
நம்முடைய வாழ்வில் எப்பேற்பட்ட சூழ்நிலைகள் வந்தாலும், குழப்பங்கள் ஏற்பட்டாலும் நம் மீதும், நம்முடைய திறமையின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தால் போதும். எல்லா பிரச்னைகளையும் சுலபமாக கடந்து வந்து விடலாம். இதை தெளிவாகப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் ஒரு இளைஞன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சொந்தமாக வியாபாரம் செய்யவேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால், அவனிடம் வியாபாரம் தொடங்குவதற்கான போதிய பணமில்லை. அப்போது தான் அவனுக்கு ஒரு சில நாட்களுக்கு முன் தன்னுடைய தாத்தா பரிசாக கொடுத்த பழமை வாய்ந்த புத்தர் சிலை நினைவிற்கு வந்தது. அதை கொடுக்கும்போதே, ‘இந்த சிலை குறைந்தது ஐந்தாயிரம் டாலருக்காவது விற்பனையாகும்’ என்று தாத்தா கூறியிருந்தது அந்த இளைஞனுக்கு நினைவுக்கு வந்தது.
உடனே அந்த இளைஞன் தன்னுடைய போனில் அந்த சிலை விற்பனைக்கு உள்ளது என்று விளம்பரம் கொடுத்தான். அந்த விளம்பரத்தை கவனித்த பலபேர் அவனுக்கு போன் செய்து அந்த சிலையை வாங்கிக் கொள்வதாக கூறினார்கள். ஆனால், வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு, ‘இந்த சிலை போலியானது. இது ஐநூறு டாலர்தான் போகும்’ என்று சொல்லிவிட்டு சென்றனர். இதனால் அந்த இளைஞனுக்கு சந்தேகம் வந்தது. ‘ஒருவேளை இந்த சிலையை தாத்தா ஏமாந்து வாங்கியிருப்பாரோ? இந்த சிலை உண்மையிலேயே இவ்வளவு விலை போகாதோ?’ என்ற எண்ணம் தோன்றியது.
கடைசியாக ஒருவர் வந்து அந்த புத்தர் சிலையை 750 டாலருக்கு கேட்க, இளைஞனும் அந்த சிலையை விற்றுவிட்டான். ஒரு சில நாட்களுக்கு பிறகு ஏதோ ஒரு வேலையாக அந்த இளைஞன் பக்கத்து ஊருக்கு செல்கிறான். அங்கிருக்கும் ஒரு பழமையான பொருட்கள் விற்கும் கடைக்கு சென்ற இளைஞனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அவனுடைய புத்தர் சிலை அந்த கடையில் வைக்கப்பட்டிருந்தது. அதனுடைய விலை 7000 டாலர்கள் என்று போடப்பட்டிருந்தது.
உடனே அந்த சிலையை திருப்பி பார்க்கிறான். 'தனக்கு மட்டுமே தெரிந்த கீரல் அந்த சிலைக்கு அடியில் இருக்கிறதா?' என்று பார்த்தால், அந்த சிலையில் அந்த கீரல் இருக்கிறது. அது தன்னுடைய சிலைதான் என்பதை உறுதி செய்துவிட்டு கடைக்காரரிடம் போய் அனைத்தையும் சொல்லி கேட்கிறான்.
அதற்கு கடைக்காரர் சொல்கிறார், ‘இப்படிதான் ஒரு கும்பல் பழைய பொருட்களை எல்லாம் விலை போகாது என்று சொல்லி உரிமையாளர்களை ஏமாற்றி விலை குறைவாக வாங்கி விடுவதாக கூறினார். இதனால் எல்லோரும் ஏமாந்துபோய் விடுவதில்லை. ‘எவர் ஒருவர் தன்னுடைய பொருளின் தரத்தின் மீது நம்பிக்கையில்லாமல் சந்தேகப்படுகிறார்களோ? அவர்கள் மட்டுமே ஏமாந்துப்போகிறார்கள்’ என்று கூறினார்.
இந்தக் கதையில் சொன்னதுப்போல, அந்த புத்தர் சிலை என்பது நம்முடைய திறமைகள். அதன் மீது நம்பிக்கை வைக்காமல் அடுத்தவர்கள் நம் திறமைகளை குறைவாக பேசும்போது நம்பி நம் மீதும், நம்முடைய திறமையின் மீதும் சந்தேகப்படாமல் நம்பிக்கை வையுங்கள். நிச்சயமாக வாழ்வில் வெற்றியடைய முடியும். முயற்சித்துப் பாருங்கள்.