meta property="og:ttl" content="2419200" />
உங்களின் தனித்துவங்கள் எவை? உங்கள் ஒவ்வொரு உறவினர்களின் தனித்துவத்தையும் பட்டியலிடுங்கள். அடுத்தபடியாக உங்கள் நண்பர்களின் குணாதிசயங்களையும் கணக்கிடுங்கள்.
நம் ஒவ்வொருவரையும் வேறுபடுத்தும் வடிவங்கள் விதவிதமாக இருப்பதைப் பார்ப்போம். உங்களின் தனித்துவத்தை அடையாளம் கண்டறிந்தால் மற்றவரிடமும் மிகச் சுலபமாகத் தென்படும்.
தனித்துவம், ஆற்றலாக இருக்கலாம். உடல்வாகு, உணர்வு, புரிதல், எழுதுவது, சொல்லித் தருவது, உதவுவது, சமூக திறன்கள், தானம் செய்வது என ஏதோ ஒன்றிலாவது மெச்சக் கூடிய தனித்தன்மை தென்படும்.
உலகின் எல்லோருக்கும், எல்லா கலாச்சாரத்திற்கும் இது உண்டு. தனித்துவமென்று பலவற்றைச் சொல்லலாம். இவை எல்லாமே குழந்தைகளுக்கும் பொருந்தும்.
ஒரே இடத்தில் பத்து குழந்தைகளைப் பார்த்தால், ஒவ்வொரு குழந்தையும் ஏதாவது ஒன்றேனும் மற்றவர்களை விட நன்றாகச் செய்வார்கள். இது அவர்களிடம் இருக்கும் திறமை, ஆற்றல், குணாதிசயம் என ஏதோ ஒன்றால் தனித்து நிற்பார்கள்.
உதாரணமாக, எனக்குத் தெரிந்த ஒரு குழந்தை, தன்னிடம் எது வந்தாலும் இன்னொருவருடன் பகிராமல் இருக்காது.
தன்நலமற்ற நிலை அந்தப் பிஞ்சு வயசிலேயே. ஆம் நாம் எல்லோரும் பகிர்வதுண்டு, ஆனால் இப்படி அல்லவே! இப்படி ஒவ்வொரு குழந்தையிடமும் மெச்சக் கூடிய குணாதிசயங்கள் பல உண்டு, ஆனால் சிலவற்றை நாம் கவனிக்கத் தவறிவிடுவோம், அல்லது பார்த்தாலும் அதன் சிறப்பை உணரமாட்டோம்.
தனித்துவங்களைக் கண்டு கொண்டு, சிறப்புகளைப் பாராட்டி ஊக்கமளித்தால், அது குழந்தைகளுக்கு நல்ல மனப்பான்மை உருவாக்குவதற்கு அடிப்படையாகும். நம் கொள்கைகள் (கடைப்பிடிப்பது), நம் பர்ஸனாலிடீ, நம்முடைய தோற்றம், நாம் செய்யும் விதம் இவை எல்லாம் நாம் யார் என்பதை எடுத்துக் காட்டும்.
குழந்தைப் பருவத்திலேயே சில குழந்தைகளும் மற்றவர்கள் பிறகு வளர வளரவும், தனித்துவ அடையாளங்கள் கொள்வார்கள். தாமாக அடையாளம் காண்பது தவிர, குழந்தைகளுடன் இருப்பவர்களும் இந்தத் தனித்துவங்களை அடையாளம் கண்டு கொண்டு, ஊக்குவித்து, கற்றுக் கொடுத்து அவை நன்றாக அமைவதில் ஓரளவிற்கு உதவமுடியும்.
எல்லோரையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்துக் கணிக்காமல் நாம் ஒவ்வொரு குழந்தையின் தனித்துவங்களையும் கண்டறிந்து ஏற்றுக்கொள்வது முக்கியம்.