
நீங்கள் கொண்டுள்ள ஒவ்வொரு நம்பிக்கையும் ஏதோ ஒரு விதத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. உங்களை ஏதோ ஓரு நடவடிக்கை எடுக்க வைப்பதன் மூலமோ அல்லது ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை நீங்கள் மேற்கொள்வதிலிருந்து தடுப்பதன் மூலமோ அது தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. ஒன்று சாதியமில்லை என்று நீங்கள் நம்பினால் அதைச்செய்ய முயற்சிக்க மாட்டீர்கள்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், மக்களிடையே ஒரு கண்ணோட்டம் நிலவியது. ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடிக் கடக்க எந்த மனிதனாலும் முடியாது என்று கிட்டத்தட்ட எல்லோருமே நம்பினர். யாரேனும் அதை சாதிக்க முயன்றால் அவர் அச்சாதனையை நிகழ்த்து வதற்கு முன்பாக நிலை குலைந்து விடுவார் என்று அக்காலக் கட்டத்தில் சார்ந்த மருத்துவர்கள் கூறினர். நான்கு நிமிடங்களுக்குள் ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடப்பதற்கு ஏற்ப வடிவமைப்பு இல்லை என்று பொறியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நம்பிக்கை உண்மைதான் என்று தோன்றியது. அச்சாதனையை நிகழ்த்த ஆயிரக்கணக்கானவர்கள் முயற்சித்தும் தோற்றனர். ஆனால் 1954 ம் ஆண்டு மே 6 அன்று ரோஜர் பேனிஸ்டர் என்பவர் 3 நிமிடங்கள் 59. 4 நொடிகளில் ஒரு மைல் தூரத்தை ஓடி அடைந்தார். அன்று நிலவிய கண்ணோட்டத்தை அவர் தரை மட்டமாக்கினார். ஆறு வாரங்களுக்குப் பிறகு ஜான் லேண்டி என்ற ஆஸ்திரேலியர் ஒரு மைல் தூரத்தை 3 நிமிடங்கள் 58 நொடிகளில் ஓடிக் கடந்தார்.1957 ம் ஆண்டின் முடிவில் மேலும் 16 ஓட்டக்காரர்கள் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடிக் கடந்து சாதனை படைத்தனர்.
ஜான் வாக்கர் என்பவர் சுமார் 100 முறை இப்படிச் செய்துள்ளார். பழைய கண்ணோட்டம் தரைமட்டமாக்கப்பட்டு ஒரு புதிய கண்ணோட்டம் உருவாக்கப்பட்டவுடன், ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடிக் கடப்பது ஒரு சாதாரண நிகழ்வு ஆனது. ஓட்டக்காரர்கள் திடீரென்று வேகமாக ஓடத்தொடங்கினரா?. அல்லது வலிமையானவர்களாக இருந்தார்களா?. இரண்டும் இல்லை. அச்சாதனையை நிகழ்த்த முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்பியதுதான் காரணம். ஒரு கண்ணோட்டம் அல்லது ஒரு நம்பிக்கை பொய் என்று நிரூபிக்கப்படுகிறபோது நிகழ்கின்ற அதிசயம் அது. எல்லோரும் புதிய நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு விடுவர்.
உங்கள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகள் குறித்தும், வாழ்க்கை உங்களை நடத்துகின்ற விதம் குறித்தும், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பது குறித்து நீங்கள் கொண்டுள்ள கண்ணோட்டங்களை தகர்த்தெறிவதற்கான நேரம் வந்து விட்டது. உங்கள் மனதை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். உங்கள் வாழ்க்கை மலரும் விதத்தின் மீது உங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.