Motivation article
Motivation articleImage credit - pixabay

நேரம் - அது ரொம்ப முக்கியம்!

Published on

நாம் வாழ்க்கையில் எதை இழந்தாலும், அதனை நாம் திரும்ப பெற்றிட இயலும். ஆனால் நாம் இழக்கும் ஒரு நொடி நேரம் கூட திரும்பி வராது. போனால் போனதுவே. காலம் பொன்னிலும் மேலானது. பொருளிலும் உயர்வானது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இந்த வாழ்வில் நமக்கு என விதிக்கப்பட்ட காலம் குறைவு. மரணம் இன்றும் வரலாம். நாளையும் வரலாம்  நிச்சயம் வரும். அதற்குள் நமக்கு எத்தனை பணிகள்? எத்தனைக் கடமைகள்? கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். காலத்தின் மதிப்பை உணருங்கள்.காலத்தின் மதிப்பு தெரிந்தால் மட்டுமே வாழ்வின் மதிப்பு புரியும்.

நாளை என்பது ஒரு நம்பிக்கை. நாளைய பொழுது விடியும். நிச்சயம் விடியும். ஆனால் நிச்சயமாய் நாம் நாளை இருப்போம் என்று அறுதியிட்டு உறுதியாய் யாராலும் கூற முடியாது. ஒரு இரவில் எத்தனையோ நடக்கலாம். எனவே இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்வோம். ஒத்திவைக்கவே வேண்டாம். அவசர முடிவும் கூடாது. அதே சமயம் தாமத முடிவும் கூடாது. அதனால்தான் நம்மை ஷேக்ஸ்பியர் சற்று எச்சரிக்கிறார் ‘தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும் ' என்று சுட்டிக் காட்டுகிறார்.

சோம்பல் மிகக் கெடுதல். சோம்பேறிகள் எதனையும் சாதிக்க இயலாது.  குடி குடியை கெடுக்கிறதோ இல்லையோ மடி (சோம்பல்) நிச்சயம் குடி கெடுக்கும். சோம்பி நிற்பவன் எல்லாம் இழப்பான். நாளை என்ற வார்த்தை கூட சோம்பலில் பிறப்பதே. பார்க்கலாம், யோசிக்கலாம்... என தள்ளிப் போடுவதும் கூட சோம்பலின் முடிவே.' நன்றே செய்க அதையும் இன்றே செய்க' என்பதே மிகவும் சரியான முடிவு. நேரம் பார்க்காத இன்றைய உழைப்பே நிலையானது. 

இன்று என்பது நம் கையில். அதை பயன் தருவதாய் செலவிட்டு அதோடு வாழ்வின் சுவையை சுகத்தையும் அனுபவிப்போம். நிகழ்காலம் எப்போதும் முக்கியம். இழந்துவிட்ட திரும்பியே வராத கடந்த காலத்தை விட, நாளை என்கிற எதிர்காலத்தை விட இன்று நம் கையில் நம் கையில் இருக்கிற நிகழ்காலம் முக்கியம்.

இதையும் படியுங்கள்:
ரயில் பயணங்கள்- உணர்த்துவது என்ன?
Motivation article

நீங்கள் வாழ விரும்புகிறீர்களா?  வாழ விரும்பினால் நேரத்தை வீணடிக்காதீர்கள். வாழ்க்கை என்பது நேரத்தால் ஆனது.

இது பெஞ்சமின் பிராங்கிளின் கூறியது. வாழ்க்கை என்பது நேரத்தால் ஆனது. நேரம் முடிந்துவிட்டால் நாம் புறப்பட வேண்டியதுதான். வாழ விரும்புகிறவன், வாழ நினைக்கிறவன், வாழ்வை ரசிக்கிறவன், அனுபவிக்க ஆசைப்படுகிறவன், நேரத்தை அதன் சிறப்பை முதலில் அறிய வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com