
உண்மையான வார்த்தைகள் எப்போதும் அழகாய் இருப்பதில்லை. அழகான வார்த்தைகளோ எப்போதும் உண்மையாக இருப்பதில்லை. எளிமையாக சொல்ல வேண்டுமானால் நாம் அனைவருமே உடல் அழகை நோக்கிதான் ஈர்க்கப்படுகிறோம். அழகான வார்த்தைகளில்தான் மயங்கிப் போகிறோம்.
உண்மையான அன்பையும் அழகையும் மற்றவர்களிடம் காண முயல்வதில்லை. உண்மையான வார்த்தைகளை கண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. அலங்கார வார்த்தைகளுக்கு இருக்கும் மதிப்பு உண்மையான வார்த்தைகளுக்கு கிடைப்பதில்லை.
உண்மையான வார்த்தைகள் என்பது ஒரு விஷயத்தின் உண்மையான தன்மையை வெளிப்படுத்தும் தன்மைகொண்டது. அது எப்பொழுதும் அழகாக இருக்காது. சில நேரங்களில் கடினமானதாகவும், கசப்பானதாகவும் இருக்கும். ஒரு பொய்யான வார்த்தையை கூறும்போது அது அழகாகவும், இனிமையானதாகவும் தோன்றலாம்.
ஆனால் உண்மைக்கு மாறானதாக இருக்கும் என்பதை மறக்கக்கூடாது. ஆனால் உண்மையான சொற்கள் அழகிய சொற்களைவிட வலிமை வாய்ந்தது.
உண்மையான வார்த்தைகளுக்கு வலிமை அதிகம். சில வார்த்தைகள் நம்மை செதுக்கும். வேறு சில வார்த்தைகளோ நம்மை புண்படுத்தவும் செய்யும். சில வார்த்தைகள் வெல்லும்; சில கொல்லும். நேர்மையான வார்த்தைகள் சில நேரங்களில் நாம் கேட்க விரும்பும் வார்த்தைகளைப்போல் அழகாகவோ, இனிமையாகவோ இருக்காது. ஆனால் உண்மையான, நேர்மையான காலத்திற்கு ஏற்ற சொற்களை பேசுபவர்களுக்குத்தான் சமுதாயத்தில் மதிப்பிருக்கும்.
வார்த்தைகளை பலருக்கும் சரியாக கையாளத் தெரிவதில்லை. நாம் பேசும் வார்த்தைகள்தான் நம் குணத்தை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டவை. உண்மையான அக்கறை உள்ளவர்களிடமிருந்து வரும் வார்த்தைகள் கேட்பதற்கு சிறிது கசப்பாகவும், கண்டிப்பாகவும் இருந்தாலும் அதில் உள்ள உண்மைகள் நம்மை உயர்த்தும். என்றாவது ஒருநாள் நம்மை நன்றி சொல்ல வைக்கும். நமக்கு புத்தி புகட்டி, அறியாமையை தெளியவைக்கும். உண்மையான வார்த்தைகள்தான் நம்மை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல உதவும்.
எதையும் பேசுவதற்கு முன்பு இரண்டு முறையாவது யோசிக்க வேண்டும். அழகாக இல்லை என்பதற்காக உண்மையான வார்த்தைகளை பேசாமல் இருப்பதும், ஒதுங்கிப் போவதும் தவறு. உண்மையான அக்கறையுள்ள வார்த்தைகள் வாழ்வில் என்றும் வளம் சேர்க்கும். உண்மையான வார்த்தைகள் பேசுபவர்களிடம் மதிப்பும் மரியாதையும் ஏற்படுவதுடன் நம்பிக்கையும் பிறக்கும். உண்மையான அக்கறையுள்ள பேச்சு மற்றவர்களுடன் வலுவான தொடர்புகளை உருவாக்கும். நல்ல சமூகத்தை உருவாக்கி ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.