பயணம் என்பதே உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் அளிக்கக் கூடியது. அது சுற்றுலாவாகவோ, ஆன்மீக யாத்திரையாகவோ, பணி நிமித்தமாகவோ, எதுவாக இருப்பினும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடையச் செய்வது பயணம். அதிலும் ரயில் பயணம் பஸ், கார், பயணங்களை விட சௌகரியமானது, பாதுகாப்பானது, சுவாரசியமானது.
ரயிலில் ஏறியதும், முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை தேடி அமர்ந்து, உடைமைகளை பத்திரப்படுத்தி வைத்து விட்டால் அந்த இடம் சொந்த இடம் போல் ஆகிவிடுகிறது நமக்கு. நம் இருக்கைக்கு எதிரில், அருகில் உள்ள சக பயணிகளுடன் அவர்கள் முன் பின் தெரியாதவர்களாக இருந்தாலும், மெல்ல பேச ஆரம்பித்து, சிரித்து, பழகி சினேகம் ஆகி விடுகிறார்கள்.
குழந்தைகள் தோழர்களாகி விளையாட ஆரம்பித்து விடுவார்கள். பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் எல்லாரும் ஒருவருடன் மற்றவர் அளாவ நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. சில மணி நேரங்களே பழகினாலும், அவரவர்கள் கொண்டு வந்த உணவு வகைகளை கூட பகிர்ந்து கொள்வதும் உண்டு. ரயிலை விட்டு இறங்கும் முன், செல்போன் எண்கள், முகவரிகள் பரிமாறி கொள்வார்கள். ரயில் சினேகம் நிரந்தரம் அல்ல என்று தெரிந்தும், இறங்கும்போது பிரிவு சற்றே பாதிக்கலாம். சிலர் ரயில் சிநேகத்தை ஆயுளுக்கும் தொடர்வதும் உண்டு.
ரயிலில் நம் இருக்கைகளுக்கு இடையில் சின்ன இடமாக இருந்தாலும், குடும்பத்தார் ஒன்று கூடி, கொண்டு வந்த உணவுகளை பகிர்ந்து சாப்பிடும்போது குழந்தைகளும், அவர்களைப் போல பெரியவர்களும் குதூகலிப்பது தனி அனுபவம். சிலர் ரயிலில் வரும் நொறுக்கு தீனிகளையும், உணவு வகைகளையும் ஒரு பிடி பிடிப்பதும் உண்டு.
ஒரு சிலர் ரயிலில் ஏறியதுமே, படுக்கையை விரித்து, அது பட்டப்பகலாக இருந்தாலும், குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்து விடுவார்கள். பெரும்பாலான இளைஞர்கள் செல்போனை நோண்டிக்கொண்டோ, லேப்டாப்பில் படம் பார்த்தவாறோ, பாட்டு கேட்ட படியோ பொழுது போக்குவதும் உண்டு. வாசிப்பை நேசித்தவர்கள் பையில் எடுத்து வந்த புத்தகங்களை எடுத்து படிப்பார்கள்.
ரயில் ஒவ்வொரு நிலையத்தில் நிற்கும் போதும் காபி, டீ என்று கூவி விற்பவர்களின் கோரசாக கேட்கும் குரல். நம்மை சாப்பிடத் தூண்டும். வார, மாத இதழ்கள், பத்திரிகைகள் விற்பவர்களையும் பார்க்கலாம். பிளாட்பாரத்தில் நடக்கும், நிற்கும், இருக்கையில் அமர்ந்து கொண்டும் உள்ள பிரயாணிகள் என்று புது மனிதர்கள், வியாபாரிகளை வேடிக்கை பார்ப்பது ஒரு சுவாரஸ்யம்.
ஜன்னல் ஓரம் அமர்ந்துவிட்டால், பக்கவாட்டில் வேகமாய் கிடக்கும் மரங்கள், வயல்கள், அங்கு வேலை செய்யும் விவசாயிகள், நீர் நிலைகள், தூரத்தில் தெரியும் மலைகள், தோப்புகள், செடி கொடிகள், கிராமங்கள், நகரங்கள், வீடுகள், குடிசைகள், சாலைகள், பயணிகளிடம் கை ஆட்டி சிரிக்கும் களங்கம் கலங்கமற்ற குழந்தைகள், வானம், விடிகாலை என்றால் சூரிய உதயம், இரவானால் நிலவு, நட்சத்திரங்கள், சாலைகளில் ஒளி சிந்தும் மின்கம்ப விளக்குகள் என எல்லா காட்சிகளையும் ரசிக்கலாம். வீட்டில் இருக்கும்போது இவற்றையெல்லாம் பார்க்க முடியுமா?
ஜன்னல் வழியே வீசும் காற்று மேனியை தழுவுவது சுகம். ரயிலில் பயணம் செய்யும்போது இன்னும் இதுபோல் எத்தனையோ விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன ரசிப்பதற்கு. ரயிலின் ஜன்னலுக்கு வெளியே ஒரு பரந்து விரிந்த, அழகான உலகம் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.