
குழந்தைகளை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். எந்த சூழ்நிலையிலும் குழந்தைகள் கவலைப்படமாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் உலகம் வேறு. நம் உலகம் வேறு.
நாம் சிறிய பிரச்னைகளைக்கூட எதிர்கொள்ளத் தயங்கி அதற்காக கவலைபட்டுக்கொண்டே இருப்போம். ஆனால் குழந்தைகளைப் பாருங்கள் என்ன நடந்தாலும் சிரித்துக் கொண்டேதான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பிரச்சினைகள் என்றால் என்னவென்றே தெரியாது.
பிரச்னை என்பது அனைவருக்கும் பொதுவானது. வாழ்க்கை என்றால் பிரச்சினை இல்லாமல் இருக்காது. சிலர் சிறிய பிரச்னை என்றாலும் பெரிதாக கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். வேறு சிலரோ பெரிய பிரச்னை என்றாலும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பார்கள். சில பிரச்சினைகளை காலம் தாழ்த்தினால் தன்னாலேயே சரியாகிவிடும். சில பிரச்னைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக சரி செய்ய முயலவேண்டும்.
பிரச்னைகளைத் தவிர்க்க நினைப்பதும் தவறு. அதை கண்டுகொள்ளாமல் விடுவதும் தவறு. பிரச்னைக்கான காரணம் என்ற என்பதைக் கண்டறிந்து அதை எந்த வழியில் தீர்ப்பது என்பதை யோசித்து முடிவு செய்ய வேண்டும். பிரச்சினையே இல்லாமல் வாழ வேண்டும் என்று ஒருவர் நினைப்பதன் விளைவே பிரச்சினை ஏற்படும் போது அவரை கவலைக்குள்ளாக்குகிறது.
பிரச்சினைகளை நினைத்து கவலைபட்டுக் கொண்டிருப்பதால் அவை சரியாகிவிடாது. பிரச்சினையின் வேர் எது என்பதைக் கண்டறிந்து அதை முற்றிலுமாகத் தீர்க்க முயலவேண்டும். சொல்லப் போனால் பல பிரச்னைகளுக்கு மூலகாரணமே நாமாகத்தான் இருப்போம்.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நாணயமில்லாத தனிநபர்களிடம் பலர் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய அத்தகையவர்கள் பணத்தை அபகரித்துக் கொண்டு தலைமறைவாவதை நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டது நம் தவறுதானே. இதுபோல நமது பல பிரச்னைகளுக்கு நாமே காரணமாக அமைகிறோம் என்பதே நிஜம்.
ஒரு சிறிய பிரச்னை காணாமல் போகும். அல்லது அது நமக்கு பிரச்சினையாகவே தெரியாது. எப்போது தெரியுமா? ஒரு பெரிய பிரச்சினை நம் கண்முன்னே வந்து நிற்கும்போது. எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை நாம் புரிந்துகொண்டு அதை எதிர்நோக்கத் தயாராக வேண்டும். பிரச்னைகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யங்கள் இருக்காது என்பதும் மறுக்க இயலாத உண்மையாகும்.
பிரச்னைகளை எதிர்கொண்டு சமாளித்து அதைத் தீர்க்கும்போது நீங்கள் அனுபவசாலியாக மாறுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒருவர் வாழ்க்கையில் அனுபவமே சிறந்த பாடமாக அமைகிறது. நம் அனுபவம் பிறருக்கு வழிகாட்டியாக அமையும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மேலும் பிரச்னைகளைக் கையாண்டு அதைத் தீர்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது என்பதும் உண்மை.
எனவே நண்பர்களே அன்பர்களே. இனி பிரச்னைகளைக் கண்டு கலங்காதீர்கள். அதை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். வெற்றியாளராக மாறுங்கள்.