
கனவு காண்பதும், ஆசைப்படுவதும் வாழ்க்கையில் முன்னேற அவசியம் உதவும்.
ஆனால் அவை மட்டும் இருந்தால் போதாது. உடன் அவற்றை செயல்படுத்த தேவையான நடவடிகைகள் தடங்கல் இல்லாமல் தொடரவேண்டும்.
இவைகளுடன் மிகவும் முக்கியமானது காணும் கனவும், அடைய வேண்டும் என்ற ஆசையும் உங்களால் முடியும் என அறிந்துக்கொண்டு செயலில் இறங்குவது புத்திசாலித்தனம்.
முன்னேற வேண்டும் என்ற துடிப்பில் ஒருவருடைய வலிமை எவ்வளவு, இயலாமை எவ்வளவு என்பதை (strengths and weaknesses) சரிவர புரிந்துக்கொள்ளாமல் ஆசைபட்டதை அடைந்துவிட வேண்டும் என்ற வெறியில் அகல கால் வைத்து முதலுக்கே மோசம் என்ற நிலைமையை தவிர்ப்பது உசிதம்.
பிறர் செய்கிறார்களே நானும் செய்யவேண்டும், என்னாலும் முடியும் என்று அரைகுறையாக நம்பிக்கொண்டு ஆழமாக சிந்திக்காமல், கலந்து ஆலோசனைபெற வேண்டியவர்களிடம் எதுவும் செய்யாமல், அனுபவம் இல்லாதவர்களின் அரைவேக்காடு ஐடியாக்களை பின்பற்றி முன்னேறுவதற்கு பதிலாக சிக்கலில் சிக்கி தவித்து, நஷ்டம் அடைந்து வருந்துவதற்கு பதிலாக எதுவும் தொடங்கி இருக்க வேண்டாமோ என்று எண்ணும் சங்கடத்தை எதிர் கொள்ளாமல் இருப்பதே மேல்.
அகல கால் வைத்தால் எப்படி பிரச்னைகள் சந்திக்க நேரிடும் என்பதை உண்மை நிகழ்வின் அடிப்படையில் பார்ப்போம்.
கணவன் மிக உயர் பதவியில் இருந்தார். நன்கு பயின்றவர். அவர் துறையில் அனுபவசாலி. மனைவி ஒரு ப்ரைவேட் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் ஒரு டிப்பார்ட்மென்டின் தலைமை பொறுப்பில் இருந்தார்.
அவருக்கு ஒரு மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட் துவக்கி சாதிக்க வேண்டும் என்ற கனவு. ஆசை யாரைவிட்டது.
கணவரை நச்சரிக்க துவங்கினார். முதலில் அவரது கணவர் ஒப்புக்கொள்ளவில்லை. எவ்வளவு எடுத்து கூறியும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை (பேராசை) கண்களை மறைக்க, ஒரு வழியாக அந்த பெண்மணி வெற்றி பெற்றார். ஆம். அவர் விருப்பப்படி மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட் துவக்கப்பட்டது.
தங்கள் சக்திக்கு மேல் கடன் வாங்கிதான் துவக்கப்பட்டது. அவர்களது நெடும் கால சேமிப்பும் முதலீடு செய்யப்பட்டது.
பாடம் நடத்தி பழக்கப்பட்ட அந்த பெண்மணிக்கு எப்படி
மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட் நடத்த வேண்டும், குறிப்பாக மேனேஜ் செய்யவேண்டும் என்றே புரியவில்லை, பிடிபடவில்லை, தெரியவில்லை.
ஏதோ ஒரு அனுபவம் இல்லாத கன்சல்ட்டன்ட் கூறிய ஆலோசனைபடி 20 கம்யூட்டர்கள் வாங்கினார். க்ளாஸ் ரூம்களில் ஏசி வசதி, தேவைக்கு அதிகமான இருக்கைகள், மேஜைகள் என்று வாங்கி நிரப்பிவிட்டார்.
கட்டடம் வாடகை, அட்வான்ஸ், மின்சார பில்கள் என்று வருவாய் பார்ப்பதற்கு முன்பு செலவுகள் லைன் கட்டி நின்றன.
வகுப்புக்கள் எடுக்க ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் வேறு செலவை அதிகரித்தது.
இது இப்படி இருக்க அவர் எதிர்பார்த்தபடி மாணவ, மாணவியர் அந்த புது மேனேஜமெண்ட் இன்ஸ்டிடியூட்டில் சேர முன் வரவில்லை.
நாட்கள் ஓடின. மாதங்கள் மறைந்தன. பிரச்னைகள் அதிகரிக்க ஒரே வருடத்தில் அந்த இன்ஸ்டிடியூடிற்கு கட்டாய ஓய்வு அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
மறுபடியும் வேறு ஒரு கல்லூரியில் படிப்பு சொல்லிக் கொடுக்கும் நிலைக்கு சென்றார் அந்த பெண்மணி முன்னைவிட குறைந்த மாத வருமானத்தில்.
ஆசை பேராசையாக உருவெடுத்து ரியாலிட்டியில் நிராசையாக போனதுதான் வேதனை.
படிப்படியாக தேவையான விவரங்களை சேகரித்து, தொழில் ஆரம்பிக்காமல், சரிவர நடத்த முடியுமா என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அலசி ஆராயந்து பொறுத்தமான முடிவு எடுக்க தவறினால் பெரும் நஷ்டம் மற்றும் எதிர்பாராத சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
குறிப்பிட்ட தொழிலின் தற்பொழுதிய சுற்றுப்புற நிலைமை (present environment level) எதிர்வரும் காலங்களில் எப்படி இருக்ககூடும், சந்திக்க வேண்டிய மாற்றங்கள் அவற்றை எதிர்கொள்வது எப்படி போன்ற விவரங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இவைகளை தவிர்ப்பது எதிர்பார்க்கும் முடிவை அளிக்காது.
தேவைக்கு அதிகமானவற்றை வாங்கி அவதிபடுவது அனாவசியம். கனவு காண்பது, ஆசைப்படுவது மட்டும் போதாது.
அகல கால் வைக்காமல் அளந்து, சூழ்நிலையை புரிந்துக்கொண்டு முடியும் என்றால் மட்டும் முயல்வது சாலச்சிறந்தது.