நம்புங்கள் நிச்சயம் நடக்கும்!

Motivation article
Motivation articleImage credit - pixabay
Published on

ம்பிக்கை. நிச்சயமாக இது ஒரு மந்திரச்சொல். இந்த மந்திரச்சொல்லை அடிக்கடி மனதிற்குள் பதித்து மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே உழைத்த பலரை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்த பூமிக்கு வந்துவிட்ட ஒவ்வொரு மனிதனும் முதலில் தன் தாயின் கைபிடித்து நடக்கிறான். ஒரு கட்டத்திற்கு பின்னர் நம்பிக்கையின் கையைப் பிடித்து நடக்கத் தொடங்குகிறான். ஒரு கையை இழந்தவர்கள் இரண்டு கைகளையும் இழந்தவர்கள் என பலரும் நம்பிக்கையை உறுதியாக மனதில் பதித்து சாதனைகளை செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்கும் என்று ஏங்கித் தவிப்பவர்கள் ஏராளம். இப்படி ஏங்கித் தவித்தால் போதுமா? நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் முழு நம்பிக்கையோடு செய்யப் பழக வேண்டும்.

மறுநாள் காலை நிச்சயம் எழுந்து விடுவோம் என்று நமக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில்தான் நாம் ஒவ்வொரு இரவும் நிம்மதியாய் தூங்கச் செல்லுகிறோம். வீட்டிற்கு நிச்சயமாய் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் நாம் தினம் தினம் வீட்டைவிட்டு புறப்படுகிறோம். ஆக நம் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயமும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்றால் அது மிகையாகாது.

நம்மில் பலருக்கு தங்கள் மீதே நம்பிக்கை இருப்பதில்லை. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல தோல்விகளுக்கு இந்த எண்ணமே காரணமாகிவிடுகிறது. நாம் முதலில் நம் மீது திடமான நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் நம் மனதில் தோன்றும். இந்த எண்ணம் தோன்றிவிட்டால் தொட்டதெல்லாம் வெற்றிதான். நம்மை நாம் நம்பாத போது தாழ்வு மனப்பான்மை நம் மனதில் வந்து சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொண்டு நம்முடைய செயல்களை முடக்கி விடுகிறது.

நம்பிக்கை என்பது சாதனை தொடர்பான விஷயம் மட்டுமல்ல. அது வாழ்க்கை தொடர்பானதும் கூட. நம் வாழ்க்கையில் அன்றாடம் தோன்றும் பிரச்சினைகளுக்கு மூலகாரணம் நாம் பிறரை முழுமையாக நம்பாததாகும். நம்முடைய பெற்றோர் நமக்கு நல்லதே செய்வார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு வேண்டும். நாம் நம்முடைய குழந்தைகளை நூறு சதவிகிதம் நம்ப வேண்டும். நம்முடைய மனைவி உன்னதமானவள் என்ற நம்பிக்கை ஒவ்வொரு ஆண்மகனுக்கும் இருக்க வேண்டும். நம் கணவன் சத்தியவான் என்று மனைவி நூறு சதவிகிதம் நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை எப்போது பொய்த்துப் போகத் தொடங்குகிறதோ அக்கணமே குடும்பத்தில் ஆயிரமாயிரம் பிரச்சினைகள் தோன்றத் தொடங்கிவிடுகிறது.

இதையும் படியுங்கள்:
ஒரு கதவு மூடினால் இரண்டு கதவுகள் திறக்கும் தெரியுமா?
Motivation article

நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ளவேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் நல்ல எண்ணங்களைக் கொண்ட மனிதர் களுடன் மட்டுமே பழக வேண்டும். அப்போதுதான் நமக்கும் அவர்களைப்போல வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். சிலர் எதற்கெடுத்தாலும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அவர்களை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும். புலம்பல்கள் அடுத்தவர்களைப் பற்றி குறை கூறுதல், பொறாமையோடு பேசுதல் போன்றவற்றைத் தவிர்த்து எப்போதும் பாஸிட்டிவ் விஷயங்களை மட்டுமே பேசப் பழகவேண்டும். தோல்விகளைக் கண்டு பயப்படவே கூடாது. தொடர்ந்து தோற்பவர்கள் ஒரு நாள் ஜெயித்துத்தான் ஆக வேண்டும். இந்த நியதியை யாராலும் மாற்ற முடியாது.

நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று நீங்கள் நம்பிக்கையோடு உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள். உறுதியாய் நம்புங்கள். நிச்சயம் நினைத்தது நடக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com