
ஆசை என்பது எல்லா உயிரினங்களுக்கும் ஒரு உணர்வாக இருக்கும். ஆனால் அது மனிதனுக்கு மட்டும் எப்பொழுதுமே மேலோங்கி நிற்கும். சில சமயங்களில் ஆசை பேராசையாகவும் நினைப்பதை நம்மால் உணரமுடியும். ஆசைக்கும் பேராசைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
''ஆசை'' என்பது, தமக்கு எது தேவையோ அதனைக்கொண்டு வருதற்கான உணர்வாகும். பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவடையாமல், மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசைதான் ''பேராசை.
ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறாகும்.
அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசை கூட பேராசையாக அமைந்துவிடும். பயனற்றவை மீது வைக்கும் ஆசையே பேராசை எனப்படும். பொருளாதாரம் மிகவும் முக்கியமானது என்பதில் அய்யமில்லை. ஆனால்!, அதைவிட இன்றியமையாதவை உள்ளன.
பொருளாதாரத்திற்காக அந்த இன்றியமையாத ஒன்றை ஒருவன் புறக்கணித்துவிட்டு பொருளாதாரத்தின் பின்னால் சென்றால் அவனுக்குப் பொருளாதாரத்தில் பேராசை உள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.
ஒரு செயலில் ஈடுபடுவதால் ஒருவனுக்கு பணம் கிடைக்குமென்றால், அந்தப் பணத்திற்கு ஆசைப்படுவது பேராசை. தொகை சிறிதாக இருந்தாலும் அது பேராசைதான்.
சமூகத்தைப் பாதுகாக்கும் அவசியம் ஏற்படும்போது, அதில் பங்கு பெறாவிட்டால், சமுதாயத்தை பாதிக்கும் என்ற நிலையில் பணம் திரட்டச் சென்றால் அதுவும் பேராசைதான்.
குடும்பத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு உயர்தரமான சிகிச்சையளிக்க நம்மிடம் வசதி இருக்கும்போது, அரசாங்க மருத்துவமனையில் சேர்த்தால் அதுகூட பேராசைதான்.
சுருக்கமாகச் சொன்னால் பணத்தை விட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய செயல்களுடன் பணம் மோதும்போது நாம் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதே பேராசையாகும்.
ஒருவனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக பத்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதை அடைவதற்காக அவன் ஆசைப்பட்டால் தொகை பெரிதாக இருந்தாலும் அது பேராசையாகாது. இது நியாயமான ஆசைதான். கூனிக்குறுகி கும்பிடு போட்டால் பத்து ரூபாய் கிடைக்கும் என்றால் அதற்கு ஆசைப்படுவது பேராசையாகி விடும்.
அளவில்லாத ''பேராசை'' நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும். உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ''ஆசை'' காலப்போக்கில் நிறைவேறாமல் போகாது. எந்தப் பொருளின் மீது அதிக ஆசை இல்லையோ, அவற்றினால் துன்பம் ஏதும் இல்லை.