.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
நொடிக்கு நொடி வாழ் என்பதுதான் கிழக்கத்திய மரபு. சக்கரவர்த்திகள் ஆக இருந்த பலர் சோகமாக சுருண்டு விழுவதை நாம் பார்க்க முடியும். வெற்றி பெரும் ஆசையில் இனிய நொடிகளையும் மகிழ்ச்சியான அனுபவங்களையும் சிலர் இழந்து விடுகிறார்கள்.
பள்ளியில் இரு நண்பர்கள். ஒருவர் எப்போதும் முதல் மதிப்பெண் பெறுபவர். எல்லா பதக்கங்களையும் பெறுபவர். இன்னொருவர் கடைசி வரிசை. உல்லாசமாக ஊர்சு ற்றுவதில் கழிப்பவர். முதல் மாணவன் அரவிந்த் தன் நண்பன் அசோக்கிடம் நீ நினைத்தால் நன்றாக ஜொலிக்க முடியும். ஏன் முயற்சி செய்ய மறுக்கிறாய் என்றான்.
அதற்கு அவன் "இந்தப் பள்ளிப்படிப்பு மட்டுமே முக்கியமல்ல. நீ என்றாவது மரத்தடியில் அமர்ந்து நண்பர்களோடு பேசியிருக்காயா? அவர்களோடு விளையாடியிருக்கிறாயா? இவற்றையும் முக்கியம் என ஏன் நீ கருதுவதில்லை என்றான்.
பத்து ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் சந்தித்தபோது அஷோக் முன்னணி நிறுவனம் ஒன்றில் முக்கியப் பொறுப்பில் இருந்தான். அரவிந்த் மிகச் சாதாரண பணியில் இருந்தான். படிப்பும் பதக்கங்களும் வாழ்வின் ஒரு பகுதி. அரவிந்த் போல் முன் கூட்டியே திட்டமிடுபவர் களைக் காட்டிலும் அஷோக் போன்று அந்த நொடிக்கேற்ப வாழ்வின் சகல பரிணாமனங்களையும் அரவணைத்து வாழ்பவர்களே வெற்றிபெற முடியும்.
திட்டமிடுபவர்கள் எல்லோரிடமும் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வார்கள். சின்ன பின்னடைவிற்கே சிதறிப் போவார்கள். நம் மகிழ்ச்சியை அடுத்தவர்கள் தீர்மானிக்க விட்டு விடக்கூடாது. எந்த சலனமுமற்ற அணுகுமுறையும் வாழ்வதே நலம். நாம் நன்றியை கூட எதிர்பார்க்கக் கூடாது. நாம் ஒருவருக்கு உதவி செய்தால் அவர்கள் திரும்ப ஏதாவது நல்லது செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களே முதுகில் குத்துபவர்களாகவும் இருக்கலாம்.
சீசருக்கு மற்றவர்களுடைய கத்திக் காயங்களை விட அதிகம் காயப்படுத்தியது ப்ரூட்டசின் கத்திச்சுவடுதான். அவரை தன் மகன் போல் கருதினார் சீஸர். அவனுக்குப் பதவியை சீஸர் கொடுக்க கேசியஸ் என்பவன் ஆத்திரமடைந்து அவனை சீஸருக்கு எதிராக திருப்பினான். சீஸர் ஈமச்சடங்கின்போது பேசும் ஆன்டனி ப்ரூட்டஸ் ஏற்படுத்திய காயம் மற்ற காரணங்களைக் காட்டிலும் இரக்கமற்ற காயம் என்றார்.
என்னைப்பற்றி யாரும் குறைசொல்லக்கூடாது என்று எண்ணத் தொடங்கும்போதே நம் ஆனந்தம் ஆவியாகி விடுகிறது.அனைவரையும் திருப்திபடுத்த நினைப்பவன் தன் தனித்தன்மையை இழந்து விடுகிறான். நம் மகிழ்ச்சி எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதில்தான் அடங்கியுள்ளது.
சில சமயங்களில் வெளி உலகோடு எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கும்போது வாழ்க்கை மகிழ்ச்சி உடையதாக இருப்பதை உணரலாம். இன்று சாப்பிடும்போது கூட அலைபேசி செய்திராத மனிதரை காணமுடியாது. அலைபேசிக்கு பதில் அளித்தவாறே பதற்றத்துடன் சாப்பிடும்போது ருசித்து சாப்பிடுவதில்லை.
வாழ்க்கையில் நாம் அடுத்தவேளை சாப்பாடை கூட திட்டமிட முடியாது. எந்த உணவையும் எதிர்பார்க்காத மனிதனுக்கு எப்போதும் ருசியான உணவு கிடைக்கிறது. கை சொடக்கும் நேரமாக வாழ்க்கை முடியும்போது பெற்ற விருதுகளை நினைத்து நாம் பெருமை கொள்வதில்லை. நம்முடன் அன்பாக இருப்பவர்களே நமக்குத் தென்படுவார்கள். நமக்கு உதவியர்களின் முகங்களே நம் கண்முன் வலம் வரும். அப்படி நாம் எத்தனை பேருடைய வாழ்வின் இறுதிக்கட்டத்தில் வலம் வரப் போகிறோம் என்பதே நம் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுகோல்.