தவறு செய்வதை உணர்ந்து வருந்துவது, திருத்துவது, மன்னிப்பு பெறுவது நல்ல விஷயம்தான். ஆனால் அந்த குற்ற உணர்வை பூதாகாரமாக்கி புழுங்குவது சரியல்ல. தவறுகளுக்கு மன்னிப்பு கேள். தண்டனை இருந்தால் தயங்காமல் ஏற்றுக்கொள். மாறு, உயரு, பழைய பாவத்தின் சுமையை சுமந்து திரியாதே.
ஒரு பெரியவர் தன் நண்பன் வீட்டிற்கு திடீரென சென்று நிறைய இனிப்புகள்,பழங்கள் மற்றும் பூங்கொத்து கொடுத்து "என்னை மன்னித்துவிடு" என்றார். எதற்கு என அவர் கேட்க "நேற்று கனவில் உனக்கும் எனக்கும் பெரிய சண்டை நடப்பது போலவும், நான் உன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டுவது போலவும் கனவு கண்டேன். என் ஆழ்மனதில் உன் மேல் கோபம் இல்லாமல் அப்படி ஒரு கனவு வராது. அதனால் மன்னிப்பு கேட்பது என முடிவு செய்தேன்" என்றார். குற்ற உணர்வுடன் இருப்பதைவிட மன்னிப்பு கோருவது உயர்ந்த வாழ்க்கை முறை.
சமயத்தின் நோக்கம் மிக எளிமையானது. செய்த குற்றத்தை உணர்ந்த பிறகு திருந்த வேண்டும். தவறு செய்த உணர்வு கொல்லாமல் கொல்லும்.அதிலிருந்து கடவுள் மீட்பார் என்ற கருத்து தோன்றியது.கடவுள் மன்னிப்பார் என்று சொல்லியபடியே குற்றம் செய்வது அயோக்கியத்தனம். கடவுள் மன்னிக்க மாட்டார் என்று ஓயாமல் வாழ்க்கை முழுதும் குற்ற உணர்வுடன் கழிப்பது அசட்டுத்தனம். பிறர் குற்றங்களை மன்னிக்கப் பழகு என்கிறது ஆன்மிகம்.
மிகச் சிரமப்பட்டு பலமுறை தோற்று பல்பு கண்டு பிடித்தார் தாமஸ் ஆல்வா எடிசன். அதை பலர் முன்பு அறிமுகம் செய்ய பலரையும் அழைத்தார். அவரது உதவியாளர் பல்பை எடுத்துவரும்போது கைத்தவறி கீழே போட்டு உடைத்துவிட்டார். அவர் அடுத்து ஒரு நாளில் புது பல்பு தயாரித்து அறிமுக விழா நடத்தும்போது அதே உதவியாளரை அழைத்து பல்பை எடுத்து வா என்றார். "மீண்டும் அவரிடமே அந்த பணியா" என்று பலரும் பயந்து தடுத்த போது" கீழே விழும்படி கொணர்ந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை நம் எல்லோரையும் விட நன்கறிந்தவர் அவரே. எனவே தவறை உணர்ந்து விட்டதால் இம்முறை அவரால் மிகச் சரியாக கொண்டு வர முடியும்." என்றார். கடவுளும் அப்படித்தான். நாம் தவறுகளை உணர்ந்து பொறுப்புள்ள வராக மாறவேண்டும் என்பதை அவர் விரும்புகிறார்.
ஒரு சாமியார் காலையும், மாலையும் இரத்தம் சொட்டச் சொட்ட சவுக்கால் அடித்துக் கொண்டு கடவுளிடம் "நான் பாவி. நீ என்னை மன்னிக்க மாட்டாய்" என்பார்.
ஒரு தவறும் செய்யாத அவர் இப்படிச் செய்வது சீடர்களுக்கு புதிராக இருந்தது. மரணத் தருவாயிலும் அவர் அடித்துக் கொள்ள கடவுள் முன்னே தோன்றி "நீ என்ன தப்பு பண்ணினே. சின்ன வயசுலே எதிர் வீட்டுப் பெண்ணை ஆசையாய் பார்ப்பே.
இது வயசுப் பையன்கள் எல்லோரும் செய்யறது தானே. இதுக்கு தினம் கடவுளே கடவுளே ன்னு கூப்பிட்டு சாட்டையால் அடிச்சுக்கறதா. உன் தொந்திரவு தாங்க முடியல. இன்னொரு தடவ இப்படிப் பண்ணே அதுக்காகவே உன்னை நகரத்திலே போடுவேன்" என்றாராம். அதாவது ரொம்ப குற்ற உணர்வை கடவுளே விரும்பமாட்டார். குற்ற உணர்வை குப்பையிலே போட்டு விடுதலை மனதுடன் புதிய மனிதனாக புறப்பட வேண்டும். அப்படி இருந்தால் எப்போதும் சந்தோஷம்தான்.