

எனக்கு பொழுது போகவில்லை என்று சொல்கிறவனை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தது போல வேறு எந்த செய்திகளையும் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்ததில்லை என்கிறார் கௌலி என்ற அறிஞர்.
இயற்கையினுடைய விதிப்படி கடவுளுக்கு அடுத்து நாம் அதிக மதிக்க வேண்டியது நேரம் என்பது லேவ்டரின் கருத்து.
நம் முன்னோர்கள் 60 முதல் 70 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அதில் பாதி நாட்கள் அதிக தூரம் பயணம் செய்து ஒரு நபரை பார்ப்பதற்காகவோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவோ நேரத்தை செலவு செய்திருப்பார்கள். ஆனால் நமக்கு இவையெல்லாம் சில நிமிடங்களிலேயே முடியக் கூடிய அளவிற்கு விமான போக்குவரத்து வசதி உள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆராய்ச்சி மாணவர் தன்னுடைய ஆராய்ச்சிக்கு தேவையான செய்திகளை பல நாட்கள் சேகரித்து எடுத்திருப்பார். ஆனால் ஒரு சில நிமிடங்களிலேயே இணையதளம் மூலமாக செய்திகளை இப்போது நாம் பெற்றுக் கொள்கிறோம்.
அப்படி என்றால் நமக்கு இப்போது இரு மடங்கு நேரம் அதிகம் கிடைத்திருக்கிறது. உதாரணமாக ஒரு இளைஞரின் வயது 30 என்றால் முன்பு 60 வயது மனிதர் செய்த வாழ்க்கை சாதனைகளை தற்போது செய்திருக்க வேண்டும். நம் பிள்ளைகள் 20 வயதிலேயே நம் முன்னோர்கள் செய்த சாதனையை செய்ய வேண்டும்.
உண்மையில் தற்போது இருக்கும் இளைய தலைமுறையினர் சாதனை செய்திருக்கிறார்களா என்றால் கேள்விக்குறியாக தான் பதில் இருக்கிறது. ஏனெனில் தற்போது மூன்று நான்கு டிகிரி படித்தவர்கள் கூட திறனற்றவர்களாகவே இருக்கின்றனர். இதிலிருந்தே அவர்கள் நேரத்தின் அருமையை தெரிந்து கொள்ளவில்லை என்பது நன்கு தெரிகிறது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் குறுகிய நேரத்தில் அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் பல மணி நேரங்களை அலைபேசியில் தற்போதைய இளம் தலைமுறையினர் வீணாக செலவழிக்கின்றனர்.
நண்பர்கள் ஒன்று கூடி அரட்டை அடிக்கும் நேரத்தை நல்ல காரியங்கள் செய்யப் பயன்படுத்தலாம். சமுதாயம் சீரழிகிறது என புலம்புவதை விட்டுவிட்டு சமூகத்தில் ஒரு சில நல்ல காரியங்களுக்கு நம்முடைய பொன்னான நேரத்தை நல்ல வழியில் உபயோகிக்கலாம்.
தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் அந்த நேரத்தில் உடற்பயிற்சிகள் செய்து மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது என்பதால் நமக்கு வழங்கப்பட்ட ஆயுள் காலத்தில் நேரத்தை திறமையுடன் (Time Management) செயல்படுத்தி வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
தினமும் கிடைக்கும் 24 மணி நேரத்தில் உறக்கம், உடற்பயிற்சி, உணவு உண்ணுதல், சிந்தனை, வேலை, படிப்பு, குடும்பத்தினருடன் உரையாடுதல் என பிரித்து அதன்படி கால அட்டவணை போட்டு செயல்பட்டால் காலம் கனிந்து கடமைகள் எளிதாக நிறைவேறும்.
நேரத்தை பொன்னாக கருதி கடமை உணர்ந்து வாழ்க்கையில் ஓடியவர்கள் தான் வெற்றியாளர்களாக இருக்கின்றனர். நேரம் கருதாமல் வாழ்வை நகர்த்துபவர்கள் எத்தனை வயதினராக இருந்தாலும் வாழ்வின் தொடக்கத்திலேயே இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.
ஆகவே ஒவ்வொரு நொடியும் நமக்காக பயன்படுத்தி நேரத்தை மதித்து செயல்பட்டால் வாழ்வில் பல அரிய பொக்கிஷங்கள் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது.