"வெற்றி என்பது ஒன்றே ஒன்றுதான். உங்கள் வாழ்வை உங்கள் வழியில் வாழ்வது."-- Christopher Morley.
வெற்றி பெறுவதற்கு தடையாக இருக்கிற ஒரே ஒரு பிரச்னை ஏனென்றால் நம்முடைய திறமை நம்முடைய வலிமை என்ன என்பது நமக்கே தெரியாமல் இருப்பதுதான். நமக்கு என்ன திறமை இருக்கிறது என்பதை அறியாமல் புகழ் வெளிச்சம் போட்டு காட்டும் மற்றவர்களிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டு ஆசைப்பட்டு அதேபோல் ஆகவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பதுதான் பலரின் வெற்றிக்கு பின்னடைவாக உள்ளது. இதற்கு சான்றாக ரியாலிட்டி ஷோஸ் எனப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கூறலாம்.
கார் ஷோரூம் ஒன்றில் தந்தையும் மகனும் வந்து அமர்ந்திருந்தனர். அந்த ஷோரூமில் உள்ள தொலைக் காட்சித்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
ஆஹா ஓஹோ என உச்கொட்டி மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்த தந்தை ஆர்வமற்று பார்த்துக் கொண்டிருந்த தனது மகனிடம் "இதோ பார் உன்னை விட குறைந்த திறமையுடைய அந்த பையன் நடுவர்களிடம் பாராட்டு வாங்குகிறான். நீயும் முயற்சி செய்தால் இதே போல் ஆகலாம்" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த சிறுவனோ அவர் சொல்வதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் எங்கோ பராக்கு பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கவனம் முழுக்க அந்த ஷோரூம் இல் வண்டியை பழுது பார்க்கும் மெக்கானிக் என்ன செய்கிறார் என்பதிலேயே இருந்தது. இந்த சிறுவன் எதிர்காலத்தில் என்னவாக விரும்புவான் தெரியுமா? நிச்சயமாக திரையில் பாடும் பாடகராக வரமாட்டான் என்பது மட்டும் உறுதி. ஏனெனில் அவனின் ஆர்வம் அதில் இல்லை என்பது அவனின் உடல் மொழியே காட்டியது. ஏன் அவன் திறமையான மெக்கானிக்கல் லைனில் வரலாம்.
பெரும்பாலான பெற்றோரின் பிரச்னையே இதுதான். தங்கள் பிள்ளைகளிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டு கொள்ளாமலேயே மாய உலகிற்குள் நடக்கும் விஷயங்களைக் கண்டு அதை நோக்கி தங்கள் பிள்ளைகளையும் தள்ளி வாழ்வில் வெறுப்பை உண்டு பண்ணுவார்கள். இதைத் தவிர்த்து அவர்கள் விரும்பிய துறையைத் தேர்ந்தெடுக்க ஆதரவு தரவேண்டும். தாங்கள் விரும்பிய பணியை செய்யும் பிள்ளைகளே பின்னாட்களில் சாதனையாளர்களாகவும் உயர்கிறார்கள். பெற்றோருக்கு பெருமை சேர்க்கின்றனர். வலுக் கட்டாயமாக திணிக்கப்படும் எதுவும் நிஜமான மகிழ்வைத் தராது.
"நண்பன்" என்றொரு திரைப்படத்தில் இந்தக் கருத்து அருமையாக வலியுறுத்தப்பட்டிருக்கும். படிக்க சொல்லி கட்டாயப்படுத்தும் தந்தையிடம் வேறொரு துறை மீதான விருப்பத்தை மகன் இப்படி சொல்வார். "நான் இதனால் நிறைய சம்பாதிக்காமல் போகலாம். ஆனால் இதை செய்யும் ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக இருப்பேன்" அந்தக் காட்சி அனைவரையும் ரசிக்க வைத்து சிந்திக்கவும் வைத்தது.
வெற்றிகரமான வாழ்க்கை என்பது மற்றவர்கள் அறிவுரை கேட்டு ஏதோ ஒன்றில் ஈடுபட்டு பணத்தைத் தள்ளும் மெஷின்களாக இருப்பதல்ல. நமக்குப் பிடித்த விஷயத்தை செய்து மனதை மகிழ்ச்சியாக வைத்து நம் வாழ்வை நாமே வாழ்வதுதான்.