
பயன்படுத்தாத ஆற்றல் அதன் தகுதியை இழந்துகொண்டே இருக்கும். நமக்குள் இருக்கும் திறமையை, ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி வெளிப்படுத்தாமல் இருக்கும் திறமைகள் அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும். எனவே நமக்குள் இருக்கும் திறமையை பயன்படுத்த வேண்டும். நம்மால் முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை. அதுவே முடியாததையே சிறப்பாக செய்து முடித்தால் அது தன்னம்பிக்கை.
விழுந்த இலைகளுக்காக எந்த மரமும் வருந்துவதில்லை. மீண்டும் மீண்டும் தளிர் இலைகளைத் தந்து தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்கிறது. அதுபோல் எந்த தடைகள் வந்தாலும் நம்முடைய ஆற்றலைப் பயன்படுத்தி மேலெழுந்து கொண்டே இருக்க வேண்டும். எனவே நமக்குள் இருக்கும் திறமையை பயன்படுத்த வேண்டும்.
ஒருவர் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டுமானால் தன்னுடைய திறன்களை மேம்படுத்திக் கொள்வது அவசியம். புதிய தேடல் மனப்பான்மையும், புதிதாக படைக்கும் கற்பனை திறமும் கொண்டு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவைதான் கடினமான சூழ்நிலைகளில் பணிபுரிந்து வெற்றிபெற சரியான தகுதிகளாகும்.
பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும். மேற்கொண்ட செயலை செம்மையாக முடிக்கும் திறமை என்பது, ஒருவனது மன வலிமையே.
பிற வலிமைகள் எல்லாம் சிறந்த வலிமைகள் ஆகாது என்று திருக்குறளில் 'வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற' என்று கூறுகிறார்.
பயத்தையும், தயக்கத்தையும் தூக்கி எறிந்து நமக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொணர வேண்டும். தன் திறமையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒருவனின் பார்வை எதிரில் உள்ளவர்களுக்கு திமிராகத் தோன்றும் அதைக்கண்டு தயங்க வேண்டிய அவசியமில்லை.
தன்னம்பிக்கையில் நம்பிக்கை இழந்து முடியாது என்று முடங்கி விடாமல் நம்மிடம் உள்ள ஆற்றலையும் திறமையும் பயன்படுத்தி மேலேறி வருவதுதான் சிறந்தது. பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்துவிடும் என்பதை மறக்க வேண்டாம். நம்மிடம் உள்ள திறமைகளை மறைக்க வேண்டாம். அவை பயன் பாட்டிற்காக உருவாக்கப்பட்டன என்பதை மறக்க வேண்டாம்.
சிலருக்கு பேச்சுத்திறமை அதிகம் இருக்கும். அதை அவர்கள் சரியான இடத்தில், சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். கருத்தை வெளிப்படுத்துவதில் குரல் தொனி, உடல் மொழி, சொல்லும் விதம், நேரம் போன்றவை முக்கியமானவை. சலிப்பூட்டும் கருத்தைக் கூட நம்மிடம் உள்ள திறமையின் மூலம் மற்றவர்களை ஈர்க்கும்படி சொல்ல முடியும்.
நம்முடைய பேச்சு நம் ஆளுமையை வெளிக்காட்டும். சிந்திக்கும் திறன் தெளிவாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் திறமை குறைவாக இருந்தால் வெற்றி கிடைப்பது கடினமாக இருக்கும். நம் திறமையை பயன்படுத்தி முழு வீச்சில் செயல்பட வேண்டும்.
இல்லையெனில் பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து விடும். எதிராளியை வசப்படுத்தும் அளவிற்கு நம் திறமையை, ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். தேவையற்ற பயமும், பதற்றமும்தான் நம் திறமையை வெளிக் கொண்டுவர தயங்கும்.
நம் திறமையை வெளிப்படுத்தும் தருணங்களில் பலதரப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிவரும். அந்த விமர்சனங்களுக்கு பயந்து திறமையை வெளிக்கொணர தயங்கினால் அது தன் ஆற்றலை இழந்துகொண்டே வரும். அதனால் ஏற்படும் இழப்பு நமக்குத்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனவே எதிர்கொள்ளும் விமர்சனங்களை நேர்மறையாக எடுத்துக் கொண்டு அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும். இதுவே நம்மை முழுமையாக பிறருக்கு வெளிக்காட்டும் சாதனமாகும்.
வளர்த்துக்கொண்ட திறன்களை இழந்துவிடாமல் காப்போம்!