வாழ்க்கை என்கிற பூந்தோட்டத்தில் வெற்றிப் பூக்கள் மலர வேண்டும் என்று ஆசைப்படாதவர் யாரும் இருக்க முடியாது. ஆனால் வெற்றிப் பூக்களை பறிக்க சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் அவற்றின் மூலம் ஒருவர் தன் வாழ்வில் அடைய வேண்டிய லட்சியங்கள் விருப்பங்கள் கனவுகள் ஆகியவற்றை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
கற்பனை என்பது அற்புதமான சக்திகள் நிறைந்தது. அது படைப்பாற்றல் மற்றும் சுய முன்னேற்றத்திற்கான ஒரு சக்தி வாய்ந்த கருவி. மேலும் அது நினைத்ததை அடைய உதவும் ஒரு அற்புதமான கருவி. வெற்றி பெற நினைக்கும் ஒருவருக்கு முக்கியமான தேவை வளமான கற்பனை சக்தியே ஆகும். கற்பனையின் மூலம் புதுவிதமான ஆற்றலையும் சக்தியையும் ஒருவர் அடைய முடியும்.
ஒருவர் தன் வாழ்வில் எதை வேண்டுமானாலும் அடைய முடியும். அதற்கு அவர் மிகப்பெரிய கனவுகளை காணலாம். அதை அடைவதற்கு தேவையான ஆற்றல் நிறைந்த எதிர்காலத்தை கற்பனையில் காணலாம். அது விரும்பும் வாழ்க்கையை உருவாக்க உதவும் ஒரு வரைபடம் போல செயல்பட்டு வெற்றியைத் தேடித் தரும். கனவுகள் ஒரு வரைபடம் போல செயல்படும்.
கற்பனையைப் போன்று மற்றொரு அற்புதமான விஷயம் உள்ளுணர்வு. உள்ளுணர்வை எப்போதும் ஒருவர் நம்ப வேண்டும். லட்சியத்தை அடைய விரும்பும் பாதையை அடையாளம் காட்டவும் அதை வெற்றிகரமாக செய்து முடிக்கவும் உள்ளுணர்வு உதவும்.
உள்ளுணர்வின்படி ஒருவர் செயல்பட ஆரம்பிக்கும்போது அதிகமான உத்வேகத்துடன் செயல்பட முடியும். சில சமயங்களில் செய்யும் செயல்களில் தோல்விகள் வரலாம். அது இயல்பான ஒரு விஷயம். தோல்வியை எண்ணி மனம் கலங்காமல் அது வளர்ச்சி மற்றும் கற்றலுக்கான வாய்ப்பாக எண்ணிக் கொள்ள வேண்டும்.
ஒருவர் 24 மணி நேரத்தில் தினமும் 30 நிமிடமாவது தனக்காக ஒதுக்க வேண்டும் அதில் அந்த நேரத்தில் அவர் தனது ஆழ்மனதுடன் பேச வேண்டும். எண்ணங்கள் உணர்வுகள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் அது நுண்ணறிவை பெறவும் எதிர்காலத்தைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும் முக்கியமான முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது.
சவால்களை எதிர்கொள்ள தைரியமான மனதை பயிற்சி செய்ய வேண்டும். பின்னடைவுகள் ஏற்பட்டாலும் அவற்றையும் எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தடைகளை தாண்டி விருப்பத்துடன் செயல்படும்போது அது மிகப்பெரிய உத்வேகத்தை தரும். எப்போதும் மகிழ்ச்சியான மனதுடன் இருக்க வேண்டும்.
சிறிய வெற்றிகளுக்கு கூட மனதார மகிழ்ச்சி அடைய வேண்டும். அதை கொண்டாட வேண்டும். பெரிய சாதனைகள் செய்தது போல எண்ணிக் கொண்டாடும் போது அது மனதிற்கு மன நிறைவையும் உற்சாகத்தையும் தரும். இந்த இரண்டும் எப்போதும் வாழ்வில் மிகச் சிறப்பாக செயல்பட உதவும்.
நோக்கத்துடனும் லட்சியத்துடனும் வாழும்போது அது உங்களுக்கு மரியாதையையும் மதிப்பையும் பெற்றுத்தரும். அதே சமயம் நீங்களே உங்களை மதிப்பும் மரியாதையும் மிக்க மனிதராக எண்ணி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். பயனுள்ள ஒரு வாழ்க்கை வாழும்போது அது தனிப்பட்ட சந்தோஷத்தையும் வெற்றியையும் தேடித் தருவதுடன் சமுதாயத்திற்கும் பிறருக்கும் பயனுள்ளதாகவும் அமையும்.