
தவறுகள் செய்யாமல் இருப்பது நாம் எந்த ஒரு செயலிலும் தேவையான முயற்சிகள் எடுக்காததையே காட்டும். தவறுகள் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம். எந்தவித முயற்சியும் இல்லாமல் நம்மால் எதையும் சாதிக்க முடியாது. அப்படி முயற்சி செய்யும் பொழுது தவறுகள் நேரத்தான் செய்யும். உலகில் உள்ள மிகப்பெரிய கண்டுபிடிப்புகள், சாதனைகள் அனைத்துமே தோல்விகள் மற்றும் தவறுகளின் பின்னணியில்தான் தோன்றியவை. கற்றல் என்பது தவறுகளில் இருந்து தான் வரும். அப்படி ஏற்படும் தவறுகளை உணர்ந்து அதனை மாற்றி அமைத்துக் கொண்டு முன்னேறினால் மட்டுமே புதிதாக எதையும் சாதிக்க முடியும்.
எதையும் புதிதாக ஆரம்பிக்கும் பொழுது தவறுகள் எதுவும் நேராமல் இருக்க வேண்டுமே என்று அனைவருக்குமே ஒரு பயம் இருக்கும். தவறுகளை பயப்படாமல் எதிர்கொள்ள பழக வேண்டும். புதிய விஷயங்களை முயற்சிக்கும் பொழுது பெரும்பாலும் தவறுகள் ஏற்படலாம். தவறுகள் ஏற்படுவது கற்றல் செயல்முறையின் இயல்பான பகுதிதான். தவறு செய்யும் பொழுது தான் நாம் நிறைய கற்றுக் கொள்கிறோம். இவைதான் நம்முடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே தவறுகளைக் கண்டு பயப்படக்கூடாது.
சவால்களும், தோல்விகளும் வாழ்வில் இருந்தால்தான் வாழ்க்கை ருசிக்கும். சுவாரஸ்யமாக இருக்கும். அதே போல் இவைதான் நம்மை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும். தவறு செய்யும் பொழுது தான் கற்றுக் கொள்ள முடியும். புதிது புதிதாக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.
தவறுகள் பொதுவாக தவிர்க்க முடியாதவை. ஆனால் அவை புதிய விஷயங்களை செய்யும் பொழுது மட்டும் ஏற்படுவதில்லை. சாதாரணமாக செய்யும் செயல்களில் கூட தவறுகள் நேரலாம்.
வாழ்க்கை என்பது புதிய விஷயங்களையும், புதுப்புது வாய்ப்புகளையும் ஆராய்வது பற்றியதுதான். நாம் முயற்சி செய்வதை நிறுத்தி விடுவதோ, கற்றுக் கொள்வதை விட்டுவிடுவதோ தான் தவறு. வெற்றி தோல்வி என்பது நம்முடைய வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே. அது இலக்கு அல்ல. இரண்டுக்கும் தனித்தனியான முக்கியத்துவம் உண்டு. தவறுகள் செய்யும்பொழுது இன்னும் கடினமாகவும், வலுவாகவும் உழைக்க அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தவறு ஏற்பட்டு விடுமோ என்று புதிய விஷயங்களை ஆராய்வதையும், கற்றுக் கொள்வதையும் ஒருபோதும் நிறுத்தக்கூடாது.
எந்த தவறுகளையும் செய்யாமல் அல்லது தோல்விகளை சந்திக்காமல் வெற்றியை அடைவது நடைமுறையில் சாத்தியமில்லை. தவறுகளை செய்வது கற்றல் செயல்முறை மற்றும் வளர்ச்சியின் ஒரு பகுதியாகும்.
தவறுகள் நமக்கு விலைமதிப்பற்ற கற்றல் வாய்ப்புகளை வழங்குகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு தவறும் எதிர்காலத்தில் எதை செய்யக்கூடாது என்பதை கற்றுத் தருவதுடன் வித்தியாசமாக நம்மால் என்ன செய்ய முடியும் என்பது பற்றிய நுண்ணறிவையும் தருகிறது.
வெற்றிக்கான திறவுகோல் தவறுகளை முற்றிலும் தவிர்ப்பதில் இல்லை. மாறாக அவற்றை எவ்வாறு கையாளுகிறோம் என்பதிலும், அதிலிருந்து என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதிலும் தான் உள்ளது.
சரிதானே நண்பர்களே!