
இந்த உலகில் ஜெயித்தவர்கள், தோற்றவர்கள் என்று யாருமில்லை. அவரவருக்கு காலம் வரும்போது கட்டாயம் ஜெயிக்க முடியும். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையை பார்ப்போம்.
குமாரும், ராமுவும் நெருகிய நண்பர்கள். இரண்டு நண்பர்களும் வெகுநாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது குமாரின் மகளான செல்வி அவர்களுக்கு டீ போட்டு எடுத்து வந்துக்கொடுக்கிறாள்.
உடனே ராமு, ‘குமார்! உன்னுடைய பெண் காலேஜ்ஜில் கோல்ட் மெடல் வாங்கினாள் என்று சொன்னாயே? அது இந்த பெண்தானா?’ என்று கேட்டார். அதற்கு குமார் அலட்சியமாக, ‘இது என்னுடைய இரண்டாவது பெண். இவளால் எதற்குமே பிரயோஜனம் கிடையாது என்று மட்டம்தட்டி பேசிவிட்டு கோல்ட் மெடல் வாங்கியது என்னுடைய முதல் பெண்’ என்று பெருமையாக கூறினார்.
அப்போது திடீரென்று யாரோ கத்துவது போன்ற சத்தம் கேட்கிறது. என்வென்று அனைவரும் போய் பார்க்க, குமாரின் முதல் பெண் ஆற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறார். குமாருக்கும், ராமுவுக்கும் நீச்சல் தெரியாது. எனவே, என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்போது குமாரின் இரண்டாவது மகள் நீச்சல் அடித்து சென்று தனது அக்காவை காப்பாற்றினாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த குமார் அவமானத்தால் வெட்கி தலை குனிந்தார்.
இப்போது ராமு சொன்னார், ‘நீ எந்த பெண்ணை எதற்குமே உதவாது என்று சொல்லி இழிவாக பேசினாயோ அந்த பெண்தான் இன்று உன் செல்ல மகளின் உயிரை காப்பாற்றி இருக்கிறாள்’ என்று கூறினார்.
இப்போது குமார் தன்னுடைய இரண்டாவது மகளான செல்வியிடம் சென்று, ‘உனக்கு எப்படி நீச்சல் தெரியும்?' என்று கேட்டார். அதற்கு அந்த பெண், 'எனக்கு சின்ன வயதிலிருந்தே நீச்சல் தெரியும். யாருக்கும் தெரியாமல் இங்கே வந்து நீச்சல் அடிப்பேன். எனக்கு நீச்சல் போட்டியில் கலந்துக்கொண்டு ஜெயிக்கவேண்டும் என்பதே ஆசை’ என்று கூறினாள்.
இப்போது குமாரிடம் செல்வி சொன்னாள், ‘அப்பா! இந்த உலகத்தில் எதற்குமே உதவாதவர்கள் என்று யாரும் இல்லை. அவரவருக்கு ஒரு காலம் வரும்போது எல்லோருமே ஜெயிப்பார்கள்’ என்று கூறிவிட்டு சென்றாள்.
இந்தக் கதையில் சொன்னதுப்போல, அவரவர் காலம் வரும்போது நம்முடைய உழைப்பிற்கான பலன் கட்டாயம் கிடைக்கும். இதைப் புரிந்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.