
நம்மால் எடுத்தவுடனேயே நம்முடைய வாழ்க்கையை மிகச் சிறப்பாக மாற்றிவிட முடியாது. இந்த சமூகத்திற்கென்று ஒரு கோட்பாடு இருக்கிறது. அதை உடனடியாக உடைத்து வித்தியாசமாக மாறவேண்டும் என நினைத்தால், அது நமக்கு காயத்தையே கொடுக்கும்.
சுற்றியிருக்கும் பெரும்பாலானவர்கள் ஒரு விஷயத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்க, நீங்கள் மட்டும் ஏதோ ஒன்றை வித்தியாசமாக செய்துகொண்டிருந்தால் உங்களை ஒரு மாதிரிதான் பார்ப்பார்கள். கூட்டத்தில் இருந்துகொண்டே, தனி ஒருவனாக முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.
எதுவும் உடனடியாக வாழ்க்கையில் மாறிவிடாது, அதற்கான கால நேரமும், தொடர் உழைப்பும் முக்கியம் என்பதை நம்புங்கள். ஒரு மாதத்தில் இந்த விஷயம் எவ்வளவு நன்மையைக் கொடுக்கிறது என்பதை கணிப்பதற்கு பதிலாக, பத்து ஆண்டுகளில் இதன் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று ஒருமுறை சிந்தியுங்கள்.
"இதுதான் உங்களுக்குள் மன அழுத்தமற்ற முன்னேற்றத்திற்கான வழியை வகுக்கும்."
உங்களால், ஒருபோதும் சமூகத்தை எதிர்த்துக்கொண்டு வாழ்க்கையின் வித்யாசமான இலக்கை அடைய முடியாது. எல்லா தருணங்களிலும் உங்களால் மன உறுதியுடன் இருக்க முடியாது. ஏதோ சில சமயங்களில் அவர்களால் நீங்கள் காயமடைய வேண்டிய சூழல் ஏற்படும். அதையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்.
அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களுக்கு எதைப்பற்றியும் விளங்க வைக்காமல் உங்கள் செயலில் கவனம் கொள்வது நல்லது. நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று, பிறர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, நம் நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.
நம்முடைய இலக்கு சரியாக இருந்து அதற்கான முயற்சி தவறாமல் இருந்தால் அதுவே போதும்.