போட்டிகள் அதிகம் நிறைந்த இன்றைய உலகில் உங்கள் மதிப்பை வளர்த்துக் கொள்வது தனிப்பட்ட வளர்ச்சிக்கும், தொழில் வெற்றிக்கும் மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாளராக இருந்தாலும், ஒரு தொழிலதிபராக இருந்தாலும் அல்லது மிகவும் மதிப்பு அளிக்கக்கூடிய இடத்தில் இருந்தாலும், உங்களுடைய சுய முன்னேற்றத்தில் முதலீடு செய்வது முக்கியமானது. இந்தப் பதிவில் பிறர் முன்னே உங்கள் மதிப்பை அதிகரிக்கும் 5 வழிகள் பற்றி பார்க்கலாம்.
தொடர் கற்றல் மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல்: தொடர்ச்சியான கற்றல் மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்வது பிறர் முன்னிலையில் உங்கள் மதிப்பை அதிகரித்துக் காட்டும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இன்றைய நவீன உலகில் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பற்றி நாம் அறிந்துகொண்டு, திறன்களை வளர்த்துக் கொள்வது முக்கியம். இதே போல உங்கள் துறையில் தேவைப்படும் திறன்களைக் கண்டறிந்து அதுபற்றிய அறிவை வளர்த்துக்கொள்வதில் உங்கள் நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்யுங்கள்.
நெட்வொர்க்கை உருவாக்குங்கள்: நீங்கள் சிறப்பான நபராக இல்லை என்றாலும் உங்களைச்சுற்றி உள்ள நபர்கள் சிறப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இத்தகைய நபர்கள் மூலமாக உங்களது மதிப்பும் அதிகரிக்கும். ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட நபர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வழிகாட்டிகளுடன் நீங்களும் இருக்கும்போது, அவர்களுடைய அறிவைப்பெற்று பல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்க வழி வகுக்கும்.
நல்ல கம்யூனிகேஷன்: நல்ல பேச்சுத்திறன் எல்லா இடங்களிலும் உங்களுடைய மதிப்பை கணிசமாக உயர்த்தி காட்டும். எனவே பல மொழிகளைக் கற்றறிந்து, பிறரிடம் எப்படி பேச வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலமாக எல்லா இடங்களிலும் உங்களை பிறர் சிறப்பாகப் பார்ப்பார்கள். பிறருக்கு ஒரு விஷயத்தை எப்படி சொல்கிறீர்கள் என்பதைப் பயிற்சி செய்யுங்கள். திறமையான தொடர்பாளராக மாறுவதும் மூலம், உங்கள் தொழில்துறை உறவுகளை மேம்படுத்தி, செல்வாக்கை அதிகரிக்க முடியும்.
தொழில் தர்மத்தைக் கடைப்பிடியுங்கள்: எந்த வேலையாக இருந்தாலும் அதில் தொழில் தர்மத்தைக் கடைப்பிடிப்பது மூலமாக, முதலாளிகள் மற்றும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். தொழிலில் தொடர் அர்ப்பணிப்பு, நம்பகத்தன்மை மற்றும் நீங்கள் வேலையில் செயல்படும் விதத்தை சிறப்பாக வெளிப்படுத்துவதால், உங்களது அங்கீகாரம் உயரும். நல்ல பொறுப்புணர்வை வளர்த்துக் கொள்வது மூலமாக உங்கள் பணியில் உங்களால் சிறந்து விளங்க முடியும்.
வளர்ச்சி மனப்பான்மை: தனிப்பட்ட மற்றும் தொழில் வளர்ச்சிக்கு நம் மனநிலை என்றும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். நாம் எந்த வேலை செய்தாலும் அதில் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். சவால்களை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக ஏற்றுக் கொண்டு, தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, பின்னடைவுகளை எதிர்கொண்டால், நீங்கள் உங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கையும் நல்ல நிலையை நோக்கி நகரும். இதன் மூலமாகவும் பிறரிடம் உங்களது மதிப்பு அதிகரிக்கும்.