வலிமையின் ஆயுதம் உண்டு பண்ணுவதே!

Buddha Image
Buddha Imagepixabay.com

நான் சிறுமியாக இருந்தபொழுது பள்ளிவிட்டு வந்து திண்ணையில் படுத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எங்கள் கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக முழு மாதக் கர்ப்பிணித்தாய் ஒருவர் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் கொண்டு வந்திருந்த கயிறு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க போதாததாக இருந்ததால், அவரின் முந்தானையை அந்த கயிற்றின் நுணியில் முடிந்து தண்ணீரை இறைத்து ஊற்றிக் கொண்டிருந்தது என் கண்ணில் பட்டது. திடுக்கிட்டு விழித்த நான் அந்தக் காட்சியைக் கண்டு கண்கலங்கி, நிலை தடுமாறிப் போனேன்.

உடனே எங்கள் வீட்டில் இருந்த கயிற்றை எடுத்துச் சென்று, அவர் கொண்டு வந்திருந்த குடங்களில் தண்ணீரை நிரப்பி அவர் வீட்டில் கொண்டுபோய் வைத்து விட்டு வந்தேன்.

அதற்குப் பிராயச்சித்தமாக அவர்கள் வீட்டில் காய்த்திருந்த மாங்காய்களை பறித்துக்கொடுத்தார். அவரின் இந்த மனவலிமையை பின்னாட்களில் அதிகம் நினைத்துப் பார்த்ததுண்டு. வலிமை என்பது இரண்டை ஒன்றாகச் சேர்ப்பது என்பதை புரிய வைத்தது. 

கயிற்றுடன் முந்தானையை முடிந்ததால் தண்ணீர் கிடைத்து அவருக்கு. சின்னஞ்சிறு உதவி செய்ததால் எனக்கு மாங்காய் கிடைத்தது. பின் நாட்களில் இதுவே நல்ல நட்பு, உறவு முறையாக மாறிப்போனது எங்கள் இருவருக்கும். 

இதை நினைவுபடுத்துவதாக, வலிமையின் மேன்மையை வலியுறுத்துவதாக ஒரு குட்டிக் கதையைப் படிக்க நேர்ந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இதோ  அந்தக் கதை: 

ரு நாள் காலை நேரம் அமைதியாக நடந்து கொண்டிருந்தார் புத்தர். அவருக்கு எதிரே நின்று வழி மறிக்கிறான் ஒரு கொள்ளைக்காரன். 

"உன்னை என்னால் கொல்ல முடியும்!" என்கிறான் . 

புத்தர் சிரித்துக்கொண்டே "அதற்கு முன்பாக என்னுடைய இறுதி ஆசை ஒன்றை நிறைவேற்ற முடியுமா?" என்றார் .

"என்னால் எதுவும் முடியும். உனக்கு என்ன வேண்டும் சொல். செய்கிறேன்" என்று கேட்டான்.

 "வேறொன்றுமில்லை, அதோ ஒரு மரம் இருக்கிறது பார்."

"ஆமாம்."

 "அந்த மரத்தின் கிளையை வெட்டி விடு."

"ப்பூ இவ்வளவுதானா...இதோ பார், ஒரே வெட்டில் அதை வீழ்த்துகிறேன்".

வாளை உருவினான் ஒரே வீச்சு! 

கிளை கீழே விழுந்தது. 

"இதோ வீழ்த்தி விட்டேன்! இன்னும் நான் ஏதாவது செய்ய வேண்டுமா? சொல்... அதையும் செய்கிறேன்" என்றான். 

"ஆமாம் ஒன்று பாக்கியிருக்கிறது."

 "என்னவென்று சொல். அதையும் இப்போதே செய்து முடித்துவிடுகிறேன்." 

"நீ வெட்டினாய் அல்லவா அந்த மரத்தின் கிளையை மறுபடியும் அந்த மரத்துடன் பொருத்திவிடு. அதுபோதும்" என்றார் புத்தர் அமைதியாக. 

“அது யாராலும் முடியாத காரியம். உனக்கென்ன பைத்தியமா?” 

மறுபடியும் புன்னகைத்தவாரே புத்தர் சொன்னார். "உன் வலிமையால் மற்றவரை துன்புறுத்தி அழிக்க எண்ணுகிறாயே...நீ அல்லவா பைத்தியக்காரன்?" 

"அப்படியா சொல்கிறாய்?"

"ஆமாம்… அது ஒரு குழந்தையின் செயல்."

 "அப்படியானால் என் வலிமை?"

 "உண்மையான வலிமை உடையவர்கள் ஒன்றை ஆக்கவும், குணப்படுத்தவும் அறிவார்கள்" என்றார் புத்தர். 

உண்மைதான் வலிமை என்பது துண்டு பண்ணுவதல்ல. உண்டு பண்ணுவதுதான் என்பதை உணர்ந்தான். அவன் ஆயுதங்களை கீழே போட்டான். 'புத்தர் சரணம் கச்சாமி' என்று புத்தரின் கால்களில் விழுந்து வணங்கினான். வீரத்தைச் சரணடைய வைத்த வீரம், புத்தரின் அமைதியில் இருந்தது. 

இதையும் படியுங்கள்:
பழைய பேட்டரிகளை மீண்டும் பயன்படுத்தினால் மாசுபாட்டை குறைக்கலாம்!
Buddha Image

ன்பர்களே! 

வாழ்க்கை என்பது உண்பதும், உறங்குவதும் மட்டுமல்ல; மற்றவர்களுக்கு துன்பத்தை உண்டு பண்ணாமல் இன்பத்தை உண்டு பண்ணுபவராக வாழ்தல் வேண்டும். 

வாழ்தல் வேண்டி பிறர்க்கு இன்னா செய்து அதன் மூலம் மகிழ்ச்சியை தேடாதீர்கள். 

வலிமை என்பது துண்டு பண்ணுவதல்ல. மாறாக உண்டு பண்ணுவது என்பதை உள்ளத்தில் பதியுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com