குறிக்கோள் முயற்சிக்கு ஊன்றுகோல்!

want to succeed in action?
Target Image...image credit - pixabay
Published on

குறிக்கோளை மேற்கொண்டு வாழ்ந்து மறைந்தவர்கள் அன்றும் இன்றும் என்றும் மனித இதயங்களில் நிறைந்து நிற்கிறார்கள்.

குறிக்கோள் இன்றி உண்டு உறங்கி எதனையும் அறியாமல், செயலைச் செய்யாமல் வாழ்ந்தவர்கள். தங்கள் வாழ்நாளை வீணாகக் கழித்து, யாருக்குமே தெரியாதவர்களாக மண்ணில் புதையுண்டு போயிருக்கிறார்கள்.

குறிக்கோள் என்ற சொல்லிலேயே இரு பொருள் உண்டு. குறித்தல் ஒன்று; அதனைக் கொள்ளுதல் மற்றொன்று. எதை, ஏன் குறித்தல் வேண்டும். குறித்ததை எவ்வாறு கொள்ளுதல் வேண்டும் - இந்த வினாவுக்கு விடை கண்டாலே குறிக்கோள் என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

செயலில் வெற்றிபெற வைரநெஞ்சம் வேண்டும். எண்ணியதை எண்ணியபடி வாழ்ந்தவர் எல்லாம் வைர நெஞ்சம் கொண்டவர்கள்தாம். எடுத்த செயலை முடிக்காமல் வேறு ஒன்றுக்குத் தாவுவது அவர்களிடம் கிடையாது. 

அதனால்தான், "ஒன்றில் நின்று செயலாற்ற வைர நெஞ்சம் வேண்டும்," என்றார் பாரதியார்.

எடுத்த செயலில் எண்ணத்தைச் செலுத்துபவர் தனது உடல் சுகத்தைப் பெரிதாக எண்ணுவது இல்லை. ஊனும் உறக்கமும் கூடப் பார்ப்பதில்லை. தன்னைப் பற்றிப் பிறர் பேசும் புகழ்ச்சிக்கோ, இகழ்ச்சிக்கோ கூடச் செவி சாய்ப்பதில்லை.

பிறரால் உண்டாக்கப்படும் தடைகளுக்கு மனம் கலங்குவதும் இல்லை. பிறரது செயல்களில் குறிக்கிடுவதும் வழக்கம் இல்லை. நோக்கம் எல்லாம் செயல் என்பதிலேயே குறிக்கோளாக இருக்கும். இத்தகைய உணர்வுகளால் உருவாவது வைர நெஞ்சம் பெறுவதற்கான சீரிய வழியாகும்.

மன உறுதிக்குத் தேவைப்படுவது ஊக்கமும், உழைப்புமாகும். மன உறுதியில் தளர்ச்சி ஏற்படும் பொழுது அத்தளர்ச்சியைப் போக்கி எழுச்சி ஊட்டுவதே ஊக்கமாகும்.

உழைப்பை மேற்கொள்ளும்போது சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய அடிப்படைக் கூறுகள் பல உண்டு. 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' என்கிறார் வள்ளுவர்.

உயர்ந்தவற்றையே எண்ணுவது முதன்மையானது. அவற்றில் வெற்றி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உயர்ந்தவற்றை எண்ண வேண்டியது கடமையாகும்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கான வாய்ப்பை உருவாக்குங்கள்!
want to succeed in action?

முயலுக்குக் குறிவைத்து வெற்றியடைவதை விட, யானைக்குக் குறி வைத்துத் தவறுவது மேன்மை தருவதாகும்.

குறிக்கோளுக்கு எவ்வளவு உழைப்புத் தேவை என்பதையும், நம்மிடம் உள்ள உழைப்பாற்றல் எத்தகையது, உழைக்கும்போது வரும் இடையூறுகள் என்னென்ன என்பதையும் ஆராய்ந்து இடையூறுகளை முறியடித்து, குறிக்கோளை அடையும் வகையில் ஆற்றலை வளர்த்துக் கொண்டு செயலைத் தொடங்க வேண்டும்.

இவை கூடிவரும் வரைக்கும் பொறுமையுடன் இருப்பது அவசியம், மனஉறுதியும், ஊக்கமும், உழைப்பும் குறிக்கோளை அடையும் மார்க்கமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com