நீங்க வைராக்கியம் புடிச்ச ஆளா? எந்த வகையில் சேர்த்தி?

Zeal
Zeal
Published on

மனிதப் பிறவி என்பது மகத்தானது! இப்பொழுதிருக்கும் விஞ்ஞான உலகம் அதை மேலும் அபிவிருத்தி செய்து நமக்கு அளிக்கிறது! அரிய இந்தப் பிறவியை நாம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியுடன் கழிக்கிறோம் என்பது அவரவர் மனம் சார்ந்தது!

குறிக்கோளுடன் வாழ்பவர்களே தாங்களும் வாழ்ந்து, தங்கள் குடும்பங்களையும் வாழ வைத்து, குவலயத்திற்கும் வழிகாட்டிகளாக விளங்குகிறார்கள்! அதனால்தான் ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்று நாலடியார் விளம்ப, அதனை ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி ஓட்டும் ஆட்டோவிலும் எழுதினார்கள்!

லட்சியம் அல்லது குறிக்கோளைச் சிறிய வயதிலேயே மனதில் ஏற்றுக் கொண்டு, அதற்காக அயராது உழைப்பவர்கள்தான் உச்சத்தை எட்டிப் பிடிக்கிறார்கள்! அந்த லட்சியம் அடையக் கூடியதாகவும், நியாயமானதாகவும் இருந்து, உறுதியான உழைப்பும் சேர்ந்தால் நிறைவேறியே தீரும் என்பது கண்கூடு! இதனை அன்றாட வாழ்வில் நாம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்!

இதையும் படியுங்கள்:
'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?
Zeal

கிராமங்களில் இவ்வாறு சொல்வார்கள்! அதோ போறானே அவன் ரொம்ப வைராக்கியம் புடிச்ச ஆளு! என்று. அவன் சொன்னா சொன்னதுதான்! உடும்புப் புடிக்காரன்! என்றும் சொல்வதுண்டு! சூப்பர் ஸ்டார் அதனைத்தான் நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்றார்!

குறிக்கோளை அடைய உறுதியான மனநிலை வேண்டும்! உள்ளத்தில் வைராக்கியம் வேண்டும். வைராக்கியம் என்பது தான் நினைத்ததைச் சாதிப்பது அல்லது செயல்படுத்தியே தீர்வது என்ற உறுதிப்பாட்டைக் குறிப்பதாகும்!

நமது முன்னோர்கள் லேசுப்பட்டவர்கள் அல்லர். அந்த வைராக்கியத்தையும் அலசி ஆராயும் திறமை படைத்தவர்கள். அதனால்தான் அந்த வைராக்கியத்தையே மூன்றாகப் பிரித்தார்கள்!

இதிகாச வைராக்கியம், பிரசவ வைராக்கியம் மற்றும் மயான வைராக்கியம் என்பவையே அவை!

இதிகாச வைராக்கியம்:

அந்தக் காலத்தில், கிராமங்களில் கோடை காலங்களில் கோயில் திருவிழாக்களில், இரவில் ராமாயண நாடகங்கள் நடைபெறும். தன் மணி முடியை மனமுவந்து பரதனுக்குச் சூட ராமன் முன் வருவதும், ராமனின் பாதுகைகளை வைத்தே 14 வருடங்கள் பணி புரிவேன் என்று பரதன் சபதமேற்பதும், அண்ணன் கூடவே அடியேன் எப்பொழுதும் இருப்பேன் என்று லட்சுமணன் கானகம் புறப்படுவதும் என்று சகோதர பாசத்தை விளக்கும் காட்சிகளைக் காணும் ஊர் மக்கள், தங்கள் சகோதரர்களுடன் இனியும் சண்டையிடக் கூடாது என்ற மனநிலைக்கு வருவார்களாம்! எது வரை? நாடகம் முடிந்து வீட்டுக்குப் போய் தூங்கி எழும் வரை!அப்புறம்… பழையபடி கத்தியைத் தீட்ட ஆரம்பித்து விடுவார்களாம்! அதுவே இதிகாச வைராக்கியமாம்!

பிரசவ வைராக்கியம்:

பிரசவ வலி வந்து விட்டது! அந்தப் பெண்ணால் வலியைப் பொறுக்க முடியவில்லை! பல்லைக் கடித்துக் கொண்டாலும் அவளையுமறியாமல் கேவல் வெளி வந்து விடுகிறது! ம்! காரணமான கணவனை இனி அருகில் வரக் கூட அனுமதிக்கக் கூடாது என்று மனதிற்குள் வைராக்கியம் வருகிறது. எவ்வளவு நேரம் வரை அது! குழந்தை பிறக்கும் வரைதான்! குவா…குவா சத்தம் கேட்டதும், தன் கணவன்தான் தன்னையும் குழந்தையையும் முதலில் பார்க்க வேண்டுமென்று அந்தப் பெண் பிடிவாதமாக இருக்கிறாள்! பணால்! உடைந்தது வைராக்கியந்தான்!

இதையும் படியுங்கள்:
நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?
Zeal

மயான வைராக்கியம்:

நேற்று வரை நன்றாகத்தான் இருந்தார். நெஞ்சு வலிக்கிறது என்று சொன்னதுமே மருத்துவமனைக்கு விரைந்தனர்! ஊஹூம்! பிரயோஜனமில்லை! வழியிலேயே உயிர் பிரிந்து விட்டது! மயானத்தில், எல்லாவற்றையும் அகற்றிய பிறகு, சிதையில் வைத்து தீ மூட்டி விட்டார்கள்! பார்த்தவர்கள், இதற்குத்தான் இவ்வளவு போராட்டமா? இனி ஆசைகளை வளர்த்துக் கொண்டு, அதற்காகச் சண்டை போடக்கூடாது! என்ற வைராக்கியம் உள்ளுக்குள்ளே! எல்லாம் முடிந்து ஆற்றில் முழுகிக் கரையேறுவதற்குள்ளே, வைராக்கியம் ஆற்று நீரோடு அடித்துக் கொண்டு போக, கரையேறியதும் கத்தியைத் தேடும் உறவுகள்!

இந்த மூன்று வகை வைராக்கியகங்ளையும் தாண்டி முழு மன உறுதியுடன்  செயல்பட்டு உங்கள் லட்சியங்களை அடையுங்கள்! இந்த அரிய பிறவியை அர்த்தமுள்ளதாக்கி மகிழுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com