
நாம் செய்யும் தவறுகளே வாழ்க்கையை சுமுகமாக ஓட்ட கற்றுத் தருகிறது. அனுபவம் தரும் பாடத்தை எந்த ஆசிரியராலும் கற்றுத்தர முடியாது. நேற்று ஏற்பட்ட இழப்புகளை மறந்து நாளை வெற்றியினை நோக்கி நம்பிக்கையுடன் நகர்வதே வாழ்க்கை. உழைப்பு உடலை வலிமையாக்குவதுபோல் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களே நம் மனதை வலிமையாக்கும்.
வாழ்வில் சில நேரங்களில் தொடர்ந்து சோதனைகளும், பிரச்னைகளும் வரக்கூடும். அவற்றை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி மனம் தளராமல் முயற்சி செய்து முன்னேறுவதே வெற்றிக்கான வழியாகும். தினம் தினம் வாழ்வில் எதிர்ப்படும் பிரச்னைகளால் உண்டாகும் அனுபவம்தான் நம்மை சரியான பாதையை நோக்கி நகரச்செய்யும்.
நம் வாழ்க்கையை குறை கூறும் யாராலும் நம்முடைய வாழ்க்கையை ஒரு நொடி கூட வாழ முடியாது. எனவே அடுத்தவர் வாழ்க்கையைப் பற்றி குறை கூறாமல் இருப்பது நல்லது. அனுதாபத்தாலோ, உணர்ச்சி வேகத்தாலோ எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது நல்லது. எளிமையாய் வாழப் பழகுவது நல்லது. நமக்கு எளிதாக கிடைக்கும் ஒன்று நம்மைப் போன்ற ஒருவருக்கு பல போராட்டங்களுக்குப் பின்பே கிடைக்கும். அதனால் கிடைப்பவற்றை மதித்து பழகுவதுடன் எளிமையாக வாழ்ந்திடவும் பழகவேண்டும்.
வாழ்க்கையில் நாம் படும் சோதனைகளும் வேதனைகளும் வாழ்க்கையைப் பற்றி நொடிக்கு நொடி நமக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. நாம்தான் அவற்றைக் கற்றுக் கொள்ளாமல் தவறவிடுகிறோம். நம் மனஉறுதியை சோதிக்கவே சோதனைகள் ஏற்படுகின்றன. சகிப்புத்தன்மையும், பொறுமையும் வாழ்க்கையில் மிகவும் அவசியம். சகிப்புத்தன்மை இல்லையெனில் நம் மன அமைதி குலைந்து விடும்.
அதேபோல் பிறரை எதற்கெடுத்தாலும் சார்ந்திருக்காமல் சுய முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும் சமயம் முதலில் பதற்றப்படாமல் இருக்கப் பழகவேண்டும். பதட்டப்பட்டால் சரியாக யோசிக்க வராது. சரியாக யோசிக்கவில்லை என்றால் பிரச்னைக்கான தீர்வு கிடைக்காது.
சோதனைகள் வராத வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காது. நீரோடை கரடு முரடான பாதைகளில் தவழ்ந்து சென்றுதான் சமவெளியை அடைய முடியும். அதுபோல் தான் மனிதனுடைய வாழ்விலும் ஒவ்வொரு கட்டத்திலும் சோதனைகளும் வேதனைகளும் வரும்பொழுது அதனைத் தாங்கித்தான் இலக்கை அடைய முடியும்.
கடினமான முயற்சிகள் இல்லாமல் எந்த காரியத்திலும் வெற்றியை ஈட்ட முடியாது. வாழ்க்கை ஒருபொழுதும் எளிதானதல்ல. எதிர்ப்படும் பிரச்சனைகளும், சோதனைகளும் நம்மை நரகமாக்கும். அந்த நேரத்தில் காயங்கள் ஆறவும், பிரச்சனைகள் தீரவும் சிறிது நேரம் ஓய்வு கொடுத்து அமைதி காப்பது நல்லது.
காலம் சில காயங்களை ஆற்றும். ஆனால் எல்லா காயங்களையும் அல்ல. சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை நாமே மாற்றிக்கொண்டு மனதை அமைதிப்படுத்த காயங்கள் மாறலாம். வேதனைகள் குறையலாம். வாழ்வில் எதிர்ப்படும் சோதனைகளும் வேதனைகளும் நமக்கு வாழ்க்கையின் மீது நிச்சயமற்ற தன்மையை உருவாக்கிவிடும்.
அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும். ஆனால் இதற்கெல்லாம் மசியாமல் இதுவும் கடந்து போகும் என்றெண்ணி வாழப் பழகவேண்டும். சோதனைகளும் வேதனைகளும் நம்மை புடம் போட்ட தங்கம்போல் மாற்றிவிடும்.