பெண்களுக்கான டைம் மேனேஜ்மென்ட் எனப்படும் நேர நிர்வாகம்!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

வேலைக்கு சென்று குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு குழந்தைகளையும் பராமரிக்கும் 360 டிகிரியில் சுழன்று கொண்டிருக்கும் பெண்களுக்கு டைம் மேனேஜ்மென்ட்டும், வொர்க் லைஃப் பேலன்ஸும் ரொம்பவே அவசியம். கஷ்டப்பட்டு செய்வதை விட இஷ்டப்பட்டு செய்யும் வேலை வொர்க் லைஃப் பேலன்ஸுக்கு ரொம்பவே உதவும். செய்கின்ற வேலையை விருப்பமுடன் செய்வதும், குடும்பத்தினருடன் சேர்ந்து ஒரு அன்பான சூழலை வீட்டுக்குள் கொண்டு வருவதும் என இரண்டும் இருந்தால் ஒர்க் லைஃப் பேலன்ஸ் சரியாக இருக்கும்.

அதே நேரத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில் தவறக் கூடாது. அப்பொழுதுதான் வேலை, வீடு இரண்டிலும் நம்மால் வெற்றிகரமாக இயங்க முடியும்.  தினசரி சிறிது நேரம் ஒர்க் அவுட் டைம், யோகா என நம்முடைய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் அவசியம்.

வேலை நேரத்தில் அதில் முழுமையான ஈடுபாடும், குடும்பத்துடன் செலவழிக்கும் நேரத்தில் வேறு எந்த சிந்தனையும் இன்றி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதும் அவசியம். குடும்பத்திற்கும், அலுவலகத்திற்கும் என இரண்டுக்கும் தேவையான நேரத்தை கொடுத்து வெற்றிகரமாக பேலன்ஸ் செய்வது உண்மையில் ஒரு சவாலான விஷயம்தான். ஆனால் இவற்றை சரியாக செய்யத் தெரிந்தால் மட்டுமே நம்மால் வெற்றிகரமாக இயங்க முடியும்.

குடும்பத்திற்கும் வேலைக்கும் நேரம் ஒதுக்குவதைப் போல் நமக்கென்று நேரத்தையும் ஒதுக்க வேண்டும். அந்த  நமக்கான நேரத்தில் நாம் விரும்புவது எதையும் - இசை கேட்பதாக இருந்தாலும், புத்தகம் படிப்பதாக இருந்தாலும், கவிதை எழுதுவதாக இருந்தாலும், உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் நமக்கான ரீசார்ஜ் நேரமாக இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். 

பெண்கள் பெரும்பாலான நேரத்தை கிச்சனில்தான் செலவழிக்க வேண்டி உள்ளது. மறுநாள் சமையலுக்கு இரவே காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்வதும், என்ன சமைக்க வேண்டும் என்பதை முன்பே தீர்மானிப்பதும் காலையில் யோசிக்கும் நேரத்தை தவிர்க்க உதவும்.

சில முன்னேற்பாடுகளையும் வார இறுதி நாட்களில் செய்து வைத்துக் கொள்ளலாம். தேங்காயை துருவி ஜிப்லாக் கவரில் போட்டு ஃப்ரீசரில் வைப்பது, ஒரு வாரத்திற்கு தேவையான புளிக்கரைசலை தயார் பண்ணி வைத்துக் கொள்வது (புளியுடன் தண்ணீர் விட்டு குக்கரில் இரண்டு விசில் விட்டு எடுத்து கரைத்து வடிகட்டி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்வது), மசாலாக்கள் பொடி பண்ணி வைத்துக் கொள்வது, இஞ்சி பூண்டு பேஸ்ட் தயார் படுத்தி வைப்பது, அவசரத்திற்கு கை கொடுக்கும் இட்லி பொடி, பருப்பு பொடி ரெடி பண்ணி வைப்பது எல்லாம் துரித  சமையலுக்கு உதவும்.

நம் வீட்டு வேலைகளில் உதவ குழந்தைகளையும் பழக்கப்படுத்துவது நல்லது. எல்லா வேலையும் நாமே இழுத்துப் போட்டு செய்தால் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் எல்லாவற்றிற்கும் நம்மையே சார்ந்து இருப்பார்கள். இது அவர்களுக்கும் நல்லதில்லை நமக்கும் ஓய்வு கிடைக்காமல் போய்விடும். 

இதையும் படியுங்கள்:
ஆண்களே இது உங்களுக்காக... கொஞ்சம் கவனியுங்கள்!
motivation article

கணவர் குழந்தைகள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களையும் வேலைகளில் ஈடுபடுத்துவது தவறில்லை. வேலைகளை பகிர்ந்து கொடுப்பதன் மூலம் நம்மால் குறிப்பிட்ட நேரத்தில் எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடியும்.

சில பெண்கள் தன்னால்தான் வீடு இயங்குகிறது என்பதுபோல் எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்வார்கள். இது மிகவும் தவறான செயல். தங்களை அதிகம் வருத்திக் கொள்வது தேவையில்லாதது. காலையில் நீங்கள் சமைத்து வைக்கும் போது பிள்ளைகளை அவரவர் டிபன் பாக்ஸ்களில் லஞ்சை பேக் செய்ய வைப்பதும், தோசை சப்பாத்தி போன்றவை போடும்போது குடும்பத்தினரையும் அதில் ஈடுபடுத்துவதும் நேர மேலாண்மையில் முக்கியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com