
ஒவ்வொரு மனிதனும் அவனுக்குப் பிடித்தமான அவனது சக்திக்கு உட்பட்ட அவனால் நன்கு கற்றுத் தெளிந்த துறையில் மட்டுமே கால் பதித்து, அதில் மட்டுமே முழுமையான கவனத்தையும், ஈடுபாட்டையும் செலுத்தவேண்டும். அப்போதுதான் அந்தத் துறையில் அவனால் சாதனைகளைப் படைக்க முடியும் அதில் உயர்ந்து விளங்க முடியும்.
கணக்குப் பாடத்தில் நல்ல அறிவு ஜீவியாக இருக்கும் குழந்தைகளை, டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்று நினைத்து, உயிரியியல் பாடத்தைப் படிக்குமாறு கட்டாயப்படுத்தினால் என்னாகும்? இருபாடங்களிலும் முழுமையான திறமை இல்லாமல் வளரும்.
இதுதான் உண்மை.
சில பேரை நீங்களும் சந்தித்திருக்கலாம். அவர்கள் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் பேசுவார்கள். அதாவது அமெரிக்க அதிபரின் அதிகாரங்கள் பற்றி பேசுவார், அப்படியே இந்திய விஞ்ஞானிகள் நடத்தும் ஏவுகணை சோதனையைப் பற்றியும் அக்குவேறு ஆணிவேறாக அலசுவார். மாரடைப்பு வராமல் தடுப்பது பற்றியும், வந்த பின்னால் செய்ய வேண்டிய சிகிச்சை முறைகள் பற்றியும், எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகள் பற்றியும் ரொம்ப விரிவாகப் பேசுவார். கார் மெக்கானிசம் பற்றிப் பேசும் அவர், காரல் மார்க்ஸ் தத்துவத்தையும் அலசுவார்.
இப்படி எந்தவொரு விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் அதுபற்றி சளைக்காமல் பேசுவார். அவர் பேசுவதைப் பார்க்கும்போது, அவர் ஒரு மிகப்பெரிய ஞானி போலவும், உலகறிவு படைத்த மாமேதை போலவும் எண்ணத் தோன்றும். அவரது திறன் கண்டு அதிசயத்தில் உறைந்து போய்விடுவோம்.
ஆனால் அவர் வீட்டு கார் உடனடியாக ஸ்டார்ட் ஆகாது. ஏனென்று கேட்டால், "கார் மெக்கானிசம் ஓரளவுக்குத் தெரியும். முயற்சி பண்ணிப் பார்த்தேன். முடியலை. மெக்கானிக்கிடம் விடவேண்டும்" என்பார்.
அவர் வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் மது பாட்டில்களாக அடுக்கி வைத்திருப்பார். அவரது மனைவி விவாகரத்து பெற்றிருப்பார். இப்படி எத்தனையோ அதிர்ச்சி தரத்தக்க வகையில் அவரது வாழ்க்கை சக்கரம் இயங்கிக் கொண்டிருக்கும்.
இதற்குக் காரணம் என்னவென்றால் ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் பலதுறைகளிலும் தனது மூக்கை நுழைப்பது. 'பலமரம் கண்ட தச்சன் ஒன்றுக்கும் உதவான்' என்பார்கள். அதுதான் உண்மை.
ஏதாவது ஒரு விஷயத்தில் ஞானம் பெற்றிருக்க வேண்டும். அந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் சிறப்பான பயிற்சிகளைப் பெற்றிருந்தால், அதில் சிறந்து விளங்க வாய்ப்புண்டு. வாய்ப்பு மட்டுமல்ல நிச்சயமாக சிறந்து விளங்கவும் முடியும்.