

'மித மிஞ்சிய சமய அறிவு மற்றவருடன் வாதங்களில் ஈடுபடுதல் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதால் மூளையை குழப்பிக் கொள்ள நேரிடும். நம்முடைய அறிவு சிற்றறிவு. கடவுளோ பேரறிவாளராக இருக்கிறார். அதனால் நம்முடைய அறிவைக் கொண்டு அவரை அளக்க முடியாது என்கிறார் ராஜாஜி".
பிரார்த்தனை மனதிற்கு ஆறுதலை தருகிறது. நம்பிக்கையை வழங்குகிறது. இயற்கையோடு தொடர்பினை உருவாக்குகிறது. நம்மை குறிக்கோளை நோக்கி செலுத்துகிறது. நாம் பிரார்த்தனை செய்கிறபோது நமக்குள்ளே இருக்கிற குழந்தை வெளிவருகிறது. பிரார்த்தனை யோகங்களின் யோகம் என்று கருதப்படுகிறது. ஆகவே கடவுள் நம்பிக்கையுடன் தொடர்ந்து தொய்வில்லாத பிரார்த்தனைக்கு பலன் உண்டு என்பதை முதலில் நாம் அறியவேண்டும்.
பிரார்த்தனை செய்யும்போது எண்ணங்கள் ஒருமித்து, சிந்தனையைக் குவிக்க, நாம் நமக்கு பிடித்த இஷ்ட தேவதையை கண்முன் நிறுத்துவதற்காக கடவுளின் ஒரு சிலையை அல்லது படத்தை வைத்து வணங்குவது உண்டு. அப்படி வணங்குவதை பார்த்த அயல் நாட்டுப் பெண்மணி கேட்ட கேள்விக்கு, இறைபக்தி மிகுந்த நம் நாட்டவர் கொடுத்த ஒரு பதிலை இங்கே காண்போம்!
அமெரிக்க நாட்டுப் பெண்மணி ஒருவர் விவேகானந்தரைப் பார்த்து;" இறைவன் எல்லை கடந்தவர், அப்பாற்பட்டவர் என்கிறீர். ஆனால் அருவமாகிய பரம்பொருளுக்கு உங்கள் நாட்டில் உருவம் வைத்து வழிபடுகின்றார்களே எதற்காக" என்று வினவினார்.
விவேகானந்தர் அப்பெண்மணியின் வீட்டிலிருந்த ஒரு படத்தைக் காட்டி "இது யார்?" என்று கேட்டார்.
'என் தந்தையார்? '.
"வெறும் சட்டமும் கண்ணாடியும் அட்டையும் ஓவியமுமாக இருக்கின்ற இது உங்கள் தந்தையா?"
இது என் தந்தை அல்ல. ஆனால் என் தந்தையை நினைப்பூட்டுகின்ற அடையாளம்.
அதுபோலத்தான் எங்கள் நாட்டில் உள்ள விக்கிரகங்களும் இறைவனை நினைப்பூட்டுகின்ற அடையாளமாகத் திகழ்கின்றன என்று விளக்கம் தந்தார் விவேகானந்தர்.
குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க குளத்திற்குப் போனால், தெளிந்த நீரை மேலாக எடுத்து வருவதுதான் சிறந்தது. அதை விடுத்து, குளத்துக்குள் இறங்கி கலக்கினால் சேறு மேலே வந்துவிடும். அதுபோல பத்தியிலும் மிதமான நிலையே போதுமானது.
சமயத்தின் பொருட்டு யாரையும் ஏளனம் செய்யாதீர்கள். பக்தியில் உறுதியை கடைபிடியுங்கள் .மனம் ஒன்றி வழிபடுங்கள். கடவுளின் பூரண அருள் உங்களுக்குள் பூக்கும்.
-இந்திராணி தங்கவேல்