
எந்த ஒரு பிரச்னையையும் முழுதாக புரிந்துகொண்ட பின்னர், அதனைத் தீர்க்க வழி பார்க்க வேண்டும்.
பிரச்னை ஏன் ஏற்படுகிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். அது சம்பந்தமான தரவுகளைத் திரட்ட வேண்டும். அதன் மூலம் முதலில் பிரச்னை உள்ளதா இல்லையா என்பது தெரியவரும். பிரச்னை இருந்தால் அது சிறிய பிரச்னையா பெரிய பிரச்னையா என்று தெரியவரும். சிறிய பிரச்னையைப் பெரிதாக கருதும்போது தேவையற்ற பணவிரயம், நேரவிரயம், ஆற்றல் விரயம் போன்றவை உருவாகலாம்.
பெரிய பிரச்னை என்று எதுவும் இல்லை. பெரிய பிரச்னை என்பது பல சிறிய பிரச்னைகள் சேர்ந்தது - ஹென்றி ஃபோர்டு இதனைக் குறித்த ஒரு கதையைப் பார்ப்போம்.
அமெரிக்காவில், ஒரு பேருந்தில் டாம் என்ற ஓட்டுநர் இருந்தார். அவர் மிகவும் ஒல்லியான உடல்வாகு உடையவர். அமெரிக்காவில் ஓட்டுநர்தான், பயணச்சீட்டும் வழங்குவார். ஒரு ஆஜானுபாகுவான ஆள் பேருந்தில் ஏற ஆரம்பித்தார். அவர் ஏறிய பிறகு, அவரிடம் பேருந்து ஓட்டுநர் டாம், பயணச்சீட்டு வாங்கக்கேட்டார்.
'ஜான் ஒருபோதும் டிக்கெட் வாங்கமாட்டான். ஹி. ஹி ' என்றார் அந்த ஆசாமி.
இது தினமும் தொடர்ந்தது. ஒல்லி உடல்வாகு பேருந்து ஓட்டுநர் டாமுக்கு, ஆஜானுபாகுவான ஜானிடம் தைரியமாக பயணச்சீட்டு வாங்க சொல்லுவதற்கு பயமாக இருந்தது. ஒரு அடி அடித்தால், ஒரு டன் எடை என்று சூர்யா கூறுவதைப்போல், அடி இடியாக இருக்குமோ என்ற பயம் ஏற்பட்டது. உடனே, டாம் ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில், சேர்ந்தார். தினந்தோறும் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டார். இதற்கென பிரத்யேக உணவுகளை உண்ணத் தொடங்கினார். ஜானுடன் சண்டை போடுவதற்கு தன்னைத் தயார்படுத்திக்கொண்டார். இந்த பயிற்சிகள் பல மாதங்கள் சென்றன. சண்டைப் பயிற்சிகளுக்கு டாம் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தார். டாம் தினமும் டிக்கெட் வாங்க கேட்ட போதெல்லாம், ஜான் பின்வரும் வாக்கியத்தை மறுபடி மறுபடி உச்சரித்துக் கொண்டிருந்தார்.
'ஜான் ஒருபோதும் டிக்கெட் வாங்கமாட்டான். ஹி. ஹி ' என்றார் ஜான்.
டாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, ஜானை டாம் எதிர்கொள்ளும் நாள் வந்தது. அன்றும், ஜான் பேருந்தில் ஏறிய பிறகு, டாம் பயணச்சீட்டு வாங்கக்கேட்டார்.
'ஜான் ஒருபோதும் டிக்கெட் வாங்கமாட்டான். ஹி. ஹி' என்றார் ஜான்.
இப்போது, டாம் தான் கற்றுக்கொண்ட கலைகளையெல்லாம் பரிசோதிக்க நேரம் வந்துவிட்டதாக எண்ணினார். எழுந்து கொண்டு, தனது சட்டையின் கைப்பகுதியை மடித்து,
'ஏன் ஜான் டிக்கெட் வாங்கமாட்டான்?' என்றார் டாம்.
'ஜானிடம் பஸ் பாஸ் இருக்கு. அவன் ஏன் டிக்கெட் வாங்க வேண்டும்? ஹி. ஹி' என்றார் ஜான்.
ஜானிடம் இந்தக் கேள்வியை முதல் நாளே கேட்டிருந்தால், தான் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டாம் என்று தன்னை டாம் நொந்துகொண்டார்.
இங்கு பிரச்னையே இல்லாதபோது பிரச்னை இருப்பதாக டாம் எண்ணி தனது வாழ்க்கையைக் கடினமாக்கிக் கொண்டார்.
எந்த ஒரு பிரச்னையையும் முழுதாக புரிந்துகொண்ட பின்னரே, பிரச்னையைத் தீர்ப்பதற்கு இறங்குவோம்.