி செய்பவரை மாற்ற வேண்டும்.
குதிரையையே விலக்கி ஓரங்கட்ட வேண்டியது தான்.
ஒரு கமிட்டியை நியமித்து குதிரை மற்றும் சவாரிக்காரரைப் பற்றி ஆராய வேண்டியது தான்.
மற்ற குதிரை சொந்தக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என்று உன்னிப்பாகப் பார்த்துப் பாடம் கற்கலாம்.
குதிரை சவாரியையே காண்ட்ராக்டுக்கு விட்டு விடலாம்.
குதிரைக்குச் சத்துள்ள உணவு போட்டு ஊக்குவிக்கலாம்.
குதிரைக்கு மேனேஜர் பிரமோஷன் கொடுத்து அதை உட்கார வைத்து விட்டு சின்ன இளமையான குதிரைகளை ஓட்டலாம்.
இது தான் இன்றைய மேலாண்மை நிர்வாகத்தின் பொதுவான சிந்தனைப் போக்கு!
நிறுவனங்கள் அனைத்துமே பொதுவாக செத்த குதிரை மீது சவாரி செய்வதை விரும்புவதில்லை – இந்த நவீன போட்டி மயமான உலகில்.
சரி, இது நிறுவனங்களுக்கு மட்டுமான உவமானமா? இல்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் அதில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் இது பொருந்தும்.
அன்றாடம் வீட்டை விட்டு வெளியில் வந்து குதிரையின் மீது ஏறும் போது – அது தான் சார், வெளியில் வந்து காலை வைக்கும் போது - கண்களை அகல விரித்துப் பார்க்க வேண்டும். செவிகளை உன்னிப்பாக வைத்துக் கேட்க வேண்டும். பார்க்கும் காட்சிகளை மனதால் அலசி ஆராய வேண்டும். தனது குதிரை உயிரோட்டமுள்ள குதிரையா அல்லது செத்த குதிரையா என்று பார்த்து விட்டு, அதன் மீது சவாரி செய்வதைப் பற்றி உடனுக்குடன் முடிவு எடுக்க வேண்டும்.
இது தான் இன்றைய உலகில் வெற்றிகரமாக வாழ ஒரே வழி!
அடடா! உங்களுடன் பேசிக் கொண்டே இருந்ததில் நீங்கள் சற்று முன்னால் போவதைக் கவனிக்கிறேனே! இருங்கள் என் குதிரையை கழட்டி விட்டு வேறு குதிரை மீது சவாரி செய்து உங்களை முந்துகிறேன்!