
பேச்சுத்திறன் என்பது உங்களின் ஆளுமைக்கு முக்கியத்துவம் தரக் கூடிய அம்சம். தன்னை தெளிவாக வெளிப்படுத்திக் கொள்கிறவர்கள் அடுத்தவரை எளிதில் வெற்றி கொள்ள முடியும். மனிதர்களை கட்டிப்போடும் சக்தி வார்த்தைக்கு உண்டு. கேட்கிறவர்கள் எந்த அளவுக்கு உங்கள் பேச்சால் கவரப்பட்ட இருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது சுற்றிப் பார்த்தே புரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அதனால் பேச்சின் தாக்கம் போய்விடும்.
கேட்கிற கூட்டம் எத்தனைக்கு பெரிதாக இருக்கிறதோ அத்தனைக்கு சிறப்பாக பேசுவான் நல்ல பேச்சாளர். கற்றுக்குட்டி பேச்சாளனுக்கு கூட்டத்தைப் பார்த்தாலே உதறலெடுக்கும் என்கிறார் மெக்காலே. நல்ல பேச்சின் பிரதான குணமே கேட்கிறவரை ஒப்புக் கொள்கிற மாதிரி செய்து விடுவதுதான்.
உணர்ச்சிவசமான ஆடியன்ஸ் ஆகா என்று தலையாட்டும். இந்த ஆள் எனக்காகப் பேசவில்லை. நமக்காகப் பேசுகிறான் என்று மக்கள் முடிவுகட்டும் நிலை வரும்போது பேச்சாளர் அவர்களின் தலைவன் ஆகிறான்.
குறைவான நபர்கள் மத்தியில் பேசும்போது அவன் தன் பேச்சு முறையை மாற்ற வேண்டியிருக்கும். கேள்விகளுக்கும், கருத்து மோதல்களுக்கும் தன்னை தயார்படுத்திக்கொண்டால் அதுவே பாதி வெற்றியைத்தரும்.
நீங்கள் சொல்ல வந்ததை தெளிவாக வெளிப்படுத்தாத நிலையில் அது மோசமான பேச்சாக அமைந்து விடும். பொது வாழ்வில் ஆகட்டும், தனிப்பட்ட முறையில் ஆகட்டும். தகவலை முறையாக கொடுக்க முடியவில்லை என்றால் அவருடைய பேச்சு மோசமானதுதான்.
வார்த்தைகளில் வலிமையும் நேரத்தின் அருமையும் உணர்ந்தவர்தான் நல்ல விதமாகப் பேசமுடியும். சிலர் எடுத்ததுமே டக்கென்று விஷயத்துக்கு வந்து விடுவார்கள். ஒரு மரியாதை நலம் விசாரிப்பு வாழ்த்து எதுவுமே இருக்காது. இது எதிராளிக்கு உத்தரவிடும் மோசமான பேச்சாகும்.
உங்கள் பேச்சின் நடுவே கொஞ்சம் தமாஷ்களையும் கலந்து கொள்ளுங்கள். எதிராளி சுவாரஸ்யமாகி விடுவார். ஆர்வமின்மை என்கிற போக்கு பேச்சின் நோக்கத்தையே மாற்றிவிடும். பேச்சில் ஒன்றிவிடுபவரால்தான் ரசிக்கவும் சிரிக்கவும், கைதட்டி பாராட்டவும் முடிகிறது. இதற்கு மேல் பேச நம்மிடம் எதுவுமில்லை என்கிற நிலையில் உங்கள் பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள். அடுத்தவர் பேச்சைக் கவனியுங்கள். புதிய விஷயங்களை கிரகித்துக் கொள்ளமுடியும்.